Breaking News

சென்னை மக்களின் தாகத்தை தீர்க்கும் வீராணம் ஏரி தூர்வாரப்படுமா?

நிர்வாகி
0
சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் விவசாயிகளின் உயிர் நாடியாகவும், சென்னை மக்களின் தாகத்தை தீர்த்து வரும் வீராணம் ஏரி தூர்ந்து நாளுக்கு நாள் நீரின் கொள்ளளவு குறைந்து வருகிறது. எனவே ஏரியை முழுமையாக தூர் வாரி,கரையை பலப்படுத்தும் திட்டத்தை அரசு செயல்படுத்தினால் மட்டுமே, எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு தடையின்றி நீர் வழங்கவும், சென் னைக்கு தடையின்றி குடிநீர் கொண்டு செல்லவும் முடியும்.


தமிழகத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்று வீராணம். வீர நாராயணன் என்ற அரசர், போர் வீரர்களை கொண்டு தொலை நோக்கு பார்வையுடன் ஏரியை வெட்டினார். அவரது பெயராலேயே இன்று வீராணம் ஏரி என்று அழைக்கப்படுகிறது. வீராணம் ஏரியின் பிரதான கரையின் நீளம் மட்டுமே 16 கி.மீ., அத்துடன் ஏரியின் முழுமட்ட அளவில் நீர்பிடிப்பு பரப்பு 35 சதுர கி.மீ., ஏரியின் அகலம் 5.6 கி.மீ., சுற்றுளவு 40 கி.மீ., பிரதான கரையின் அகலம் 24 அடி, எதிர்கரையின் நீளம் 8 கி.மீ., காவிரி கடைமடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் பகுதி விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும் வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,446 மில்லியன் கன அடி.

ஆனால் ஏரிக்கு நீர்வரத்து கால்வாய், நீர்வரத்து ஓடைகள் வழியாக மண் வந்து சேர்ந்ததால் ஏரியின் கொள்ளளவு படிப்படியாக குறைந்தது. 1966ல் கணக்குப்படி 1,102 மி., கன அடியாக இருந்தது. 1978ல் 981 மி., கன அடியாக குறைந் தது. 1982ல் அது மேலும் தூர்ந்து 931 மி., கன அடியானது. தற்போது மேலும் குறைந்திருக்க வேண்டும்.

காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர், அணைக்கரையில் உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணத்திற்கு தண்ணீர் வருகிறது. இவையல்லாமல் மழை காலங்களில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பெய்யும் மழை நீர் செங்கால் ஓடை, வண்ணான் குழி ஓடை, கருவாட்டு ஓடை உள்ளிட்ட காட்டாறுகள் வழியாக ஏரிக்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் கன அடி வரை கூடுதல் நீர் வருகிறது.

இதன் மூலம் சிதம்பரம், காட்டுமன்னர் கோவில் பகுதியில் 49,440 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. தற்போதைய நிலையில் ஏரி முழுமையாக மண்மேடிட்டும், மரங்கள், நெய்வேலி காட்டாமணக்கு செடி, கொடிகள் வளர்ந்தும் நீரின் கொள்ளளவு வெகுவாக குறைந்து விட்டதால், பாசனத் திற்கு முழுமையாக தண்ணீர் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதற்கிடையே கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டம் செயல்படுத் தப்பட்டதில் இருந்து, மேட்டூரில் இருந்து தண்ணீர் வீராணத் திற்கு கொண்டு வரப்பட்டு நிரப் பப்படுவதால் தொடர்ந்து சென் னைக்கு குடிநீர் கிடைக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளாக கோடையிலும் தொடர்ந்து தண்ணீர் இருந்து வருகிறது. ஆனால் வீராணத்தில் கொள்ள ளவு குறைந்து விட்டதால் விவசாய பாசனத்திற்கு அனைத்து காலத்திலும் தண்ணீர் வழங்க முடியாத நிலை உள்ளது.

சென்னை மக்களின் குடிநீர் தாகத்தை தீர்க்கும் வீராணம் ஏரியை ஆழப்படுத்த முயற்சிக் காமல் அரசு அலட்சியம் செய்து வருகிறது. இயற்கையில் நமக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பொக்கிஷமான இந்த ஏரியை சரியாக பயன்படுத்த தவறி வருகிறோம்.

சில கோடி ரூபாய் செலவு செய்து ஏரியை புதுப்பித்து கொண்டால் பல கோடி செலவு செய்து கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு செல்லும் அவசியம் இருந்திருக்காது. எனவே தற்போது முழுமையான கொள்ளளவிற்கு நீரை தேக்கி பயன்படுத்த முடியாமல் தூர்ந்துள்ள வீராணம் ஏரியை தூர் அகற்றி கொள்ளளவின் முழுமையான இலக்கான 1,465 மி., கன அடியாக உயர்த்த வேண்டும். அதற்கு ஏரியின் முழு நீர் மட்டத்தை 2 அடி உயர்த்தி கரையை பலப்படுத்த வேண்டும்.

காட்டுமன்னார் கோவில் அருகே முட்டத்தில் கடலூர் - நாகையை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 48 கோடி ரூபாயில் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பாலம் கட்டும் போதே பாலத்துடன் ஷட்டருடன் கூடிய தடுப்பணை அமைத்து கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலில் வீணாக கலக்கும் நீரை தேக்கி வைக்க முடியும்.


வீராணம் ஏரியில் நீர்மட்டம் குறையும் போது ஏரிக்கு கொண்டு செல்லலாம் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. கொள்ளிடக் கரை 108 கோடி ரூபாயில் உயர்த்தி பலப்படுத்தும் திட்டத்தில் வீராணம் ஏரியில் இருந்து 23.25 லட்சம் கன மீட்டர் மண் எடுக்கப்பட உள்ளது. இதனால் 0.3 டி.எம்.சி., தண்ணீர் உயருமென பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இப் பணி எப்போது தொடங்கப்படுமென தெரியவில்லை.

கிடப்பில் கிடக்கும் திட்டம்: கல்லணையில் இருந்து கீழணை வரை ஐந்து இடங்களில் கொள்ளிடம் ஆற்றில் தடுப் பணைகள் கட்டப்பட்டு நீரை தேக்கும் திட்டம் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டு கிடப்பில் உள்ளது. இத்திட்டம் செயல்படுத்தினால் வீராணம் ஏரியில் நீர் குறையும் போது நீரை கொண்டு கொள்ளளவு குறையாமல் தண்ணீர் ஏற்ற முடியும்.


நிவாரணம் தவிர்க்கலாம் : காவிரி டெல்டா கடைமடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் தாலுகாவில், கடந்த 2004ம் ஆண்டு முதல் தொடர்ந்து வெள்ளம், வறட்சி என மாறி, மாறி விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின் றனர். அ.தி.மு.க., - தி.மு.க., ஆட்சியிலும் கோடிக்கணக்கில் விவசாயிகளுக்கு நிவாரணமும், கடன் தள்ளுபடியும் செய்யப்பட்டு வருகிறது.


ஆனால், இந்த தொகையை கொண்டு வீராணம் ஏரியை முழுமையாக தூர்வாரி கொள்ளளவை உயர்த்தி, பாசன வாய்க்கால்களை தூர்வாரி கரையை பலப்படுத்தினால், எந்த காலத்திலும் இப்பகுதியில் வெள்ளச்சேதம் ஏற்படாது, விவசாயமும் பாதிக்காது.

Tags: வீராணம்

Share this