சென்னையில் இஸ்லாமியர்கள் வரலாறு காணாத போராட்டம்!
நிர்வாகி
0
சென்னை: நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் வெளியாகியிருக்கும் திரைப்படத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் கூட்டுப் போராட்டத்தை சென்னையில் இன்று நடத்தின. இதனால் சென்னை அண்ணா சாலை ஸ்தம்பித்துப் போனது. இதுவரை இப்படி ஒரு போராட்டத்தை அண்ணா சாலை கண்டதில்லை என்பதால் சென்னையே சில மணி நேரம் ஆடிப் போய் விட்டது.
சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் அமெரிக்க தூதரகம் நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டன. இந்த போராட்டத்தில் அமெரிக்க தூதரகம் தாக்குதலுக்குள்ளானது. இதைத் தொடர்ந்து 2 நாட்களுக்குஅமெரிக்க தூதரகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் இன்று 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் கூட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அமெரிக்க தூதரகத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்துவதற்கு அண்ணா சாலை தர்கா அருகே இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இது பலரையும் வியப்படைய வைத்தது. காரணம், அண்ணா சாலையில் இதுவரை எந்தப் போராட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டதில்லை. இதனால் போலீஸ் கமிஷனர் திரிபாதியின் முடிவு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
போராட்டத்தை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் மாலை 3 மணி முதலே போக்குவரத்துக்கு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அண்ணா சாலை முழுவதும் இஸ்லாமியர்கள் கொடிகளை ஏந்தியபடி முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். ஆங்காங்கே அமெரிக்க தேசியக் கொடி மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் அனைவரும் அண்ணா சாலை தர்கா அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று அமெரிக்காவுக்கு எதிராக கண்டனக் குரல்களைப் பதிவு செய்தனர். இதில் ஒருதரப்பினர் போலீசாரின் அரணை உடைத்துக் கொண்டு அமெரிக்க தூதரகம் நோக்கி முன்னேற முயற்சித்தனர். அவர்களையும் போலீசார் தடுத்தனர்.
இந்தப் போராட்டம் பின்னர் பெரும் வன்முறையாக மாறியது. அரசு பஸ், டூவீலர்கள் உள்ளிட்டவை தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
கடும் போக்குவரத்து நெருக்கடி
சென்னை அண்ணாசாலைதான் நகரின் மையமான போக்குவரத்துப் பகுதி. ஏற்கெனவே மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக இந்தப் பாதையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டத்தால் மயிலாப்பூர், ராயப்பேட்டை , அண்ணாசாலை ஆகிய தென்சென்னை பகுதிகள் ஸ்தம்பித்துப் போயிருந்தன.
இன்னொரு பக்கம் அண்ணா சாலையில் நடைபெற்ற போராட்டத்தால் மத்திய சென்னை பகுதிகளான எழும்பூர், சிந்ததாரிப் பேட்டை வழியே பேருந்துகள் திருப்பிவிடப்பட்டதால் அந்தப் பக்கமும் வாகனங்களால் நிலைகுலைந்து போனது. சென்னையில் பல மணிநேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.[gallery link="file" columns="2" orderby="rand"]