Breaking News

இந்த லாக்டவுனில் எல்லா ஊரையும் போல எங்கள் ஊரும் முடக்கப்பட்டுள்ளது

நிர்வாகி
0

இந்த லாக்டவுனில் எல்லா ஊரையும் போல எங்கள் ஊரும் முடக்கப்பட்டுள்ளது அத்தியாவசிய பொருட்கள் வாங்கச்செல்ல முடியாமல் மக்கள் மிகவும் தவித்துக் கொண்டிருப்பதை உணரமுடிகிறது.

என் சிறு வயதின் 90 களுக்கு முன்பான எங்கள் ஊரின் அழகையும் இயற்கை வளங்களையும் இந்த நேரத்தில் நெஞ்சத்தில் அசைபோட்டுப் பார்க்கிறேன். வெற்றிலை மற்றும் நெல் கரும்பு உளுந்து பயறு வாழை பயிரிடுதல் தான் எங்கள் ஊரின் பிரதான தொழில். காலை தொழுகை முடிந்த உடன் தேநீர்க்கடைகளில் மக்கள் வேலைக்குச் செல்ல கூட்டமாய் இருக்கும் பல ஊர்களிலிருந்து வந்த இந்து சமூக மக்கள் பணிக்கு வந்து செல்வார்கள் அவர்கள் எல்லோரும் உரிமையோடு எங்களோடு பழகுவார்கள். எங்கள் ஊரின் பரோட்டாவின் ருசி அதற்குத் தனி மவுசு உண்டு. ஊர் வீரணம் அருகில் இருப்பதால் குளம் குட்டை வாய்க்கால் என நீர் எப்போதும் நிறைந்து இருக்கும். பள்ளிவாசல்களிலிருந்து 10 ரூபாய் கட்டணத்தில் 24 மணி நேரமும் எல்லா வீட்டிற்கும் குடிநீர் விநியோகம் செய்வார்கள்.குளத்தில் மீன் வளர்த்துக் குறைந்த விலையில் ஏலமாக விடுவார்கள்.

பயிர்களில் அத்தியாவசியமான காய்கறிகள் அனைத்தும் பயிரிடுவார்கள். கீரைகள் முருங்கை வாழைக்காய் எனத் தட்டுப்பாடு எப்போதும் இருக்காது. வீடுகளில் கோழிகள் ஆடுகள் கறவை மாடுகள் பல வீடுகளில் இருக்கும். பாலுக்குப் பஞ்சமே இருக்காது. மாலையில் மாடுகள் மேய்ச்சல் முடிந்து எந்த வீட்டில் கூட்டமாகப் போய் நிற்கிறதோ அவர்கள் தான் ஊரில் அப்போது பணக்காரர்களுக்கான அடையாளம், எங்கள் ஊருக்கு வந்து கல்வி பயிலும் மாணவர்களுக்கு மூன்று வேலையும் ஒவ்வொரு வீட்டிலிருந்து உணவளிப்பார்கள். பெருநாள் என்றால் காலை 4 மணிக்கே மறைந்த ஹசன்பாய் ஹஜ்ரத்தின் குரல் மசூதியில் ஒலிக்கத்துவங்கிவிடும் அது உற்சாக பெருவெள்ளத்துடன் எங்களை எழுப்பி விட்டுக் குளித்து புத்தாடைகளை அணிவித்து விடும். சாதி மதம் இனம் மொழி என்ற பாகுபாடும் வெறுப்பும் எங்கள் ஊரில் எட்டி கூட பார்த்தது இல்லை.

உலகமயமாதல், நவீனமயமாதல், கார்ப்பரேட்டுகள், ரியல் எஸ்டேட் தொழில், அட்வடைஸ்மன்ட், மார்கெடிங், LCD Tv, இப்படி நிறைய வார்த்தைகள் உலகில் எல்லோருக்கும் போல எங்களுக்கும் அடையாளப்படுத்தப்படுத்தப்பட்டது. அந்த வளர்ச்சியில் வெளிநாடு சென்று வேலை தேடுவது வெளி ஊர் சென்று துணி வாங்குவது.

வெளிமாநிலங்களுக்குச் சுற்றுலா செல்வது. வெளி ஊருக்கு மருத்துவம் செல்வது. ஊரில் கடை திறக்க வெளிஊரில் தலைவர்களை அழைப்பது, ஏன் கல்யாண பிரியாணிக்குக்கூட வெளியூர் சமையல்காரரை அழைப்பது இப்படி வெகு தூரம் ஓடியவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதும், ஊரை இப்போது தான் பார்க்கிறார்கள். பயிர்செய்த இடங்களில் ரியல் எஸ்டேட்டின் அடையாள கற்கள் மட்டும் தனித்து நிற்க்கிறது.

மூதாதையர்கள் எங்களுக்கு தந்த வளங்கள் குளம் குட்டை வாய்க்கால் எல்லாம் காய்ந்து சாக்கடை ஓடுகிறது. ஆடுகள் கோழிகள் நின்ற இடங்களில் கார்களும் பெரிய தடித்த மோட்டார் சைக்கிளும் நிற்கிறது.

பொருளாதாரமையமாதலில்,நகரமையமாதலில், நவீனமயமாதலில் உலகமே இன்று எல்லாவற்றையும் இழந்து நிற்பது போல நாங்களும் தான். புழுக்கம், பொழுதுபோகல, சரி அந்த பறவைகளுடன் பேசுவோம் என்றால் மரங்கள் இருந்தால்தானே பறவைகள் வருவதற்கு?

ஒரு ஊரில் நீர் நிலைகள் சுத்தமாகவும் மரங்கள் அடர்த்தியாக இருந்தால் எந்த நோய் தொற்றும் அனுகாதாம் அறிவியல் சொல்கிறதை ஒரு சிந்தனையாளர் கூறினார். ரஹமத்துல்லா.

Tags: கட்டுரை லால்பேட்டை

Share this