Breaking News

உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான்

நிர்வாகி
0
கடலூர், செப். 3: உலகில் முதல் முதலில் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் நமது நாட்டுத் திப்புசுல்தான் என்று விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தெரிவித்தார்.


கடலூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே வியாழக்கிழமை நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மாணவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியது:

5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமி தோன்றியது. உலகில் மனித இனம் தோன்றி 2 லட்சம் ஆண்டுகள் ஆகிறது. 2012-ல் உலகம் அழிந்து விடும் என்று சிலர் கூறலாம். ஆனால் இன்னும் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு பூமி இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

உலகில் முதல் முதலில் ஏவுகணையைப் கண்டுபிடித்தது திப்புசுல்தான்தான். 1792-ம் ஆண்டு ஆங்கிலேயருக்கும் திப்புசுல்தானுக்கும் இடையே ஏற்பட்ட போரில், திப்புசுல்தான் படைகள் வெற்றி பெற்றன. இப்போரில் திப்புசுல்தான் 6 ஆயிரம் ஏவுகணைகளைப் பயன்படுத்தினார். இந்த ஏவுகணைகள் தற்போதும் லண்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளன.

திப்புசுல்தானுக்குப் பிறகுதான் உலக நாடுகள் ஏவுகணைகளைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தின. அறிவியல் தொழில்நுட்பங்களில் உலக நாடுகளுக்கு இணையாக இந்தியா பன்மடங்கு உயர்ந்துள்ளது. செயற்கைக் கோள்களை அனுப்பி நமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறோம்.

புரா திட்டம் மூலம் கிராமங்கள் முன்னேறத் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. விரைவில் இத்திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும். உலகில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் எல்லாம் நேராகச் சென்று இலக்கைத் தாக்கும் நிலையில், முதல் முறையாக வளைந்து நெளிந்து சென்று இலக்கைத் தாக்கும் ஏவுகணையை, இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதை உலக நாடுகள் பின்பற்றின. பிரிதிவி, அக்னி, ஆகாஸ், நாக், திரிசூல், பிரம்மோஸ், போன்றவை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள்.

ஏவுகணைகள் வெளியேற்றும் புகையால் வான்வெளியில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. மாசு ஏற்படாத எரிபொருளையே பயன்படுத்துகிறோம். ஏவுகணைப் புகை, சில விநாடிகளில் தோன்றி மறைந்துவிடும். நாம் ஏவுகணைகள் மூலம் செயற்கைக் கோள்களையும் அனுப்பி இருக்கிறோம். தற்போது விண்கலம் அனுப்பி நிலவில் தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடித்து இருக்கிறோம்.

அடுத்த கட்டமாக நிலவுக்கு மனிதனை அனுப்ப ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறோம் என்றார் சிவதாணுபிள்ளை. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு புனித வளனார் கல்லூரி முதல்வர் ரட்சகர் அடிகள் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஆக்னல் அடிகள் வரவேற்றார். கடலூர் மறை மாவட்ட முதன்மை குரு அருளானந்தம், செயலர் சாமிநாதன், முன்னாள் எம்.எல்.சி. எல்.ஜெயச்சந்திரன் மற்றும் புதுவை சான்றோர் மைய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன் தொகுத்து வழங்கினார். பேராசிரியர் ரொசாரியோ நன்றி கூறினார்.
நன்றி :தினமணி

Share this