Breaking News

இது போலேவே இருப்போம்.... : யாசிர் ஹசனி

நிர்வாகி
0

தனக்கான கட்சி, தனக்கான தலைவன், தனக்கென்று ஒரு கொள்கை இப்படிப்பட்ட அடையாள வட்டத்திற்குள் வட்டமிட்டுக் கொண்டிருந்தது நம் சமூகம்.இந்த நிலை நீடித்தால்.. " அருங்காட்சியகத்தில் வைத்துத்தான் வருங்கால தலைமுறைகளுக்கு ஒற்றுமை என்ற பதத்தை அடையாள காட்டப் போகின்றோமோ? என்ற‌ எண்ணவோட்டம் ஒவ்வொரு மனதிலும் குருதி ஓட்டமாய் ஓடிக்கொண்டிருந்தது". ஆனால், இதை எல்லாம் தகர்த்து எறிந்தது நம் இளைஞர்களின் எழுச்சி.

இஸ்லாத்திற்கும்,இஸ்லாமியர்களுக்கும் எதிராக வன்சொற்கள் பரவிய போது, தேசியக் கொடிக்குக் கீழ் நம் இளைஞர்கள் எழுந்த வேகம்..! அரபு வசந்தத்தை பின்னுக்குத் தள்ளியது...

அந்த வேகத் தீ பரவி உச்சத்தை அடையும் போது, உலகைத் தனது ஆக்டோபஸ் கைகளால் தன் கட்டுப்பாட்டிற்குக் கீழ் கொண்டு வந்த கொரோனா தொற்று நோய் தண்ணீர் பீச்சி அடித்து அணைத்தது. இந்த ஒற்றுமையின் தீயை அணையாமல் ஒலிம்பிக் தீபம் போல் பாதுகாக்க வேண்டும்.

இந்த ஒற்றுமை இத்தோடு நில்லாமல் சீனச் சுவராய் நீளவேண்டும் . கொரோனா தொற்று கோர முகத்தால் உலகைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கோரதாண்டவம் ஆடி இதை கலைத்தாலும்,."நமது வாழ்வில் பல மாற்றங்களுக்கு மடை மாற்றிருக்கிறது".

மருத்துவமனைகளுக்கு மட்டுமே நமது பொருளாதாரம் அதிகம் செலவாகிறது .

கொரோனா ஊரடங்கு வரும் முன்பு தலைவலிக்குக் கூட மருத்துவரைப் பார்த்து வருவது நமது வழக்கம்.. சென்னை, கடலூர், திருச்சி என்று வெளியூர்களுக்குச் சென்று மருத்துவம் பார்க்கும் பணம் படைத்தோர் பலர் நம்மில் இருக்கிறார்கள். "ஒரு பெண் கருவுற்றால்..! அரசு மருத்துவமனையில் குழந்தை பிறப்பதை ஏதோ நம் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படும் என்பதற்காக ,தனியார் மருத்துவமனைகளை அணுகுகின்றோம். தனியார் மருத்துவமனைக்கும்,வாகன வாடகைக்கும் குறைந்தபட்சம் ஒவ்வொரு மாதமும் மூன்றாயிரம் செலவாகிறது.."

"ஸ்கேன் முதல் அனைத்து சோதனைகளுக்கும் குறைந்தபட்சம் நாற்பதாயிரத்தைத் தொட்டுவிடுகிறது. பின்பு, பிரசவ நேரத்தில் மருத்துவருக்கு மட்டுமே ஐம்பதாயிரம் மொத்தமாக கொடுக்க வேண்டும்.மற்ற செலவுகள் பத்தாயிரத்தைத் தொட்டுவிடும்..அது தனி கணக்கு".

ஆனால், ஊரடங்கு நேரத்தில்..! உள்ளூர், வெளியூர் மருத்துவமனைகளுக்குச் செல்லாமல் கால் வலி,தலை வலி , காய்ச்சல் இவை அனைத்தின் நிவாரணத்தை நுகர்கின்றோம்.

அதேபோன்று, தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சையில் பிறக்க வேண்டிய குழந்தைகள் இன்று, அரசு மருத்துவமனையில் கத்தியின்றி பிறக்கின்றன. தனியார் மருத்துவமனையில் மட்டுமே எல்லாம் சரியாகும்‌ என்பதும் ஒரு வித மனநோய்.. "அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டாம்." என்று போகிற போக்கில் யாரோ கூறியதை வேதவாக்காக எடுத்து நாம் எவ்வளவு பொருளாதாரங்களை வீணடித்தோம்? என்று நாம் ஒவ்வொருவரும் சுய கணக்குப் போட்டு தவற்றை உணர்ந்து மாற்றிக் கொள்ள வேண்டிய தருணம்.. "வேலை என்றால் வெளிநாட்டு வேலைத்தான்"என்று கூறி வந்த நம் மக்கள். இன்று சுயமாக ஊரிலேயே வேலை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.. "சைக்கிள் டீ, வீடுகளில் வடை, பஞ்ஜி போட்டு தற்சார்பு தொழில்களைக் கையில் எடுத்துள்ளார்கள்" இந்த நிலை தொடர வேண்டும்."கடல் கடந்து தெரியும் வெளிச்சம், நம் வீட்டருகில் தெரிய வேண்டும்".

"நமதூரில் பல துணிக்கடைகள் இருந்தாலும், சென்னைப் போன்ற பெரும் நகரங்களில் துணிகள் வாங்கினால் தான் பெருநாள் போகும் என்பது நாம் வகுத்த விதி".இப்போது என்ன செய்யப் போகிறோம்? நமதூரில் துணிகள் வாங்கினாலும் பெருநாள் நாம் கொண்டாட முடியும் என்பதை கோரோனா பாடம் கற்றுக் கொடுக்கிறது."நமதூரில் நமக்காகத் தொடங்கி வணிகம் நடத்தும் அன்பர்களிடம் வணிகம் செய்து பெருநாள்‌ கொண்டாடுவோம்" . தனியார் மருத்துவமனையில் நம் பொருளாதாரங்களை வீணடிக்காமல், அரசு மருத்துவமனைகளை இப்போது போல எப்போதும் பயன்படுத்துவோம்.. எங்களைப் போன்று வெளிநாடுகளை நம்பாமல் தற்சார்பு தொழில்களை முன்னெடுப்போம்.

கொரோனாவை மட்டுமே விரட்டி அடிப்போம்..கொரோனா கொடுத்த பாடங்களை, நம் நாள் குறிப்பில் இணைத்துவிடுவோம்..இது போலேவே இருப்போம். நமது பொருளாதாரம் சீரழியாமல் பாதுகாப்போம். A.H.யாசிர் ஹசனி 01/05/2020

Tags: கட்டுரை

Share this