லால்பேட்டையில் ரத்ததான முகாம் திடீர் ரத்து
நிர்வாகி
0
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் அனைத்து கட்சி கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டம் நேற்று 11-வது நாளாக நீடித்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்று இருந்தனர். இந்த நிலையில், காட்டுமன்னார்கோவிலில் உள்ள ஒரு அமைப்பு சார்பில் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு அருகே நேற்று ரத்ததான முகாம் நடைபெற்றது.
இதுபற்றி அறிந்த போராட்டக்காரர்கள் ரத்ததானம் செய்வது என்று முடிவு செய்து, முகாம் நடைபெறும் இடத்துக்கு சென்றனர். அங்கு, நாங்கள் அனைவரும் ரத்ததானம் வழங்க முன்வருகிறோம், எனவே நாங்கள் போராட்டம் நடத்தி வரும் இடத்துக்கு வந்து ரத்தம் பெற்றுக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர். போராட்டம் நடக்கும் இடத்துக்கு வந்து ரத்த தானம் பெற இயலாது. இந்த முகாமில் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்குங்கள் என்று முகாம் நடத்துபவர்கள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் முகாம் நடந்த இடத்திற்கு ரத்தம் வழங்க சென்றனர். அவர்களிடம் இருந்து ரத்ததானம் பெறுவதற்கான பணிகள் நடந்தது.
இதற்கிடையே மருத்துவ குழுவினருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒரு தகவல் வந்ததாக கூறப்படுகிறது. அதில், தற்போது நடைபெறும் ரத்ததான முகாமை வேறு ஒரு நாளில் நடத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு யாரிடமும் ரத்த தானம் பெறாமல், ரத்ததான முகாம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த போராட்டக்காரர்கள், “ எங்கள் போராட்டத்தை கைவிட செய்ய வைக்க வேண்டும் என்பதற்காக தான் ரத்ததான முகாமை நிறுத்தி விட்டனர்” என்று போராட்டக்காரர்கள் தெரிவித்து விட்டு, அங்கிருந்து தாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதிக்கு சென்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.Tags: லால்பேட்டை