Breaking News

இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு... ஷரியா முதலீடுகள்

நிர்வாகி
0
(நாணயம் விகடன் (ஆகஸ்ட் 15, 2010) இதழில் திரு.சொக்கலிங்கம் பழனியப்பன். டைரக்டர் ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் அவர்கள் இஸ்லாமிய பங்கு முதலீடுகள் குறித்து எழுதிய கட்டுரையை நமது இணையத்தள வாசகர்களுக்கு நன்றியுடன் அளிக்கின்றோம்)


இஸ்லாம் மதச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செய்யப்படும் பங்கு சார்ந்த முதலீடுகள் உலகெங்கிலும் அதிகமாகி வருகிறது. ஷரியாவுக்கு உட்பட்டு முதலீடு செய்ய விரும்பும் இஸ்லாமிய முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டிலும் மற்ற பிற மாநிலங்களிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.

ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடு என்றால் என்ன, அவ்வகையான முதலீடுகள் இந்தியாவில் என்னென்ன உள்ளன என்பதைப் பற்றி சற்று விரிவாக எடுத்துச் சொல்லவே இந்தக் கட்டுரை. முதலில் ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகள் என்றால் என்ன என்பதை சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

ஷரியா முதலீடு…?

ஷரியா என்பது இஸ்லாமியச் சட்டமாகும். இந்தச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செய்யப்படும் முதலீடு, ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகள் என்று கூறப்படுகிறது.

வேகமாக வளர்ந்து வரும் துறை!

இன்றைய தேதியில் உலக அளவில் அதிவேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஷரியா முதலீட்டுத் துறையும் ஒன்று. நமது கேரள அரசாங்கம் சென்ற ஆண்டு ரூ.1,000 கோடி அளவில் இஸ்லாமிய வங்கி ஒன்றை ஆரம்பித்து, அடிப்படைக் கட்டுமானத் துறைக்கு உபயோ கிக்கத் திட்டமிட்டது. தற்போது நீதிமன்றம் அதற்குத் தடை உத்தரவு கொடுத்துள்ளது என்றாலும், இந்த வங்கி தொடங்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிமாக உள்ளன.

லண்டனைச் சார்ந்த எஃப்.டி.எஸ்.இ. நிறுவனம் இஸ்லாமிய முதலீடுகள் ஆண்டுக்கு 15 – 20% வளர்ந்து வருவதாகக் கூறுகிறது. பங்கு சார்ந்த முதலீடுகள் 2010-ல் 53 பில்லியன் டாலருக்கு மேலாக (கிட்டத்தட்ட ரூபாய் இரண்டரை லட்சம் கோடிக்கு மேல்) சென்றுவிடும் என்று கூறுகிறது. மொத்தத்தில் இது ஒரு வளரும் துறை.

உலகத்தில் உள்ள அனைத்துப் பெரிய நிதி நிறுவனங்களும் இந்தத் துறையில் இருக்கும் தொழில் வாய்ப்புக்களைக் கருதி இதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளன. அதே போல் சட்ட நிறுவனங்களுக்கும் இந்த முதலீடுகளினால் நல்ல வாய்ப்பு. உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகளில் ஷரியா குறியீடுகள் பெரும்பாலும் வந்துவிட்டன. அதேபோல் சில இ.டி.எஃப். திட்டங்களும் செயல்பட ஆரம்பித்துவிட்டன.

ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகள்…!

ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகள் எவை என்று கேட்டால், ஷரியா சட்டமானது, குறிப்பிட்ட வட்டிக்குக் கடன் கொடுப்பதையோ அல்லது வாங்குவதையோ ஹராம் (தடை செய்யப்பட்டது) என்று கூறுகிறது. ஆகவே ஃபிக்ஸட் டெபாஸிட் போன்ற கடன் திட்டங்கள் ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகள் ஆகாது. பன்றிக்கறி, மதுபானங்கள், சூதாட்டம், நிதித்துறை, புகையிலை போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் முதலீடு செய்வது ஹராம் ஆகும்.

இஸ்லாம் மதத்தைச் சார்ந்த முதலீட்டாளர்கள், தாங்கள் பங்குச் சந்தையில் அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் செய்யும் முதலீடுகள் சரியானதுதானா என்று தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். தங்களின் மதச்சட்டம் அறிவுறுத்துகிறபடிதான் தாங்கள் நடந்து கொள்கி றோமா என்கிற கேள்வியும் அவர்களின் மனதில் எழுந்திருக்கிறது. இதனால் சமீபகாலமாக ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகளில் முதலீடு செய்ய விருப்பமுள் ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் இந்த முறை முதலீட்டைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமும் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

நிஃப்டி ஷரியா!

நமது தேசியப் பங்குச்சந்தை இரண்டு ஷரியா குறியீடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. நிஃப்டி ஷரியா மற்றும் சி.என்.எக்ஸ். 500 ஷரியா என்பதே அந்த இரண்டு திட்டங்கள். இவைகள் முறையே நிஃப்டி 50 மற்றும் நிஃப்டி 500 குறியீடுகளில் இருந்து ஃபில்டர் செய்தவையாகும். இந்த ஃபில்டர் எவரால் எவ்வாறு செய்யப்படுகிறது?

தேசியப் பங்குச்சந்தையில் உள்ள பல குறியீடுகளை, தேசியப் பங்குச்சந்தை, எஸ் அண்டு பி (ஸ்டாண்டர்ட் அண்டு புவர்ஸ்) நிறுவனத்தின் கூட்டுடன் நிர்வகித்து வருகிறது. அவ்வாறே ஷரியா குறியீடுகளையும் நிர்வகித்து வருகிறது. எஸ் அண்டு பி நிறுவனம் ஷரியா குறியீடுகளுக்காக ‘ரேட்டிங்ஸ் இன்டெலிஜென்ஸ் பார்ட்னர்ஸ்’ (ஆர்.ஐ.) என்ற லண்டன்/குவைத் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துடன் கைகோத்துள்ளது. இந்நிறுவனத்துக்கு லண்டன், குவைத் மற்றும் பெங்களூருவில் அலுவலகங்கள் உள்ளன. இந்த ஆர்.ஐ. நிறுவனம் நிறைய இஸ்லாமிய ஆராய்ச்சியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளதுடன், ஷரியா மேற்பார்வை வாரியத்துடனும் கைகோத்து வேலை செய்கிறது. இந்த ஷரியா வாரியத்தில் சவுதி அரேபியா, கனடா, சிரியா போன்ற நாடுகளில் இருந்து கல்விமான்கள் இடம் பெற்றுள்ளனர்.

கடைப்பிடிக்கும் விதிமுறைகள்!

ஷரியா குறியீட்டின் கீழ்வரும் நிறுவனங்கள் தொடர்ந்து கண்கானிக்கப்படுகின்றன. தேவையின் அடிப்படையில் இக்குறி யீட்டின் கீழ் உள்ள நிறுவனங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன. இக்குறியீட்டில் இடம் பெறும் நிறுவனங்கள் கீழ்கண்ட ஃபில்டர்களைத் தாண்டி இடம் பெற்றுள்ளன.

1. துறை சார்ந்த ஃபில்டர்கள்: பன்றிக்கறி, மதுபானங்கள், சூதாட்டம், நிதித்துறை, புகையிலை போன்ற துறைகள் மற்றும் வேறு சில துறைகளில் ஈடுபட்டி ருக்கக்கூடாது.

2. அதிகக் கடன் வாங்கியுள்ள நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யக்கூடாது. ஒரு காலத்தில் கடன் வாங்கியுள்ள எந்த நிறுவனப் பங்குகளிலும் முதலீடு செய்யக்கூடாது என்று கருதியவர்களும் உண்டு. ஆனால் இன்றைய நவீன பொருளாதாரத்தில் அவ்வளவு கடினமான பாதையை எடுத்தால், முதலீடு செய்யக் கிடைக்கும் பங்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிடும். ஆகவே அது போன்ற கருத்துக்களில் இருந்து சிறிது மாறி, இன்றைய தினத்தில், நிறுவனம் வாங்கியிருக்கும் கடன் அதன் பங்கின் மார்க்கெட் மதிப்புடன் ஒப்பிடும்போது 33%-க்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்ற ஃபில்டரை கடைப் பிடிக்கின்றனர்.

3. தொழிலில் வர வேண்டிய பணம் (Accounts Receivable) மார்க்கெட் மதிப்புடன் ஒப்பிடும்போது 49%-க்கு குறைவாக இருக்க வேண்டும்.

4. நிறுவனம் தனது கையில் வைத்திருக்கும் பணம் மற்றும் வட்டி தரும் உபகரணங்கள், மார்க்கெட் மதிப்புடன் ஒப்பிடும்போது 33% குறைவாக இருக்க வேண்டும்.

5. ஷரியாவுக்கு உட்படாத வட்டி அல்லாத பிற வழிகளில் இருந்து வரும் வருமானம், மொத்த வருமானத்துடன் ஒப்பிடும்போது 5%-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

6. ஷரியாவுக்கு உட்படாத முதலீடுகளினால் வரும் வருமானத்தை சுத்தப்படுத்துவதற்காக, முதலீட்டாளர் களுக்கு சுத்தப்படுத்த வேண்டிய விகிதத்தையும் இந்தக் குறியீடு தெரிவிக்கும்.

ஷரியா இ.டி.எஃப்.!

நம் இஸ்லாமிய முதலீட்டாளர்களுக்கு ஏற்ற இந்தியாவில் உள்ள ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகள் எவை என்று இப்போது பார்ப்போம்.

பெஞ்ச்மார்க் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஷரியா பீஸ் (Shariah BeES) என்ற இ.டி.எஃப்-ஐ நடத்தி வருகிறது. மார்ச் 2009-ல் துவங்கப்பட்ட இந்த இ.டி.எஃப், இந்தியாவின் முதல் ஷரியாவுக்கு உட்பட்ட இ.டி.எஃப். ஆகும். இது நிஃப்டி ஷரியா குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. இதன் விலை நிஃப்டி ஷரியா குறியீட்டின் மதிப்பில் 1/10 ஆக இருக்கும். இந்த இ.டி.எஃப். நிஃப்டி ஷரியா குறியீட்டில் இடம் பெற்றுள்ள பங்குகளில் அதே அளவில் முதலீடு செய்யும். தற்போது இதன் விலை ரூ.127 ஆகும். இந்த ஃபண்ட் நிர்வகிக்கும் தொகை ரூ1.24 கோடியாகும். கடந்த ஓராண்டில் இந்த இ.டி.எஃப். 14.6% வருவாயைத் தந்துள்ளது. இதை டீமேட் கணக்கு மூலம்தான் வாங்க முடியும்.

ஷரியா மியூச்சுவல் ஃபண்ட்!

டாரஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் டாரஸ் எத்திக்கல் ஃபண்ட் என்ற திட்டத்தை நடத்தி வருகிறது. இந்த ஃபண்ட் இந்தியாவின், ஷரியாவுக்கு உட்பட்ட முதல் மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாகும். இது நிர்வகிக்கும் தொகை ரூ.24.58 கோடியாகும். இதன் என்.ஏ.வி. ரூ.23.21. இத்திட்டம் மார்ச் 2009-ல் துவங்கப்பட்டது. இதன் கடந்த ஓராண்டு கால வருமானம் 42.8% ஆகும். இந்த ஃபண்டை வாங்குவதற்கு டீமேட் கணக்கு தேவையில்லை. இந்த ஃபண்ட் வருடத்திற்கு ஒரு முறை எவ்வளவு பணத்தை சுத்தப்படுத்த வேண்டும் என்பதற்கான ஸ்டேட்மென்ட்டை முதலீட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கும்.

டாடா செலக்ட் ஈக்விட்டி என்ற திட்டத்தை டாடா மியூச்சுவல் ஃபண்ட் நிர்வகித்து வருகிறது. இந்தத் திட்டம் ஷரியாவுக்கு உட்பட்டு நடக்கும் என்று கூறாத போதிலும், மதுபானம், புகையிலை, நிதித்துறை மற்றும் வட்டி கொடுக்கும் உபகரணங்களில் முதலீடு செய்வதில்லை என்று அறிவித்து, அவ்வாறே நிர்வகித்தும் வருகிறது. இந்த ஃபண்ட் 139 கோடி ரூபாயை நிர்வகித்து வருகிறது. இதன் தற்போதைய என்.ஏ.வி. ரூ 63.31. இத்திட்டம் மே 1996 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆரம்பம் முதல் ஜூன் 30, 2010 வரையில் ஆண்டுக்கு 18.97% வருமானமாகக் கொடுத்துள்ளது. கடந்த ஓராண்டில் 37.5% -யும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டிற்கு 19.5% -யும் வருமானமாகக் கொடுத்துள்ளது.

மேற்கண்ட திட்டங்கள் தவிர, நேரடியாகப் பங்குகளில் முதலீடு செய்பவர்களுக்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. நாம் மேலே கண்ட 6 ஃபில்டர்களை அடிப்படையாகக் கொண்டு நிறுவனப் பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்யலாம். நிஃப்டி ஷரியா குறியீட்டில் இடம் பெற்றுள்ள ஷரியாவுக்கு உட்பட்ட சில லார்ஜ் கேப் பங்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்,

இன்ஃபோசிஸ்,

எல். அண்ட் டி,

பார்தி ஏர்டெல்,

ஹிந்துஸ்தான் யூனிலிவர்,

ஒ.என்.ஜி.சி.,

பி.ஹெச்.இ.எல்.,

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்,

என்.டி.பி.சி.,

டாடா பவர்.

மேற்கண்ட முதலீடுகளுடன், தங்கம்/வெள்ளி போன்றவற்றிலும், ரியல் எஸ்டேட்டிலும் நேரடியாக முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம். டெலிவரி அடிப்படையில் முதலீடு செய்யும்போது அவை ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடுகளே!

குறிப்பு: இங்கு நாங்கள் குறிப்பிட்டுள்ள திட்டங்களையோ அல்லது பங்குகளையோ அவற்றின் செயல்பாட்டுத் திறனை வைத்துக் கொடுக்கவில்லை. மாறாக ஷரியாவுக்கு உட்பட்டு முதலீடு செய்ய இந்தியாவில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது என்பதை மட்டுமே தெரிவிக்க முனைந்துள்ளோம். முதலீட்டாளர்கள் அவரவர் ரிஸ்க்எடுக்கும் திறன் மற்றும் வசதிக்கு ஏற்ப தங்களது முதலீட்டை மேற்கொள்ளவும்

நன்றி :தமுமுகஇணைய தளம்

Share this