Breaking News

ஹஜ் பயணிகளுக்கு அரசு மானியம் சட்டத்திற்கு விரோதமில்லை

நிர்வாகி
0

(டாக்டர் .பீ. முகம்மது அலி, பிஎச்,டி. .பீ.எஸ்()



கடந்த 27.11.2010 அன்று ஹஜ் பயணம் சீரமைப்பதிற்காக ஒரு கட்டுரை எழுதி அதனை சமுதாய ஊடகங்கள் சத்திய மார்க்கம், முதுகுளத்தூர்.காம், ஈமான் துபை, ஜெத்தா டைம்ஸ், மக்கள் ரிப்போர்ட்டர், போன்றவை வெளியிட்டு நமது ஒற்றுமையான உரிமைக் குரலினை எழுப்பின.



அந்தக் கட்டுரையில் முஸ்லிம்களுக்கு அரசு சலுகை கூடாது என்று குரல் எழுப்பியவர்கள் எப்படி சீனா எல்லையிலுள்ள மன்ஸ்ரோவர் மற்றும் இமாலயத்திலுள்ள பத்திரிநாத் போன்ற கோயில்களுக்கு பயணம் செய்ய சலுகைகள் வழங்கப்படுகின்றன என கேள்வியும் எழுப்பியிருந்தது அனைவரும் அறிந்ததே.



முஸ்லிம்கள் ஹஜ் சலுகைகள் அனுபவிப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 14,15 மற்றும் 27ன் படி சட்ட விரோதம் என அறிவிக்கும் படி வழக்கம் போல ஹிந்துத்துவா அமைப்பினைச் சார்ந்த முன்னாள் பாரதிய ஜனதா எம்.பி; பிரபுல் கராடியா என்பவர் இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிபதிகள் மேன்மைதகு மார்கண்டேய கட்ஜூவும், ஜி.எஸ்.மிஸ்ராவும் அந்த மனுவினை 28.11.2010 அன்று தள்ளுபடி செய்து மனுதார் மற்றும் அவருடைய அமைப்பினர் தலையில் நச்சடி தீரப்பளிக்கும் போது கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர், ‘அரசின் பொது பணத்தில் இருந்து ஒரு சிறிய பகுதி, குறிப்பிட்ட ஒரு மதத்தின் மேம்பாட்டுக்காக அல்லது அதைச்சார்ந்த சலுகைக்காக மானியம் வழங்கப்படுவதில், அரசியல் சட்ட மீறல் எதுவுமில்லை. இதை வேறு விதமாக குறிப்பிடுவது என்றால், வரி வருவாய் மூலம் திரட்டப்படும் முழு தொகையில் 25 சதவீதம் அளவிற்கு இது போன்று செலவிடப்பட்டால், விதி மீறல் என்று கூறலாம். ஆனால் 1,20,000 ஹஜ் பயணிகளுக்கு செலவழித்த பணமோ ஒரு சிறிய தொகைதான், அரசுகள் மெஜாரிட்டியாக உள்ள ஹிந்துக்கள் புனித பயணம் செல்ல கும்ப மேளாவிற்கும், பத்திரிநாத் கோயிலுக்கும், சீன எல்லையிலுள்ள மன்ஸ்ரோவர் தளங்களுக்கும் வசதியுடன் கூடிய சலுகை செய்து கொடுக்கும் போதும், மற்றும் சீக்கியர் பாக்கிஸ்தானிலுள்ள குருத்துவாராவிற்கு செல்ல பயணச் சலுகை செய்ய வசதியும், வாய்ப்பும் அளிக்கும் போதும், 100 கோடி மக்களுள்ள இந்தியாவில் 1,20,000 முஸ்லிம்களுக்கு வாழ்க்கையில் ஒரு கட்டாய புனித பயணம் செல்ல சலுகையளிப்பதில் என்ன தவறுள்ளது என கூறியுள்ளது இன்னும் இந்தியாவில் நீதி உயிருடன் இருக்கிறது என்பதினை எடுத்துக் காட்டுகிறது.



நான் 27.1.2011 அன்று தேர்தல் நேரத்தில் பல்வேறு சமுதாய அமைப்புகள் வேற்றுமையினை மறந்து இட ஒதுக்கீடு, இட ஒதுக்கீட்டை அமல் படுத்த அருந்ததையருக்கு கொடுத்தது போன்று உயர்மட்ட குழு அமைப்பது போன்று ஒரு உயர் மட்ட குழு அமைக்கவும், மைனாரிட்டி கமிஷன் சேர்மன் பதவிக்கு சுழற்சி முறையில் முஸ்லிம்களுக்கும் கிறித்துவர்களுக்கு கொடுக்கப்படுவது போல கொடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை அரசியல் முன் வைக்க வேண்டும் என வலியுறுத்தினேன். அதனையும் நான் மேலே குறிப்பிட்ட எல்லா சமுதாய ஊடகங்களும் வெளியிட்டன. அதன் பலனாக இன்று(29.1.2011 மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத ஒதுக்கீட்டின் பலனை முஸ்லிம்கள் எந்தளவிற்கு அனுபவித்திருக்கிறார்கள் என்று மேற்பார்வையிட தமிழக தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் ஒரு உயர் மட்டக் குழு அமைத்துள்ளார்கள் என மகிழ்ச்சியினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ‘தட்டினால்தான் திறக்கப்படும’; என்ற சாதாரண குடிமகன் சொல்லும் பழமொழி அதனை பின்பற்றி பல சலுகைகள் பெற சமுதாய இயக்கங்கள் வேற்றுமையினை மறந்து குரல் எழுப்ப வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

Tags: கட்டுரை

Share this