Breaking News

ரமலான் சிந்தனைகள்

நிர்வாகி
0
இருப்பதைக் கொண்டு வாழ்வோம்:

 வரவுக்கு மீறி செலவு செய்து, ஆடம்பரமாய் வாழும் நிலையால் பலரும் அவதிப்படுகின்றனர். ஒருமுறை, நபிகள்நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியர் ஒன்று கூடி, ""இறைத்தூதரே! தாங்கள் எங்களுக்குச் செலவுக்காக வழங்கும் பொருள் போதாது. இனிமேல், செலவுத் தொகையை அதிகமாக்கித் தர வேண்டும்,'' என்றனர். மனைவியரிடம் அண்ணலார் பேசவில்லை. வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள், பள்ளிவாசலிலேயே 28 நாட்கள் தங்கிவிட்டார்கள். ஒருநாள், இறைவனின் தூதுவரான ஜிப்ரீல் (அலை) அவர்கள், ஒரு வேத வசனத்துடன் இறங்கி வந்தார்கள்.""நபியே! உங்களுடைய மனைவிகளை நோக்கிக் கூறுங்கள். நீங்களெல்லாம் இந்த உலக வாழ்வையும் அதன் அலங்காரத்தையும் மட்டுமே விரும்புவோராயின், வாருங்கள்...உங்களின் வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து நல்ல முறையில் உங்களை விடுவித்துக் கொள்கிறேன். மேலும், நீங்கள் அல்லாஹ்வின் தூதரையும் (தன்னையும்) மறுமையின் வீட்டையும் விரும்புவோராயின், நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள நன்மையை நாடுவோர்க்கு மகத்தான கூலியைத் தயாராக்கி வைத்துள்ளான்,'' என்பதே அந்த வசனம். "அதாவது, ஆடம்பர வாழ்வுக்கு ஆசைப்பட்டு, நான் தருவதற்கு மேல் செலவழிக்க நினைப்பவர்கள் என்னை விட்டு பிரிந்து கொள்ளலாம்' என்ற ரீதியில் இந்த வசனம் அமைந்தது. நாயகம்(ஸல்) அவர்கள் வீட்டுக்குச் சென்றார்கள். தன் மனைவி ஆயிஷா அம்மையாரை அழைத்து, இந்த வசனத்தை ஓதிக்காட்டினார்கள். அந்த அம்மையார், அதை மற்றவர்களிடம் சொல்ல, அல்லாஹ் மூலம் விடுக்கப்பட்ட அந்த எச்சரிக்கையைக் கேட்டு அவர்கள் திடுக்கிட்டனர். எல்லோரும், தங்கள் செய்கைக்காக நபிகளாரிடம் மன்னிப்பு கேட்டனர். அடுத்தவர்கள் அணியும் நகை, ஆடை, உபயோகிக்கும் பொருட்களைப் பார்த்துவிட்டு, தனக்கும் அதுபோல் வேண்டும் என எண்ணாமல் இருப்பதைக் கொண்டு வாழ வேண்டும் என்பதை இன்றைய ரம்ஜான் சிந்தனையாகக் கொள்வோம்.


ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்:

 ரம்ஜான் மாதத்தில் நோன்பு நோற்கும் கட்டாயக் கடமையைச் செய்து வருகிறோம். நோன்பு நோற்பதின் நோக்கமே, பசியின் கொடுமையை உணர்ந்து கொள்ளத்தான். பசித்திருப்பவர் ஒருபுறம், நன்றாகப் புசித்திருப்பவர் ஒருபுறம் என சமுதாயம் இரு பிரிவாக இருக்கிறது. பசியின் கொடுமையை உணரத்தான் பகல் முழுவதும் ஏதும் சாப்பிடாமல் நோன்பு நோற்கிறோம். இதனால் தான், ரம்ஜான் மாதத்தில் மிக அதிகமாக தானம் செய்ய வலியுறுத்தப்படுகிறது. தானம் செய்வதன் மூலம் ஏழைகளின் பசி தீர்கிறது. ஏதுமில்லாத ஏழை கூட, ஒரு டம்ளர் தண்ணீராவது, தவித்து வந்தவர்க்கு தானம் செய்ய வேண்டும். அத்துடன் பல நற்செயல்களையும் செய்ய வேண்டும்.குழந்தைகளுக்கு மார்க்கக் கல்வியைப் போதிக்க வேண்டும். நன்மையான வார்த்தைகளை அவர்களிடம் பேச வேண்டும். உற்றார் உறவினர்களுடன் சச்சரவு கூடாது. அவர்களுடன் இணைந்து வாழ வேண்டும். பிறருடைய பாரத்தையும் நாமே சுமக்க வேண்டும். அதாவது, ஒரு ஏழைக்குடும்பத்தையாவது நாம் ஏற்றுக் கொண்டு, அவர்களுக்குரிய தேவையை நிறைவு செய்ய வேண்டும். அனாதைகளுக்கு உதவி செய்ய வேண்டும். விருந்தினர்களை முகம் மலர உபசரிக்க வேண்டும்.பெற்றோரை வேதனை செய்பவனை பார்த்துக் கொண்டிருக்கும் இறைவன், "நீ எத்தனை வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டாலும், உன் பாவங்களை மன்னிக்கமாட்டேன்,' என்று சொல்லியுள்ளதை நினைவில் கொண்டு, பெற்றவர்களுக்கு உரிய மரியாதை செய்ய வேண்டும்.""அல்லாஹ் பரிசுத்தமானவன். பரிசுத்தத்தையே விரும்புகிறான், அல்லாஹ் மணமுள்ளவன். நறுமணத்தை விரும்புகிறான். எனவே, உங்கள் இல்லங்களை பரிசுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்,'' என்ற குர்ஆன் வசனத்தை நினைவில் கொண்டு, வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.இப்படிப்பட்ட நல்ல சிந்தனைகளுடன் நோன்பை மகிழ்ச்சியுடன் நோற்போம்.

நேர்மையாக வாழ்வோம்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகுந்த நேர்மையாளர். ஒருமுறை,அவர்கள் மதீனா நகருக்கு வெளியே கூடாரம் கட்டி தங்கியிருந்த வியாபாரிகளிடம் சென்றார்கள். அந்த வியாபாரிகள் இளைப்பாறிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த சிவப்பு நிற ஒட்டகத்தை அண்ணலாருக்குப் பிடித்து விட்டது. அதை வாங்க எண்ணி, அதன் விலையைக் கேட்டார்கள். அவர்கள் விலையைச் சொன்னதும், அதன் மூக்கணாங்கயிற்றைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

"இவர் என்ன பணம் தராமல் செல்கிறாரே!

 இவர் யார் என்பதைக் கூட நாம் விசாரிக்கவில்லையே,'' என்று வியாபாரிகள் பேசிக்கொண்டிருந்த போது, அவர்களுடன் வந்த ஒரு பெண்மணி, ""கவலையை விடுங்கள்! அந்த முகம் எவ்வளவு பிரகாசமாக இருக்கிறது தெரியுமா? இப்படிப்பட்ட ஒருவரை இதற்கு முன் நாம் பார்த்ததே இல்லை. இத்தகைய களங்கமற்ற முகத்தை உடையவர் நம்மை ஏமாற்ற மாட்டார். பணமோ அல்லது ஒட்டகத்தின் விலைக்கு ஈடான பொருளோ நிச்சயம் வந்து விடும்,'' என்றார். அன்று மாலையே, அந்த ஒட்டகத்தின் விலைக்கு ஈடான பேரீச்சம் பழங்களையும், பிற உணவு வகைகளையும் நாயகம்(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

அண்ணலாருடன் பங்குதாரராக இருந்த சாயிப் என்ற வர்த்தகர் அவரைப் பற்றிச் சொல்லும் போது, "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், என்னோடு வர்த்தகத்தில் பங்காளியாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் அதில் நடந்து கொண்ட முறை மிகவும் உன்னதமாகவும், குறைசொல்ல இடமற்றதாகவும் இருந்தது,'' என்றார். நேர்மையுடன் வாழ்ந்து பழக வேண்டும் என்பதே இன்றைய ரம்ஜான் சிந்தனை.


பெற்றவர்களிடம் கனிவுடன் நடப்போம்:

"இந்த உலகில் நான் எத்தனை சோதனைகளை அனுபவிக்கிறேன். யா அல்லாஹ்! இதில் இருந்து எனக்கு விடுதலை கிடையாதா?' என்று கதறிக் கொண்டிருப்பவர்களில் பெரும்பகுதியினரின் வாழ்க்கை வரலாற்றை அலசினால், அவர்கள் பெற்றவர் களைக் கவனிக்காதவர்களாகத் தான் இருப்பார்கள். இவர்களைப் பற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறும் போது, ""தாய் தந்தையர்க்கு துன்பம் செய்வதைத் தவிர மற்ற எல்லா பாவங்களுக்கும் அல்லாஹ் மன்னிப்பளிக்கின்றான். பெற்றோர்களுக்கு துன்பம் செய்தவனுக்கு மரணத்திற்கு முன் தண்டனை வழங்கி விடுகின்றான்,'' என்கிறார்கள். குர்ஆனில் அல்லாஹ், "தாய் தந்தையரிடம் கருணையோடும், கனிவோடும் பழகுங்கள். அவர்கள் தான் உங்களை அறியாப்பருவத்தில் வளர்த்துப் போஷித்தவர்கள்,'' என்று அழகாகச் சொல்கிறார்.

ஒருமுறை நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ""அண்ணலாரே! பாவம் ஒன்றைச் செய்து விட்டேன். அதில் இருந்து மீள வழியிருக்கிறதா?'' என்றார். அண்ணலார் அவரிடம், "உமக்கு தாய் இருக்கிறாரா?'' என்றதும், "இல்லை'' என பதிலளித்தார் வந்தவர்.

"சிற்றன்னை இருக்கிறாரா?'' என்றதும், "ஆம்' என்றார்.

"அப்படியானால் உமது சிற்றன்னைக்கு சேவை செய்யும்,'' என அவர்கள் கூறினார்கள்.

"தாயின் காலடியிலேயே சொர்க்கம் இருக்கிறது' என்று அவர்கள் அருமையாகச் சொன்னார்கள்.

பெற்றவர்களுக்கு சேவை செய்வது ஒவ்வொருவரின் கடமை என்பதே இன்றைய ரம்ஜான் சிந்தனை.


தேவையற்ற பேச்சு வேண்டாமே!:

ரம்ஜானின் சிறப்பே தொழுகையை அதிகப்படுத்துவதுதான். இந்த இனிய மாதத்தில், பள்ளிவாசலின் சிறப்பையும், அங்கே நடந்து கொள்ள வேண்டிய விதம் பற்றியும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்வதைக் கேளுங்கள். ஒருமுறை அவர்கள் வானுலகம் சென்றிருந்த போது, அங்கே சிலர் பன்றிக்கறியை தின்று கொண்டிருந்தனர். ""இவர்கள் யார்?'' எனக் கேட்டார்கள் நாயகம் (ஸல்) அவர்கள். அதற்கு ஜிப்ரில்(அலை) அவர்கள், ""இவர்கள் பள்ளிவாசலில் அமர்ந்து ஊர்வம்பு அளந்து கொண்டிருந்தவர்கள்,'' என்று பதிலளித்தார்கள்.

பள்ளிவாசலுக்குள் உலக விஷயங்கள் பற்றியோ அல்லது வேறு காரியங்கள் குறித்தோ பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நெருப்பை மிதித்தது போன்ற உணர்வை அடைவார்கள். பள்ளிவாசலை விட்டு உடனே வெளியேறி, பேச வேண்டியதை வெளியில் வைத்து பேசிவிட்டு, மீண்டும் பள்ளிவாசலுக்குள் நுழைவார்கள். இதிலிருந்து, இறைவழிபாட்டால் நன்மைகளைச் சுமந்து செல்வதற்காக பள்ளிவாசல் வருபவர்கள் வீண்பேச்சுகளின் மூலம் பாவ மூட்டையை சுமந்து கொண்டு செல்கிறார்கள் என்பதை அவர்கள் உணர வைக்கிறார்கள். அது மட்டுமல்ல, ஏதாவது ஒரு செயல் கவலை தருமானால், அவர்கள் உடனே தொழுகைக்கு சென்று விடுவார்கள்.

இதுபற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மேலும் சொல்வதாவது:

* எமது உம்மத்தவர்களில் அல்லாஹ்வுக்குப் பயந்தவர்கள் பள்ளிவாசல்களில் தங்கியிருப்பார்கள்.

* ஒரு காடைக்குருவி போன்ற சின்னஞ்சிறிய பள்ளிவாசலைக் கட்டுபவருக்காக, சொர்க்கத்தில் அல்லாஹ் ஒரு மாளிகையை எழுப்புகிறான்.

* பாங்கொலி கேட்டு தொழுகைக்கு வராதவர் அநியாயமும், இணை வைத்தலும், வஞ்சகத்தன்மையும் உடையவர் ஆகிறார். பள்ளிவாசலுக்கு செல்லும்போது வீண்பேச்சு வேண்டாம் என்பது இன்றைய ரம்ஜான் சிந்தனையாக அமையட்டும்.

எதையெல்லாம் சிந்திக்க வேண்டும்?: ரம்ஜான் மாதம் இன்று பிறந்துள்ளது. இந்த இனிய நாளில், ஒரு மனிதன் தினமும் என்னென்ன சிந்திக்க வேண்டும் என்பது பற்றிச் சொல்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். இதுவே இன்றைய ரம்ஜான் சிந்தனையாக அமையட்டும்.

* மனிதர்கள் செய்த உதவியைச் சிந்திப்பதை விட இறைவன் செய்த உதவியை சிந்தனை செய்யுங்கள். நீங்கள் செய்த நன்மைகளைப் பற்றி சிந்திப்பதை விட, செய்த பாவங்கள் பற்றிச் சிந்தியுங்கள். நீங்கள் உயிருடன் வாழப்போவதைச் சிந்திப்பதைவிட, வருகின்ற மரணத்தைப் பற்றிச் சிந்தனை செய்யுங்கள்.

* மற்றவர்களின் குற்றங்களை நோட்டம் இடுவதை விட, உங்களின் குற்றங்களை நோட்டமிடுங்கள். உப்பை நீர் கரைப்பது போன்று, நற்குணம் உங்கள் பாவங்களைக் கரைத்துவிடும். கள்ளின் மண்டி தேனைக் கெடுத்துவிடுவது போன்று, துர்க்குணம் வணக்கங்களைக் கெடுத்துவிடும். உன் வாயிலாக இறைவன் ஒரு மனிதனுக்கு நேர்வழி காட்டுவது இவ்வுலகத்தையும், இதிலுள்ள யாவற்றையும் விட உனக்கு நன்மை பயப்பதாகும்.

* எவர் அண்டை வீட்டாரைத் துன்புறுத்து கின்றாரோ அவர் என்னைத் துன்புறுத்தியவராவார். அன்பு செலுத்தாதவன் அன்பு செலுத்தப் படுவதற்கு அருகதையில்லாதவன்.

* தர்மம் செய்ய இயலாதவன் ஒரு நற்செயல் செய்வானாக அல்லது ஒரு கெட்ட செயலில் இருந்து விலகிக் கொள்வானாக. அதுவே அவனது ஈகை.

* உங்களை நம்பி ஒருவன் ஒரு செய்தியைச் சொன்னால், அதை அடைக்கலப் பொருள் போல பாதுகாத்து வையுங்கள்.

* தன் பிள்ளைகளைப் பிறர் நல்லவிதமாக நடத்த வேண்டும் என்று விரும்புவர், அனாதைப் பிள்ளைகளை நல்லவிதமாக நடத்த வேண்டும்.

* மனிதன் எதைச் செய்கிறானோ அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்பதை தான் இறைவன் கவனிக்கிறான்.

இந்த சிந்தனை மொழிகளை ரம்ஜான் மாதத்தில் மட்டுமில்லாமல், தினமும் படியுங்கள். உங்களுக்குள் நற்குணம் கொடி கட்டி வளரும்.

Tags: இஸ்லாம் ரமலான்

Share this