Breaking News

யாருக்கும் நான் பயப்பட மாட்டேன் நோன்பு திறப்பு விழாவில் விஜயகாந்த் பேச்சு

நிர்வாகி
0

நோன்பு திறப்பு விழாவில் பேசிய விஜயகாந்த், "யாருக்கும் நான் பயப்பட மாட்டேன்'' என்று கூறினார்.


நோன்பு திறப்பு நிகழ்ச்சி

வட சென்னை மாவட்ட தே.மு.தி.க. சார்பில் புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தண்டையார் பேட்டையில் நேற்று நடைபெற்றது. தே.மு.தி.க. பகுதி செயலாளர் பி.முகம்மது ஜான் தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் வி.யுவராஜ் முன்னிலை வகித்தார்.

நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏழைகளுக்கு உதவி

வாழ்கின்ற காலத்தில் நாம் ஏழைகளுக்கு உதவிகள் செய்து வாழ வேண்டும். ஏழைகளிடம் அன்பு செலுத்த வேண்டும். நான் என்னால் முடிந்த அளவு ஏழைகளுக்கு உதவி செய்து வருகிறேன். அதேபோல் எனது கட்சிக்காரர்களும் உதவி செய்கிறார்கள்.

எம்.ஜி.ஆர். ஏழைகளுக்கு கொடுத்து உதவினார். நான் என்னால் முடிந்த அளவு கல்விக்கும், ஏழைகளுக்கும், மாற்று திறனாளிகளுக்கும் உதவி செய்து வருகிறேன்.

முஸ்லிம்கள் அன்பு நிறைந்தவர்கள். மனித இதயங்கள் ஒன்று சேரவேண்டும் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்று எந்த மதமாக இருந்தாலும் இதயங்கள் ஒன்று சேர வேண்டும். அப்போதுதான் நாட்டில் அமைதி நிலவும்.

ஏமாற்றுகிறார்கள்

விரதம் இருந்து இந்த கஞ்சி குடிப்பது மிகவும் புனிதமானது. முஸ்லிம் மத கோட்பாட்டின்படி, 5 கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும். சம்பாதிக்கின்ற பணத்தில் மூன்றில் ஒரு பங்கை ஏழை, எளியவர்களுக்கு கொடுத்து உதவி செய்து வாழ வேண்டும். நான் 600 பேருக்கு கம்ப்ïட்டர் வாங்கி கொடுத்துள்ளேன். 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறேன். ஏழை மாணவர்களுக்கு கல்விக்காக உதவி செய்து வருகின்றேன்.

நாங்கள் இந்த நிகழ்ச்சியில் குல்லா அணிந்து இறைவனை வணங்குகின்றோம். பல அரசியல்வாதிகள் குல்லா அணிந்து ஏழை மக்களை ஏமாற்றுகிறார்கள். அதைக் கொடுக்கிறேன், இதைக் கொடுக்கிறேன் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள்.

பயப்படமாட்டேன்

எம்.ஜி.ஆருக்கு பிறகு கருணாநிதியும் ஜெயலலிதாவும்தான் மாறி மாறி ஆட்சி நடத்தி வருகிறார்கள். ஏழ்மை நீங்கியபாடில்லை. நான் தொண்டர்களின் ஆதரவில் நிற்கிறேன். எப்போதும் அக்கிரமத்தை எதிர்ப்பேன். யாருக்கும் பயப்படமாட்டேன்.

இந்த இனிய ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியின் வாயிலாக எல்லோரும் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

நிகழ்ச்சியில் அவருக்கு குரானும், வீரவாளும் பரிசாக வழங்கப்பட்டன.

Share this