Breaking News

இந்திய முஸ்லிம்களின் இரண்டாவது விடுதலைப் போராட்டம்! அ. முஹம்மது கான் பாகவி

நிர்வாகி
0

இந்தியாவை 800-க்கும் அதிகமான ஆண்டுகள் ஆண்ட பெருமை முஸ்லிம்களுக்கு உண்டு. முஸ்லிம் மன்னர்களின் ஆட்சி நடந்தபோதுதான் இந்தியாவை ஆக்கிரமித்தனர் வெள்ளையர்கள். இந்திய மண்ணில் வெள்ளைக்காரன் கால் பதித்த அடுத்த நிமிடமே மோப்பம் பிடித்துவிட்ட முஸ்லிம் ஆட்சியாளர்கள், அவர்களை விரட்டியடிக்க ஆயத்தமாகிவிட்டார்கள் என்பது வரலாறு.

பின்னர் தனிப்பட்ட முறையிலும் மற்ற சமூகங்களுடன் இணைந்தும் ஆக்ரோஷமாகவும் ஆண்மையோடும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தைக் கையிலெடுத்து, உயிர்கொடுத்துப் போராடினார்கள் முஸ்லிம்கள். பல முஸ்லிம் மன்னர்கள் குடும்பத்தோடு வீரமரணம் அடைந்தனர். சிலர் சொத்துகளை இழந்தனர். மார்க்கம் கற்ற ஆலிம் பெருமக்கள் ஆயிரக்கணக்கில் வெள்ளையர்களால் கழுவேற்றப்பட்டார்கள்.

சுதந்திரம் கிடைத்தது. அப்போதைய தலைவர்களான காந்திஜி, ஜின்னா, பட்டேல் போன்றவர்களால் ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டபடி நாட்டுப் பிரிவினையும் நடந்தது. விரும்பக்கூடிய யாரும் பாகிஸ்தான் பகுதிக்குச் சென்று குடியேறிக்கொள்ளலாம் எனப் பொது அறிவிப்பு வெளியானது. இன்றைய பாகிஸ்தான் மற்றும் அதையொட்டி வாழ்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள் முதலான முஸ்லிமல்லாதோரும் குடிபெயர்ந்தனர்.

ஆனால், வடக்கிலும் சரி! தெற்கிலும் சரி! பலகோடி முஸ்லிம்கள் இந்தியாதான் எங்கள் பிறந்த மண்; இதுவே எங்கள் இறந்த மண்ணாகவும் இருக்க வேண்டும் –என்று தீர்மானித்து, பாகிஸ்தான் குடிபெயர மறுத்துவிட்டனர். இந்தியாவே எங்கள் முன்னோர்கள் பிறந்த நாடு என்று சொல்லி, இங்கேயே தங்கி, இந்தியாவின் இன்ப – துன்பங்களில் சமபங்கு எடுத்துக்கொண்டு வாழ்ந்துவருகின்றனர்.

இதற்கிடையில், கிழக்கு பாகிஸ்தானில் வெடித்த உள்நாட்டுப் போரில் இந்தியா தலையிட்டு, பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம் உருவாக வழிவகுத்தது. பாகிஸ்தான் இரண்டானது. இந்நிலையில், பாகிஸ்தானிலும் வங்கதேசத்திலும் குடியேறிய இந்தியர்கள் பலர். சாதி-மத வேறுபாடின்றி இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தனர். அங்குள்ள வாழ்க்கைத் தரம், தட்ப வெப்பநிலை, பொருளாதார நெருக்கடி ஆகியவை இதற்குக் காரணங்களாக அமைந்தன.

‘முஸ்லிம் நாடு’ என்று பெயரளவிற்குப் பெயர் சூட்டிக்கொண்ட அவ்விரு நாடுகளின் மதரீதியிலான சில நடவடிக்கைகள் பொருந்தாமல் போனதும், முஸ்லிமல்லாதோரின் வெளியேற்றத்திற்குத் தூண்டுகோலாக அமைந்திருக்கக்கூடும். ஆனால், மதம் மட்டுமே காரணம் என்றால், அந்நாடுகளின் முஸ்லிம்களும் அகதிகளாக இந்தியா வந்து, குடியுரிமை இல்லாமல் ஏன் அவதிப்பட வேண்டும்.

பொருளாதாரம், சுகாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி ஆகிய துறைகளில் அந்நாடுகளில் ஏற்பட்ட போதாமைதான் இவர்கள் குடிபெயர உண்மையான, சரியான காரணமாக இருக்க இயலும். இவ்வாறு இந்தியாவுக்குள் தகுந்த ஆவணங்களின்றி, கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு, பரிதாப நிலையில் அந்நாட்டைச் சேர்ந்த இலட்சக்கணக்கானோர் படிப்படியாகக் குடியேறினர். அஸ்ஸாம், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் வசதிவாய்ப்பிற்கேற்ப உள்ளே புகுந்தோரில் சில லட்சம் முஸ்லிம்களும் அடங்குவர்.

உள்ளூரில் வாழ்ந்துவந்த மக்களுக்கு இவர்களின் வரவால் பல்வேறு நெருக்கடி ஏற்படவே, அகதிகளை வெளியேற்ற வேண்டும் என்று அவர்கள் போராடத் தொடங்கிவிட்டார்கள். குறிப்பாக, இது அஸ்ஸாமில் சற்று கடுமையாகவே இருந்துவருகிறது. நடுவண் அரசு தலையிட்டு, இதற்கொரு தீர்வு காண முயலும்போது, அகதிகளில் அதிகமானோர் இந்துக்களாக இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்தது. நீண்டகாலம் அகதிகளாக இருக்கும் முஸ்லிமல்லாதோரை மட்டும் ‘இந்தியர்கள்’ எனச் சட்டப்படி அறிவிக்க பா.ஜ.க. அரசு எண்ணியது. (அப்படிப் பார்த்தால், அனைவரும் இந்தியர்தான்.) முஸ்லிமல்லாத அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை வழங்குவதென்றும் சில லட்சம் முஸ்லிம் அகதிகளை நாட்டைவிட்டுத் துரத்துவது என்றும் முடிவு செய்தது பாஜக. இந்தியக் குடியுரிமை பெறும் முஸ்லிமல்லா அகதிகள், நன்றிக் கடனாகத் தங்களுக்குத் தேர்தல்களில் வாக்களிப்பார்கள்.

முஸ்லிம் அகதிகள் நமக்கு வாக்களிக்கமாட்டார்கள். அத்துடன், பாரதத்தில் முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகமாகி, ஆட்சியைப் பிடித்துவிடுவார்கள் –என்பதே இந்த பாரபட்ச முடிவுக்கு அசல் காரணம் என்றால், பாஜகவின் மனசாட்சி மறுக்காது. ஆனால், அஸ்ஸாமியர் அகதிகள் அனைவரையும் –சாதிமத பேதம் பார்க்காமல்- நாட்டிலிருந்து வெளியேற்றியாக வேண்டும் எனப் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, இதையொட்டியே இந்தியா முழுக்க வாழும் முஸ்லிம்கள் அனைவரையும் கணக்கெடுத்து, அரசு கோரும் சாத்தியமில்லா ஆவணங்கள் இல்லாததால் ‘சந்தேகத்துக்குரியோர்’ என முத்திரை குத்திக் கணிசமானோரை அகதிகளாக்க நடுவண் அரசு திட்டமிட்டது. இதன் விளைவே, இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள். ஆனால், இதன் அபாயத்தை அறிந்துகொண்ட இந்திய முஸ்லிம்கள் மதச்சார்பற்ற சக்திகளுடன் இணைந்து காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை வீரியமிக்கப் போராட்டங்களைக் கையிலெடுத்துத் தொடர்ந்து நடத்திவருகிறார்கள்.

தலைநகர் தில்லியில் தொடங்கிய ‘ஷாஹின் பாஃக்’ காத்திருப்புப் போராட்டம், சென்னை வண்ணாரப்பேட்டைவரை பரவி, இந்திய வீராங்கனைகளால் தொடர்ந்து நடந்துவருகிறது. பர்தா முறையைப் பேணி, உணவை மறந்து, உறக்கத்தைத் துறந்து, இயற்கைத் தேவைகளைக்கூடத் தள்ளிவைத்துவிட்டுக் கைக்குழந்தைகளுடன் அந்த வீரப் பெண்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்தைக் காண்கையில் நமக்கெல்லாம் சிலிர்த்துப்போகிறது. நம்மையும் அறியாமலேயே அவர்களுக்காக துஆ செய்யத் தூண்டுகிறது.

காவலர்களின் தடியடியையும் வாங்கிக்கொண்டு, அதை ஒரு விழுப்புண்ணாக ஏற்றுக்கொண்டு உறுதியோடு போராடும் வீரமங்கையர் வாழ்த்துக்குரியவர்கள்; வரலாற்றுச் சின்னங்கள். இதே காத்திருப்புப் போராட்டம் தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஊர்களில் மகளிரால் நடத்தப்படுவது வியப்பானது; வித்தியாசமானது. அத்துடன் மறியல் போராட்டங்கள், மனிதச் சங்கிலி போராட்டங்கள், முற்றுகைப் போராட்டங்கள், கண்டனக் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள்… என மக்களாட்சியில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து வகையான சாத்வீகப் போராட்டங்களையும் சமுதாயம் முன்னெடுத்துவருவது, அதன் விழிப்புணர்வைக் காட்டுகிறது. இத்தனைக்கும், அசம்பாவிதங்களுக்கு இடமளிக்காமல், சட்டமீறல்களில் ஈடுபடாமல், காவல்துறைப் பாதுகாப்போடு அறவழியில் இப்போராட்டங்கள் நடப்பது பார்ப்போரை வியக்கவைக்கிறது. காவலர்களின் அத்துமீறலால் சிற்சில இடங்களில் நடந்த தள்ளுமுள்ளுகள், தடியடிகள் தவிர வேறு விபரீதங்கள் எதற்கும் போராளிகள் இடமளிக்காததும் நம் தரப்பைப் பொதுமக்கள் அங்கீகரிக்க வழிவகுத்துள்ளது. அல்ஹம்து லில்லாஹ்.

போராட்டங்கள் நடந்தாலும், சம்பந்தப்பட்ட ஆட்சியாளர்கள், அதிகாரிகள், முதலமைச்சர், குடியரசுத் தலைவர்… என அதிகார வர்க்கத்தை முறையாகச் சந்தித்து, நம் அச்சங்களையும் கோரிக்கைகளையும் முறையிட்டு நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளையும் சமுதாயப் பெரியவர்கள் மேற்கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. எல்லாம்சரி! இது எத்தனை நாட்களுக்கு…? அரசு அசைந்து கொடுக்குமா…? கடைசியில் நம் நிலைதான் என்ன…? என்ற கேள்விகள் நம்முன் அணிவகுப்பதை நிராகரிக்க முடியவில்லை. ஒன்றை மட்டும் உறதியாகச் சொல்லிக்கொள்வோம்! முயற்சி நம்முடையது; அதில் அயர்ச்சி கூடாதது; நகர்ச்சி இறைவனுடையது; அந்த நம்பிக்கையில் தளர்ச்சி வரக்கூடாதது. ஏன் நம் அடுத்த திட்டங்கள் இப்படி இருக்கக் கூடாது? 1. கணக்கெடுப்பில் ஒத்துழையாமை. 2. ஒவ்வொருவரும் பாஸ்போர்ட் (கடவுச் சீட்டு)–உம்ரா / ஹஜ் பெயரில்கூட- எடுத்துவைத்துக்கொள்ளல். 3. நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தல் 4. சர்வதேச மனித உரிமைகள் மன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுசெல்லல். 5. இந்தியாவின் நட்பு நாட்டுத் தலைவர்களை அணுகுதல். எல்லாவற்றுக்கும் முன்னால் படைத்த இறைவனிடம் அழுது மன்றாடி முறையிட்டுக்கொண்டே இருத்தல். அப்போது நம்முடைய இரண்டாவது விடுதலைப் போராட்டமும் இன் ஷா அல்லாஹ் வெல்லும்.

Tags: கட்டுரை

Share this