Breaking News

காஷ்மீரில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம்

நிர்வாகி
0
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக இன்று சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே காஷ்மீரில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாக மக்கள் கலந்து கொண்டார்கள். ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரை ஆற்றிய தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தனது உரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்:

"நமது நாட்டில் எழிலார்ந்த பூமியான காஷ்மீரில் அரசு கடும் அடக்குமுறைகளை ஏவி வருகிறது. அம்மாநில மக்களின் நியாயமான, ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் கூட ராணுவத்தாலும், காவல்துறையினாலும் ஒடுக்கப்பட்டு வருகின்றன. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு சிறுவர்கள், இளைஞர்கள் பலர் கொல்லப்பட்டு வருவது காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் இழைத்துவரும் அக்கிரமத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு.

காஷ்மீர் மக்கள் மீது அம்மாநில முதல்வர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது போல் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றது. இவ்வருடம் ஜனவரி தொடங்கி ஜூலை வரை 13, 16 வயது சிறுவர்கள் உட்பட 20 வயதுக்கு கீழ் உள்ள 25க்கும் மேற்பட்ட அப்பாவி வாலிபர்கள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். "எல்லை தாண்டி வந்தவர்களை சுட்டுக் கொன்றோம்'' என்று சொல்லி பதக்கம் பெறுவதற்காக மூன்று அப்பாவி இளைஞர்களை பிடித்துச் சென்று எல்லையில் வைத்து அவர்களை சுட்டுக் கொன்ற கொடுமையையும் பாதுகாப்பு படையைச் சேர்ந்த நில சுயநலமிகள் அரங்கேற்றினர்.


சோபியானில் இளம் பெண்கள் கற்பழித்துக் கொலை, அப்பாவி இளைஞர்கள், சிறுவர்கள் மீது துப்பாக்கிச் சூடு என காஷ்மீரில் பாதுகாப்பு படைகளின் அக்கிரமம் எல்லைமீறிக் கொண்டிருக்கிறது.

ஜனநாயகத்தின் எழுச்சிமிக்க அடையாளமாக விளங்கும் நமது நாட்டின் ஒரு பகுதியான காஷ்மீரில் சென்ற வாரம் தொடர்ந்து 4 நாட்கள் எந்தவொரு செய்தித்தாளும் பிரசுரிக்க முடியாத நிலையை அரசு ஏற்படுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இதேபோல் சென்ற வெள்ளிக்கிழமை ஸ்ரீநகரில் உள்ள ஜாமா மஸ்ஜித் உள்பட ஏராளமான பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற இயலாத சூழலை அரசு ஏற்படுத்தியது, நமது அரசியல் சாசனச் சட்டம் தந்துள்ள வழிபாட்டு உரிமையை பறிக்கும் செயலாகும்.

"காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க புதுமையானத் தீர்வுகளை நாம் காண வேண்டும்'' என்று நமது பிரதமர் தனது காஷ்மீர் பயணத்தின் போது தெரிவித்தார். இது வெறும் வார்த்தைகளாக மட்டும் இருக்கக்கூடாது. காஷ்மீர் மக்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு செவிமடுக்க வேண்டும். அப்பாவி மக்களை சுட்டுக்கொன்ற படையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காஷ்மீரில் செயல்பாட்டில் உள்ள இராணுவ சிறப்பு அதிகார சட்டத்தை உடனே திரும்பப் பெறவேண்டும். அம்மாநிலத்தில் நிறுத்தப்பட்டுள்ள மிதமிஞ்சிய அரசுப் படைகளை வாபஸ் பெறவேண்டும். காஷ்மீர் மக்களின் வழிபாட்டுரிமையையும், அடிப்படை உரிமைகளையும் பறிக்கக்கூடாது.''- மேற்கண்டவாறு தமுமுக தலைவர் கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமுமுக பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ், துணை பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி, மாநிலச் செயலாளர்கள் ஏ.எஸ்.எம்.ஜுனைது, பி.எஸ்.ஹமீது. துணைச் செயலாளர் பி.எல்.எம்.யாசீன், ம.ம.க. பொருளாளர் ஹாரூண் ரஷீத், தமுமுக மாணவரணிச் செயலாளர் ஜெய்னுல் ஆபிதீன், தமுமுக தொண்டரணிச் செயலாளர் முஹம்மது ரபீக் மற்றும் வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags: தமுமுக

Share this