Breaking News

தப்லீக் மீது சங்பரிவார்களுக்கு ஆத்திரம் ஏன்? வரலாற்றுப் பார்வையுடன் உண்மைகள்...

நிர்வாகி
0

மூன்றாம் உலக மகாயுத்தமாக கருதப்படும் கொரோனா வைரஸ் பரவலை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் முயற்சிக்க நம் இந்தியத் திருநாட்டில் மட்டும் அரசின் மெத்தனத்தால் ஏற்பட்ட இழப்புகளை மறைக்க சங்பரிவாரங்களும் அவர்களின் ஆதரவாளர்களும் கொரோனாவை இஸ்லாம் ஆக்கி பழியை முஸ்லிம்கள் மீது திணித்து வருகின்றனர். அதற்கு இரையாக்கப்பட்டது தான் தப்லீக் ஜமாத்.

"மத தீவிரவாதத்தின் நாற்றங்கால் ஆகவும், உலகின் பயங்கரவாத தாக்குதல்களுக்கு தொடர்புடையதாகவும் தப்லீக் ஜமாத் செயல்பட்டு வந்திருக்கிறது" என தினமணி நாளிதழில் அதன் ஆசிரியர் கே. வைத்தியநாதன் எழுதும் அளவுக்கும், காட்சி ஊடகங்களில் வன்மத்தை வளர்த்து விடும் வகையிலும் விமர்சனங்கள் ஊடக தர்மத்தின் 'எல்லை தாண்டிய பயங்கரவாதமாக' போய்க் கொண்டிருக்கிறது என்றால், மத்திய மாநில அரசுகளும் இதை ஒத்து ஊதி பரப்புரை செய்வது வேதனைக்குரியது.

சங்கப்பரிவார்களுக்கு தப்லீக் மீது ஏன் இவ்வளவு ஆத்திரம்? இந்திய அரசியல் வரலாற்றை நன்கு தெரிந்தவர்கள் அறிந்த விஷயம் அது. நினைவிருக்கிறதா?

மே 26 2014 இந்தியாவின் 15வது பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றதும் முதன் முதலில் சொன்னது, "ஆயிரம் வருடங்களுக்கு பிறகு ஆட்சியதிகாரத்தை மீட்டெடுத்து உள்ளோம்" என்ற வார்த்தைகளைத்தான். இதன் அர்த்தம் எத்தனை பேருக்கு தெரியும் என தெரியவில்லை. கிமு 300 சந்திரகுப்த மௌரியர் காலம் தொட்டு, கிபி 1192 பிரிதிவிராஜ், முகம்மது கோரியால் வீழ்த்தப்படும் வரை ஆட்சியின் மதமாக வருணாசிரமத்தை கூறும் சனாதனமே இருந்து வந்தது. அது மீண்டு வந்த அர்த்தத்தில்தான் மோடி அப்படி கூறினார். அதை நிலைநாட்டவே திட்டமிடுகிறார் செயல்படுகிறார்.

பிரிதிவிராஜின் வீழ்ச்சிக்குப் பிறகு 1857 வரை முஸ்லிம்களின் ஆட்சி பின்னர் 1947 வரை பிரிட்டிஷ்ஷாரின் ஆட்சி. ஆனால் ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி அக்பர் ஆண்டு கொண்டிருந்த 1600 டிசம்பர் 31 லேயே இந்தியாவில் கால் பதித்து விட்டது

ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் கிபி 1875 ஆம் ஆண்டு சுவாமி தயானந்த சரஸ்வதியால் ஆரிய சமாஜம் தொடங்கப்பட்டது. குஜராத்தின் வைதிக பிராமணரான இவர் சனாதன தர்மத்தை வலியுறுத்தும் வேதத்திற்கு திரும்பு என்பதை லட்சியமாகக் கொண்டிருந்தார். கிறிஸ்தவ மதத்தில் இருந்த பல்லாயிரக்கணக்கானோரை இந்து மதத்தில் இணைக்க ஆரிய சமாஜம் முழுமூச்சுடன் செயல்பட்டது. பஞ்சாப் (அன்றைய ஐக்கிய மாகாணம், இன்றைய உத்தர பிரதேசம்) ஆகிய பகுதிகளில் ஆரிய சமாஜம் வேகமாக வளர்ந்தது.

1920இல் சுத்தி இயக்கத்தை தோற்றுவித்த சுவாமி சிரத்தானந்தா, இந்து சங்க தன் இயக்கத்தை துவக்கிய பண்டித மதன் மோகன் மாளவியா 1922இல் இந்து மகா சபையை உருவாக்கி ய பரமானந்தர் வினாயக் தாமோதர் சாவர்க்கர் 1925இல் ராஷ்டிரிய சுயம் சேவக்சன் என்ற ஆர்எஸ்எஸ் தொடங்கிய கேசவ பலிராம் ஹெட்கேவர் போன்ற அனைவருமே ஆரிய சமாஜத்தை சேர்ந்தவர்கள் தான்.

அந்தக் காலங்களில் இவர்கள் தான் காங்கிரசை வழிநடத்தினார். இந்திய பிரிவினைக்கான அடிப்படை காரணத்தை இப்போது நீங்கள் புரிந்து கொள்ளலாம். சுவாமி சிரத்தானந்தா என்ற லாலா முன்சிராம் 1920இல் சுத்தி இயக்கத்தை தோற்றுவித்ததும், 'கர்வாப்ஸி - தாய்மதம் திரும்புதல்' என்ற பெயரில் முஸ்லிம்கள் இந்து மதத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். 1921இல் இது உச்ச கட்டத்தை அடைந்தது.

டெல்லியின் தெற்கே பஞ்சாபின் இம்பாலா மாவட்டமும், உத்தரப் பிரதேசத்தின் மதுரா உள்ளிட்ட பகுதிகளும் அடங்கிய மேவாத் எனப்படும் பகுதியில் இந்த மதமாற்றம் பெருமளவில் இருந்தது. இந்து மதத்திற்கு மாறாத முஸ்லிம்களும் இஸ்லாத்தின் அடிப்படையை அறியாமல் இந்துப் பண்டிகைகளை கொண்டாடுவதும் இந்துக்களின் விசேஷ நாட்களை தங்களின் விசேஷ நாட்களாக ஆக்கிக் கொண்டதும், சுபகாரியங்களுக்கு கூட இந்து புரோகிதர்களை நாடியதும், இந்து தெய்வங்களை தங்கள் குல தெய்வங்களாக வழிபடுவதும் ஆக இருந்தார்கள். அவர்களிடத்தில் மிகப்பெரிய அளவில் மூடநம்பிக்கையும் போதை பழக்கங்களும் குடிகொண்டிருந்தன.

ஆஹா முஸ்லிம்களிடமிருந்து இஸ்லாத்தின் உயிரோட்டம் அழிந்து கொண்டிருக்கிறது என ஆனந்தப்பட்டு சங்பரிவார்கள் இந்த கர்வாப்சி வளர்ந்து இந்தியா முழுவதும் வியாபித்து இந்தியா ஒரே நாடு ஒரே மதம் ஆகிவிடும் என கனவு கண்டனர்.

அந்தக் கனவை தகர்த்தவர் மௌலானா இலியாஸ் (ரஹ்) அவர்கள் ஆவர். இவர் உருவாக்கிய தப்லீக் ஜமாஅத் தான் மதம் மாற்றப்பட்ட முஸ்லிம்களை இஸ்லாத்திற்கு மீட்டுக் கொண்டு வந்தது. அந்த நினைவில் தான் சங்பரிவார் இன்று தப்லீக்கை குறிவைக்கிறது.

கிபி 1885 ல் பிறந்த மௌலானா அவர்கள் 1918இல் ஹஜ்ரத் நிஜாமுதீன் சென்று தமது தந்தை மற்றும் சகோதரரால் நடத்தப்பட்ட மதரஸாவின் நிர்வாகியாகவும் பேராசிரியராகவும் தங்கியிருந்து பணி செய்தார்கள். அப்போதெல்லாம் நிஜாமுதீன் பகுதியில் மக்கள் குடியிருப்புக்கள் இல்லை. மனிதர்களின் நடமாட்டமும் அபூர்வம். அப்படிப்பட்ட இடத்தில்தான் மதரஸா வருமானமின்றி நடைபெற்றது.

இன்று ஹஜ்ரத் நிஜாமுதீன் டெல்லியின் அடையாளங்களில் ஒன்று. ஹஜ்ரத் நிஜாமுதீன் ஒலியுல்லாஹ் தர்காவின் மறுபுறம் இந்த மதரஸாவும் பள்ளிவாசலும் அமைந்துள்ளன. இங்குதான் தப்லீக்கின் தலைமைப்பீடம் அமைந்துள்ளது. சங்க பரிவாரத்தின் கண்களை உறுத்தும் அளவிற்கு பரந்த கட்டிடம் விரிந்த பணிகள் தன்னார்வ தொண்டர்கள்.

மதம் மாற்றப்பட்ட மேவாத் பகுதிகள் என்பது டெல்லியின் தென்பகுதி. பஞ்சாப் மாநிலத்தின் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த இம்பாலா மாவட்டம். இந்திய பகுதிகளாக இருந்த அல்வர் பரத்பூர் இன்றைய உத்தர பிரதேசத்தின் மதுராவின் பகுதிகள் என பரந்து விரிந்த பகுதி. அங்கு மேவ் என்ற

சமுதாயம் வாழ்ந்ததால் இப்பகுதிகள் மேவாத் என்று அழைக்கப்பட்டன.

இந்த மேவாத் பகுதிகளில் மதம் மாறுவதை தடுக்கவும் இஸ்லாத்தை அங்கு நிலைபெறச் செய்யவும் மதம் மாற்றி அழைத்துச் செல்லப்பட்டவர்களை மீண்டும் இஸ்லாத்திற்கு கொண்டுவரவும் பலராலும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், அவை படிப்படியாக குறைந்து முயற்சிகள் பலனின்றி நின்று போயின.

மௌலானா இல்யாஸ் ரஹ் அவர்கள் 1924 களில் மக்தப் மதரஸா மூலம் மார்க்கத்தை நிலைநாட்ட முயன்றும் எதிர்பார்த்த ஒத்துழைப்பும் பயனும் கிடைக்கவில்லை. எத்தகைய பிரதிபலனையும் எதிர்பாராமல் நம் சொந்த செலவில் செய்யும் பணிகளுக்கு அல்லாஹ்விடம் மட்டுமே கூலி உண்டு என்று நம்பக்கூடிய தன்னார்வலர்களின் உழைப்பு கிடைத்தால் மட்டுமே சாதிக்க முடியும் என அவர்கள் நம்பினார்கள்.

1926 அக்டோபர் 20 இல் புனித ஹஜ் பயணம் முடித்து திரும்பிய அவர்கள் தப்லீக்கின் இரு தூண்களில் ஒன்றான கஸ்த் அமலை தொடங்கினார்கள். பள்ளிவாசலில் தங்கி இருந்து மூன்று பேருக்கு குறையாமல் சென்று அந்தப் பகுதியில் முஸ்லிம்களை சந்தித்து இஸ்லாமிய மார்க்க கடமைகளை நளினமாக சொல்லும் இந்த செயலை தொடர்ந்து, நாளடைவில் பள்ளிவாசல்களில் தொழுகைக்குப்பின் செய்யப்படும் தஃலீம் என்ற பிரச்சாரமும் விரிவடைய ஜமாஅத்துகள் தயாராகி ஊர்கள் தோறும் தப்லீக் பணிகள் நடைபெற்றன.

இந்தப் பணிகளை திட்டமிடவும் விரிவுபடுத்தவும் இஜ்திமாக்கல் என்ற மாநாடுகள் நடைபெற்றன. முதலாவது இஜ்திமா 1941 நவம்பர் 28 29 30 ஆகிய மூன்று நாட்கள் இம்பாலா பகுதியின் குட்காவுன் மாவட்டம் நூஹ் ஊரில் நடைபெற்றது. அந்த காலத்திலேயே 25,000 பேர் கலந்து கொண்டனர். இன்று தப்லீக்கின் சேவை உலகம் முழுவதும் விரிவடைந்து பல நாடுகளில் இது இஜ்திமா மாநாடுகள் நடைபெறுகின்றன. ஆண்டுதோறும் வங்க தேசத்தில் நடைபெறும் இஜ்திமாவில் 20 லட்சத்திற்கும் மேல் முஸ்லிம்கள் கூடுகிறார்கள். புனித ஹஜ்ஜூக்குப்பின் மக்கள் அதிகம் கூடுவது இந்நிகழ்வில் தான் என வர்ணிக்கப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் கோத்ராவில் நடைபெறும் இஜ்திமாவில் 10 லட்சம் பேர் வரை கூடுவதாக சொல்லப்படுகிறது. இதை தடுக்கவே கோத்ரா ரயில் எரிப்பும் 2002 குஜராத் கலவரமும் என்று கூட கூறப்பட்டது.

போஸ்டர் நோட்டீஸ் பத்திரிகை தொலைக்காட்சி என எந்த விளம்பரமும் இல்லாமல் பல லட்சம் மக்களை ஒரு இடத்தில் ஒன்று திரட்டுவதும், எத்தனை லட்சம் மக்கள் கூடினாலும் அந்த மூன்று நாள் மாநாடுகளில் எத்தகைய பாதுகாப்பும் தேவைப்படாமல் எந்த பிரச்சனையுமின்றி ஒழுங்கு கட்டுப்பாட்டுடன் மாநாடுகள் நடத்தவும் உலகில் தப்லீக் ஜமாஅத்தால் மட்டுமே முடியும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

3 நாள், 40 நாள், 4 மாதம் என அவரவருக்கு ஏற்ற வகையில் சொந்த செலவில் ஜமாஅத்தாக பயணம் மேற்கொண்டு பள்ளிவாசல்களில் தங்கி சுயமாக சமைத்து சாப்பிட்டு எளிமையாகவும், பொறுமைசாலிகலாகவும் நடந்துகொள்ளும் தப்லீக் ஜமாஅத்தார் 1. அல்லாஹ்வையும், நபிகள் நாயக தூதையும் நம்புதல் 2. தொழுகையை மேற்கொள்ளல் 3. மார்க்க அறிவு பெறுதல், இறை தியானம் செய்தல் 4. சகோதரர்களிடம் மரியாதையாக நடத்தல் 5. உளத்தூய்மை 6. நேரத்தில் ஒரு பகுதியை ஜமாஅத்துடன் சேர்ந்து மார்க்கப் பணி செய்தல் என்ற 6 அம்ச திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே செயல்படக்கூடியவர்கள் தப்லீக் ஜமாஅத்தினர்.

"முஸ்லிம் அல்லாதவர்களிடம் இஸ்லாத்தை எத்திவைப்பதில்லை, முஸ்லிம்களுக்கு எதிரான செயல் திட்டங்களில் அரசை எதிர்த்துப் போராடுவதில்லை, எவ்வளவு இழப்புகள் ஏற்பட்டாலும் அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என அடங்கி போய்விடுகிறார்கள், போராட்ட குணமோ, எதிர்வினை ஆற்றுதலோ இல்லை, எவ்வளவு பெரிய மாநாட்டிலும் இஸ்லாமிய மார்க்கத்தை தாண்டி வேறு விவகாரங்களை பேசுவதோ வெளிப்படுத்துவதோ இல்லை" என்று தப்லீக் ஜமாத்தை பற்றி முஸ்லிம்களில் பலர் வெளிப்படையாக விமர்சிப்பது வழக்கம்.

அப்படிப்பட்ட தப்லீக் ஜமாஅத்தை உயிர் பறிக்க போராடும் கொரோனா ஜிகாதிகள், தீவிரவாதத்தின் நாற்றங்கால், பயங்கரவாதத் தாக்குதல்களை செய்பவர்கள் என்றெல்லாம் விமர்சிப்பவர்கள் அடிப்படை அறிவற்றவர்கள் அல்லது இஸ்லாமிய ஃபோபியாவால் பாதிக்கப்பட்டவர்களாகத்தான் இருக்க முடியும்.

தப்லீக் ஜமாஅத் பணிகள் முன்கூட்டியே திட்டமிட படுபவை. அந்த அடிப்படையில் டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீனில் நடைபெற்ற தப்லீக் நிகழ்வில் கலந்துகொண்டு திரும்பிய அப்பாவிகள் பலர் தான் பிப்ரவரி டெல்லி கலவரத்தில் இந்துத்துவ பயங்கரவாதிகளால் உயிர்பலி ஆக்கப்பட்டவர்கள் என்பது மறைக்கப்பட்ட செய்தி.

மார்ச் 22, 2020 பிரதமரால் அவசரமாக அறிவிக்கப்பட்ட மக்கள் ஊரடங்கு மார்ச் 23 முதல் 31 வரை வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்து டெல்லி முதல்வர் அறிவித்த திடீர் அறிவிப்பு என்ற குளறுபடிகள் அனைத்தையும் நிலைகுலையச் செய்தன.

தப்லீக் தலைமையகத்தில் தங்கியிருந்த மற்றும் அன்று வந்திறங்கிய ஆயிரக்கணக்கானோர் வெளியேற முடியாத நிலை - எங்கள் சொந்த செலவில் வாகனத்தில் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கிறோம். அனுமதியுங்கள் என்ற வேண்டுகோள் மத்திய மற்றும் டெல்லி அரசுகளால் கண்டுகொள்ளப்படாத நிலை அசாதாரண சூழ்நிலையை உருவாக்கியது. டெல்லி தப்லீக் தலைமையகத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கான சேவை மாதம் மார்ச் என்பதால் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

முன்னெச்சரிக்கை விஷயத்தில் தப்லீக் தலைமையகம் கவனக்குறைவாக இருந்துள்ளதை மறுப்பதற்கில்லை. ஆனால் ஒரு கொடிய வைரஸ் வேகமாக பரவுகிறது என்றால் அதை தடுப்பதற்கான முன்முயற்சிகளை மத்திய மாநில அரசுகள் செய்யவில்லை. அதை என்ன சொல்லுவது? மக்கள் ஒன்று கூடலை தடை செய்யாதது, வெளிநாட்டு பயணிகள் வருகையை தடுக்க தவறியது யார் குற்றம்?

சீனாவின் வூகான் நகரில் மர்ம நோயால் 2019 டிசம்பர் 10 அன்று ஒருவர் பாதிக்கப்பட்டு, அது இருபதே நாட்களில் பலருக்கு பரவி 2020 ஜனவரி 7ல் அது கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சார்ந்தது என கண்டுபிடித்து என்கோவிட் - 2019 என பெயரிடப்பட்டு சீனா அறிவித்தது. 2020 ஜனவரி 30 அன்றே அது வூகானில் இருந்து திரும்பிய மாணவரால் இந்தியாவிற்கு காலடி எடுத்து வைத்து அப்போதே உலகில் 1000 பேருக்கு மேல் பரவியதால் சர்வதேச எமர்ஜென்சியாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு வெளியிட்டது.

ஜனவரி 31-க்குள் அமெரிக்கா, ரஷ்யா, ஸ்பெயின், இங்கிலாந்து எனபரவி பின்னர் பிரான்ஸ், இத்தாலி எனப் பல நாடுகளுக்கும் பரவியது. இதற்கு சிகிச்சை இல்லை என உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளில் எச்சரித்தது.

இப்படிப்பட்ட நெருக்கடி நிலையில் இந்தியாவை பற்றி கொஞ்சம் கூட கவலை படாமல் தாஜ்மகாலை பார்க்க ஆசைப்பட்ட டிரம்ப் மனைவிக்காக அமெரிக்க அதிபர் ரொனால்ட் டிரம்ப்பை வரவேற்க பிரதமர் நரேந்திர மோடி தடபுடல் ஏற்பாடுகள் செய்து குஜராத்தில் பிப்ரவரி 24 ல் லட்சக்கணக்கானவர்களை திரட்டி நிகழ்ச்சியை நடத்த அதே சமயத்தில் பாஜகவினர் டெல்லியை கலவர பூமியாக்க கொரோனாவை யாரும் கண்டுகொள்ளவில்லை.

மார்ச் 22 இல் ஒருநாள் மக்கள் ஊரடங்கு, மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை தேசிய ஊரடங்கு என மோடி அறிவித்த அதே நாட்களில், மத்திய பிரதேச அமைச்சரவை கவிழ்ப்பு, புதிய அரசு பதவியேற்பு, ராமர் கோவில் அடிக்கல் நாட்டல் என்றெல்லாம் நிகழ்ச்சிகள் நடந்து செய்திகள் வெளிவந்து அதனால் டெல்லியில் இருந்தவர்களும் அலட்சியமாக இருந்து விட்டனர்.

ஆக மத்திய பாஜக அரசின் அலட்சியமே கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணம் என்பதை மறைக்க தப்லீக் ஜமாத் மீது மட்டும் பலி கூறப்படுகிறது. மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இன்று கொரோனா வைரஸால் 122 பேர் பாதிக்கப்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒருவர் கூட டெல்லி தப்லீக் மாநாட்டிற்கு சென்றவர்கள் இல்லை. ஊடகங்கள் இவைகளை இருட்டடிப்பு செய்து ஒருதலைப்பட்சமாக செய்தி பரப்புவது எந்த வகையில் நியாயம். - காயல் மகபூப் -

Tags: கட்டுரை

Share this