Breaking News

அகோரி சாதுக்கள் போர்வையில் கோரத்தாண்டவ வலது சாரிகள்

நிர்வாகி
0
 

எழுத்தாளர் திரேந்திர கே ஜா என்பவர் பத்து வருட காலங்களாக ஹிந்துத்துவாவின் உண்மை முகத்தினை கண்டறிந்து, ‘ஷேடோ ஆர்மிஸ்’, ‘ஹிந்துத்வா காலாட்படையும் அயோத்யாவும்’, ‘ டார்க்னயிட் -அயோத்தியாவில் ராமர் காட்சியளித்த ரகசியம்’ , ‘சாமியார்கள்-அகோரிகள் அரசியலில் ஹிந்துக்கள் ஓட்டுகள்’ என்ற பல புத்தகங்கள் எழுதியுள்ளார்.


அவர் எழுதியுள்ள வரலாற்றில் பாபரி மஸ்ஜித் இடிப்பில் எவ்வாறு சாதுக்கள் பங்கெடுத்தனர் என்று விரிவாக ஹிந்து ஆங்கில பத்திரிக்கையாளருக்கு பேட்டி கொடுத்துள்ளார், அவர் பேட்டி 8 .9 .2019 அன்று வெளியாகியுள்ளது. அதன் சாராம்சத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.. அதற்காக கிட்டத்தட்ட 600 சாதுக்கள் வசிக்கும் அயோத்தியில் உள்ள 'ஹனுமான் கார்க்கி' சத்திரத்தில் உள்ள 'ஆபிராம் தாஸ்' அவர்களை 2010 ம் ஆண்டு சந்தித்து விவரங்கள் அறிந்தார். இந்த ஆபிராம் தாஸ் என்ற சாது யார் என்றால் பாபரி மஸ்ஜிதில் 1949 ம் ஆண்டு இரவோடு இரவாக ராமர் சிலையினை ஓசைப்படாமல் வைத்து வலதுசாரிகளிடையே புகழ் பெற்றவர். அங்குள்ள சாதுக்களிடையே ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஷ்வா இது பரிஷாத் கொள்கைகளைக் கொண்ட சாதுக்களை காண முடிந்ததாம்.


ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளர் எம்.எஸ்.கோல்வாக்கர் தான் முதன் முதலில் 1964 ம் ஆண்டில் சாதுக்களை அரசியல் லாபங்களுக்காக சாதகமாக பயன்படுத்தியவர். விஷ்வா ஹிந்த் பரிஷாத் அமைப்பு 20 ஆண்டுகள் செய்யமுடியாத அரசியல் வித்தைகளை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினைச் சார்ந்த சாதுக்கள் சாதித்துக் காட்டியுள்ளனர். 1980 ம் ஆண்டு ஆரம்பத்தில் வி.எச்.பி. இயக்கத்திற்கு 150 பிரச்சகர்கள் கொண்ட அமைப்பை சாதுக்கள் போர்வையில் அவருடைய செயல் திட்டம் நிறைவேற அர்ப்பணித்தார்.
அந்த வலது சாரி காலாற்படை வீரர்கள் கொண்டு 'அகில் பாரதிய சாந்த் சமிதி ' என்ற அமைப்பினை உருவாக்கினார்.


கோல்வாக்கர் நண்பர் சாத்தியமித்ரா காந்த் கிரி ஹரித்துவாரில் முதன் முதலில் பாரத மாத கோவிலை நிறுவினார். அவருடைய சிஷ்யன் அவதிசாநந்த் கிரி புலந்த்சாகரில் 'ஆர்.எஸ்.எஸ். ஆர்மி ஸ்கூல்' தொடங்கினார். அவருடைய சிஷ்யை தான் மாலேகான் குண்டு வெடிப்பில் சம்பத்தப்பட்டு கைதாகி விடுதலைப் பெற்று தற்போது பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆகியுள்ள 'சாத்வி பிரக்யா' ஆகும்.


1986 ம் ஆண்டு சிவில் நீதிமன்றத்தில் அயோத்தி பாபரி மஜித் வழக்கு வரும்போது அப்போதுள்ள மாவட்ட ஆட்சியாளர் சீலிடப்பட்ட கட்டிடத்தினை ஹிந்துக்கள் வழிபட திறந்து விட்டார். அவர் அவ்வாறு செய்யும்போது பாரத பிரதமராக ராஜிவ் காந்தி இருந்தார். அவரும் அரசியல் லாபத்திற்காக இந்துக்கள் வோட்டு வங்கியினை பெற ஆசியும் வழங்கினார். பிற்காலத்தில் அந்த மாவட்ட ஆட்சியாளரும் பி.ஜே.பி.யில் சேர்ந்ததும் அரசியல் வரலாறு.


1989 ம் ஆண்டு அலகாபாத்தில் நடந்த கும்ப மேளாவில் சாதுக்களை திரட்டி அயோத்தி ராமர் கோவிலை மீட்க கோசம் எழுப்பப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 'தர்ம சன்சாட்' என்ற இயக்கத்தினை ஆரம்பித்து கோவில் கட்டுவதிற்காக 'சிலா' என்ற செங்கற்கற்கள் வழங்கும் சிலான் பூஜையும் நடந்தேறியது. தமிழகத்திலிருந்தும் அரசியல் கட்சி ஒன்று தன் கட்சிச் தொண்டர்களை செங்கல் அர்ப்பணிக்க அனுப்பியது உங்களுக்குத் தெரியும்.


1990 ம் ஆண்டு எல்.கே.அத்வானி தொடங்கிய அயோத்தி ரத யாத்திரைக்கு வரைபடம் போட்டு, பாதுகாப்பும் கொடுத்தது அந்த சாதுக்கள் தான் என்றால் மிகையாகாது. 1989 ம் ஆண்டு அலகாபாத்தில் கும்ப மேளாவில் ஆரம்பித்த ராமர் கோவில் பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் எழுப்பவேண்டும் என்று எழுப்பிய கோசம் 1992 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ந்தேதி நிறைவேற்றப் பட்டு வரலாற்று சிறப்பு மிக்க மஸ்ஜித் இடிக்கப் பட்டது தன் இந்திய நாட்டடின் கருப்பு தினம் என்று பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அந்த வழக்கும் நீதிமன்றத்தில் ஒரு முடிவுக்கு வராமலே போய்விடுமா என்ற சந்தேகமும் உள்ளது. பாபரி மஸ்ஜித் இடிக்கப் பட்ட இடம் யாருடையது என்று உச்சநீதி மன்ற அரசியல் அமைப்பு இருக்கை நாள் தோறும் விசாரித்து வருகிறது, அதில் சுன்னி வக்ப் போர்ட் சார்பாக ஆஜராகும் மூத்த வழக்குரைஞர் ராஜிவ் தவானுக்கு மிரட்டல் வருவதாக உச்சநீதி மன்றத்திலேயே தெரிவித்திருக்கின்றார் என்றால் எவ்வளவு தூரம் வலது சாரி அமைப்புகள் வேரூன்றி உள்ளன என்பது தெளிவாக வில்லையா. இந்திய மக்களை மதத்தின் பெயரால் இருதுருவமாக்கிய துரதிஷ்டமான செயலினை வலது சாரிகள் திட்டமிட்டு நிறைவேற்றினர், என்று எழுத்தாளர் ஆய்வில் கூறியுள்ளார்.


(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, பிஎச்.டி.ஐ.பீ.எஸ் (ஓ)

Tags: கட்டுரை

Share this