Breaking News

கரையில் வளரும் முள் செடிகளால் வீராணம் ஏரிக்கு ஆபத்து

நிர்வாகி
0
வீராணம் ஏரி கரைகளில் முள் செடிகள் அதிக அளவில் வளர்ந்து வருவதால், கரைகள் பலவீனமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முள் செடிகளை போர்க்கால அடிப்படையில் அகற்றினால் மட்டுமே, கரைக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியும். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில், 35 சதுர கிலோ மீட்டரில் நீர் பிடிப்பு பரப்பளவு கொண்ட வீராணம் ஏரி உள்ளது. ஏரியின் பிரதான கரை 24 அடி அகலமும், 16 கி.மீ., நீளமும் கொண்டது. காவிரி கடைமடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் 50 ஆயிரம் ஏக்கர் வீராணம் மூலம் பாசனம் பெறுகிறது.

ஏரியில் 1,465 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்க முடியும். தற்போது 703.80 மில்லியன் கன அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. இங்கிருந்து வினாடிக்கு 74 கன அடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஏரி தூர்ந்துபோய், நீர்பிடிப்பு பரப்பு குறைந்து வருகிறது.

புதிய வீராணம் திட்டம் மூலம் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சேத்தியாத்தோப்பில் இருந்து லால் பேட்டை வரை 14 கி. மீ., ஏரியின் கீழ் கரை பலப்படுத்தி சாலைகள் போடப்பட்டது. ஏரியின் உள்புறம் மண் அரிப்பு ஏற்படாதவாறு கான்கிரீட் சிலாப்புகள் கொண்டு தடுப்பு அரண் அமைக்கப்பட்டு, ஏரியில் இருந்து தண்ணீர் கசிவு ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தற்போது ஏரியின் கீழ் கரைகளில் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கான்கிரீட் கற்களின் இடையிடையே முள் செடிகள் வளர்ந்து மரமாகி வருகிறது.

லால்பேட்டை, நத்தமலை, கந்தகுமாரன், பூதங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களின் ஏரி பகுதிகளில் அதிக அளவு முள் செடிகள் வளர்ந்து மரங்களாக உள்ளன. இதனால் கரைகளில் அரிப்பு ஏற்படும் சூழலும், கரைகள் பலவீனமாகும் சூழலும் உருவாகியுள்ளது. மழை காலங்களில் வீராணம் ஏரியில் அதிக அளவு தண் ணீர் தேக்கும்போது, அழுத்தம் காரணமாக நீர் கசிவு ஏற்படும். இந்நிலையில், முள் செடிகள் வளர்ந்து கரையில் பிளவு உருவாகியுள்ள இடங்களில், தண்ணீர் புகுந்து கசிவு ஏற்பட்டு கரைகள் உடையும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு, கரைகளின் உட்புறத்தில் முளைத்துள்ள முள் செடிகளை, போர்க்கால அடிப்படையில் அகற்றினால் மட்டுமே, ஏரிக்கரைக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும்.

Share this