Breaking News

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சந்திப்பு!

நிர்வாகி
0
தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை சென்னை கிரீன்வே சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தலைவர்கள் இன்று (10-01-2020) காலை 10. 30 மணிக்கு தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய சமுதாயத்தின் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் சந்தித்தனர்.
இச்சந்திப்பிற்கு பிறகு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளரும் சட்டமன்ற கட்சி தலைவருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இன்று (10-01-2020) தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை இஸ்லாமிய சமுதாயத்தின் அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள் ஜமாஅத்துல் உலமா சபை மாநில தலைவரும், சமுதாய கூட்டமைப்பின் தலைவருமான மௌலவி காஜா முஹைத்தீன் ஹஜ்ரத் தலைமையில் சந்தித்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.) என்.பி.ஆர். (தேசிய மக்கள் தொகை பதிவேடு) தேசிய குடியுரிமை பதிவேடு (என்.ஆர்.சி) ஆகிய சட்டங்களால் ஏற்படக்கூடிய அபாயங்கள் மற்றும் முஸ்லிம் சமுதாயத்தின் ஐயப்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து மனு அளித்தோம்.
அனைத்து விவரங்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் விளக்கமாக கேட்டதோடு மத்திய அரசாங்கத்திடமிருந்து இதுவரை எங்களுக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை. தாங்கள் கூறியுள்ள விவரங்களினுடைய அடிப்படையில் விரைவில் சட்ட வல்லுநர்கள் மற்றும் தமிழக அரசின் மூத்த அமைச்சர்களுடன் கலந்து பேசி குடியுரிமை திருத்த சட்டம் சம்பந்தமாக அறிவிப்பை வெளியிடுவோம் என உறுதி அளித்தார்.
விரைவாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லிம் சமுதாயத்தின் கோரிக்கையை நாங்கள் வலியுறுத்தி இருக்கின்றோம். தமிழக அரசு நல்ல முடிவை எடுக்கும் என நாங்கள் நம்புகின்றோம். தொடர்ந்து செய்தியாளர்கள் மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தது குறித்து முதல்வரிடம் கேட்டீர்களா என வினவிய போது
கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்ஏ. அன்று பாராளுமன்றத்தில் அங்கு வாக்களிக்கும் போது முழுமையான விவரத்தை அ.தி.மு.க. எம்.பி.க்கள் பெறவில்லை என முதல்வர் தெரிவித்ததாக பதிலளித்தார்.
முதல்வரை சந்திக்கும் போது தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மௌலானா முஹம்மது மன்சூர் காஸிமி, தேசிய லீக் கட்சியின் கோனிகா பஷீர் அஹமது, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக், எம்.ஜி.கே. நிஜாமுதீன், மஸ்ஜித் கூட்டமைப்பு தலைவர் முஹம்மது பஷீர், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம். பாக்கர், முனீர் அஹமது, ஐ.எஃப்.டி, சிக்கந்தர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags: சமுதாய செய்திகள்

Share this