Breaking News

இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

நிர்வாகி
0

தி.மு.க. ஆட்சிக்கு பக்கபலமாக இருந்து துணை புரிய நீங்கள் எல்லாம் உறுதி ஏற்கவேண்டும் என்று இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


இப்தார் நோன்பு திறப்பு

தமிழ் மாநில தேசிய லீக் கட்சி சார்பில் சென்னை எழும்பூர் அசோகா ஓட்டலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் பொதுச்செயலாளர் திருப்பூர் அல்தாப் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-


சிறப்பு விருந்தினர் அல்ல...

இங்கு உரையாற்றிய திருப்பூர் அல்தாப் ஒன்றை நினைவுக் கூறினார். தலைவர் கலைஞர் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தவறுவதில்லை என்று கூறினார்.

எப்போதும், சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்குபவர் தலைவர் கலைஞர். நானும் 31 ஆண்டுகளாக தொடர்ந்து இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறேன். என்னுடைய கனிவான கோரிக்கை என்னவென்றால், ஒவ்வொரு முறையும் அழைப்பிதழில் என்னுடைய பெயரை சிறப்பு விருந்தினர் என்று குறிப்பிடுகின்றீர்கள்.

நான் சிறப்பு விருந்தினர் அல்ல. நான் உங்களின் ஒருவனாக இருந்து இந்த வாய்ப்பை பெற்றுவருகிறேன். எனவே, அடுத்த ஆண்டாவது உங்களின் ஒருவனாக என்னை கருதி பங்குபெறும் வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும்.

சிறுபான்மை நல ஆணையம்



1969-ஆம் ஆண்டு கழக ஆட்சியில் தான் மீலாது நபிக்கு முதன் முதலாக அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை கடந்த அ.தி.மு.க. அரசு 2001-ல் ரத்து செய்தது. 15.11.2006 முதல் மீலாது நபி நாளை அரசு விடுமுறை நாளாக மீண்டும் அறிவித்தது தலைவர் கலைஞர் கழக ஆட்சியில் தான். 1973-ம் ஆண்டு உருது பேசும் லப்பைகள், தெக்கனி முஸ்லிம்கள் ஆகியோரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததும் கலைஞர் தான். 1974-ம் ஆண்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசினர் மகளிர் கல்லூரிக்கு காயிதே மில்லத் பெயரை சூட்டியதும் தலைவர் கலைஞர் தான்.

1989-ம் ஆண்டு இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் சமுதாய மக்கள் பெரும்பயன் எய்தும் வகையில் " சிறுபான்மையினர் நல ஆணையம்'' உருவாக்கப்பட்டது. 1998-ல் ஓய்வூதியம் பெறும் உலமாக்களின் எண்ணிக்கை 2000 என்பது 2200 ஆக உயர்த்தப்பட்டு, 2008-ல் 2400 ஆகவும் உயர்த்தப்பட்டது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். 1999-ம் ஆண்டு வரை ஹஜ் புனிதப் பயணத்திற்கு குலுக்கல் முறையில் ஆண்டிற்கு 1800 பேருக்கு மிகாமல் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட முறையை கைவிட்டு, 1999 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கியதும் தலைவர் கலைஞர் தான்.

உறுதி அகாடமி

1999-ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை, இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் பயன்பெறும் வகையில் தனியே பிரித்து `தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை' 1.7.1999 அன்று உருவாக்கியவர் கலைஞர்.

ஆனால், ஜெயலலிதாவின் அ.தி.மு.க. அரசு 2003-ல் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்துடன் இணைத்துவிட்டது. 2006-ல் ஆட்சி பொறுப்பிற்கு வந்த கலைஞர் மீண்டும் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை தனியே செயல்படச் செய்து, அதன் மூலம், சிறுபான்மைச் சமுதாய மக்களுக்குத் கழக அரசு தொடர்ந்து உதவி வருகின்றது. 2000-ம் ஆண்டு இஸ்லாமியரின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்கப்பட்டு 21.7.2000 அன்று உருது அகாடமி தொடங்கப்பட்டது.

பிற்படுத்தப்பட்டோருக்கான 30 விழுக்காடு இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கு, 3.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டினை 15.9.2007-ல் அண்ணா 99-வது ஆண்டு பிறந்த நாள் பரிசாக வழங்கியதும் தலைவர் கலைஞர். 2008-ல் சீறாப்புராணம் பாடிய உமறுப் புலவருக்கு எட்டயபுரத்தில் அமுதகவி உமறுப்புலவர் மணிமண்டபம் ஏற்படுத்தியதும் தலைவர் கலைஞர் தான்.

தி.மு.க. ஆட்சிக்கு...

உலமாக்கள் நல வாரியம் 24.8.2009 அன்று ஏற்படுத்தப்பட்டது. தமிழக மேல்-சபையிலும், டெல்லி மேல்-சபையிலும் முஸ்லிம் பிரதிநிதிகளை இடம்பெறச் செய்ததும் தி.மு.க. தான். 2006-ம் ஆண்டு 5 ஆம் முறையாக முதல்வராக பொறுப்பேற்ற தலைவர் கலைஞர் எப்போதும் இல்லாத அளவிற்கு இரண்டு இஸ்லாமியர்களை தமிழக அமைச்சர்களாக அமர்த்தி அழகு பார்த்தவரும் கலைஞர் தான். தொடர்ந்து முஸ்லிம் பெருமக்களுக்கு பாடுபட்டு, சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கும் தலைவர் கலைஞருக்கும், கழக ஆட்சிக்கும் பக்க பலமாக இருந்து துணை புரிய நீங்கள் எல்லாம் உறுதி ஏற்க வேண்டும் என்று உங்களை எல்லாம் நான் அன்போடு கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

நிகழ்ச்சியில் மத்திய மந்திரி தயாநிதி மாறன், அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, டி.பி.எம்.மைதீன்கான், சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன், இந்திய ïனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், தமிழ்நாடு ஜமாதுல் உலமா சபை தலைவர் அப்துல் ரகுமான் ஹஜ்ரத், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் கவிக்கோ அப்துல் ரகுமான், தமிழ்நாடு ஹஜ் குழு தலைவர் பிரசிடென்ட் அபுபக்கர், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பேராயர் வின்சென்ட் சின்னத்துரை, இந்திய ïனியன் முஸ்லிம் லீக் பொருளாளர் வடக்குக்கோட்டையார் வி.எம்.செய்யது அகமது உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Share this