Breaking News

இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த பேராசிரியர்

நிர்வாகி
0

ஒரு ஏகாந்த மாலை நேரத்தில் எனக்கு அருகில் உள்ள பள்ளிவாசலைக் கடந்து சென்ற போது ஒரு பிறைபோல என் நெஞ்சத்தில் உதித்த பெயர்தான் நம்மை விட்டு மறைந்த சம்சுல்மில்லத் அல்லாமா ஜெக்கரியா ஹஜ்ரத் கிப்லா அவர்கள்.

ஒரு மனிதரை நினைவுகூர்வதற்கு சமூகத்தில் ஏதேதோ காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஹஜ்ரத் அவர்களை நினைவு கூற ஒரேயொரு முக்கியக் காரணம் இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த மார்க்கத்தின் எளிமையேயும் வாழ்வையும் உணர்த்திச்சென்ற ஒரு ஆசிரிய பெருந்தகை ஒரு வழிகாட்டி என்பதுதான்.

பொதுவாக மார்க்க விசயங்களை எழுதுவதும், பேசுவதும், பிறருக்குப் போதிப்பதும் மட்டுமே அவர் ஒரு சிறந்த அறிஞர் என்றோ..? இறைநேசர் என்ற உயரிய அந்தஸ்தை எல்லாம் அடைய முடிவதில்லை. ஒரு முறை வார்த்தை சித்தர் வலம்புரிஜான் பேசும்போது சொல்லுவார் யாருடைய எழுத்தும் பேச்சும் தான் கூறுவது போல் தன் வாழ்வும் செயலும் உள்ளதோ அவர்தான் உன்மையான எழுத்தாளர் என்பார் இது எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல கல்வியும் மார்க்கத்தையும் போதிக்கும் மனிதர்களுக்கு இது பொருந்தும்,

ஹஜ்ரத் அவர்களின் மெலிதான உருவமும் முகத்தில் படர்ந்த நீண்ட தாடியும், வெள்ளாடையில் தோன்றும் அவருடைய அழகிய உருவமும் வானில் பறக்கும் சமாதான வெள்ளைப்புறாக்கள் கூட இவரிடம் வாழ்த்து பெற்றுச்செல்லும் தோற்றம் உடையவர்.

தன் குழந்தைப் பருவத்திலேயே திருக்குரான் ஓதுவதில் நாட்டம் இருந்ததும் லால்பேட்டை மன்பவுல் அன்வாரின் அரபுக்கல்லூரியில் ஏழாண்டுகள் ஓதி 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அல்லாமா அமானி ஹஜ்ரத்அவர்களின் கரங்களால் பட்டம்[சனது] பெற்று, பின்பு உயர் கல்வியும் பயின்று அதே கல்லூரியில் ஆசிரியராக தன் பணிகளைத் தொடங்கியவர். 1947 ஆம் ஆண்டிலிருந்து 1977 ஆம் ஆண்டு வரை பேராசிரியராக பணியாற்றியவர் அப்போதைய மன்பவுல் அன்வாரின் முதல்வர் [நாஜிர்] கைருல் மில்லத் அல்லாமா அப்துல்லாஹ் ஹஜ்ரத் இறைவன் அழைப்பை ஏற்ற பிறகு நமது ஜெக்கரியியா ஹஜ்ரத் அவர்கள் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஹஜ்ரத் அவர்களின் வாழ்க்கை என்பது ஒரே நேர்க்கோட்டில் பயணித்த தூய நீரோடை போன்றது. பொதுவாக இறைநேசர்கள் என்பவர் யார் என்றால் உலக இன்பத்திற்கு அதிக நாட்டம் உடையவராக இருப்பதில்லை. அதுபோலவே ஹஜ்ரத் அவர்களும் பள்ளிவாசல் அதனோடுள்ள மதரசா அதிலிருந்து சில அடிதூரமுள்ள அவருடைய இல்லம் அவ்வளவு தான் அவருடைய உலகம். இதைத்தாண்டி அவருடைய உலகம் என்பது எதுவும் இல்லை. ஒரு கங்காரு எப்படி தன் குட்டியை தன்மடியில் வைத்துப் பாதுகாக்குமோ அதேபோன்று இவருடைய வாழ்வு முழுவதும் மன்பவுல் அன்வாரின் கல்விப்பணியிலேயே கழிந்தது.

தமிழகத்தில் உள்ள முக்கியமான ஊரின் கல்லூரியின் முதல்வர், ஊருக்கு எந்த அரசியல் கட்சித் தலைவர்கள் வந்தாலும் இவரிடம் வந்து வாழ்த்தும் துவாவும் பெற்ற பிறகே தங்கள் நிகழ்ச்சிக்குச் செல்வார்கள். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஊர்களில் உள்ள பள்ளிவாசல்களைத் திறந்து வைத்த பெருமைக்குரியவர். சுற்றுவட்டாரத்தில் இவர் இல்லாத ஒரு நிகழ்ச்சிக்கான மேடையிருக்காது. இவ்வளவு பேரும் புகழும் இருந்தும் இவருடைய வாழ்க்கை எவ்வளவு சுத்தமானது எவ்வளவு நேர்மையானது என்பதை இவருடைய வாழ்வும் வாழ்ந்த வீடும் சாட்சியாக சொல்லும்.

ஒருமுறை லால்பேட்டை தோப்புத்தெருவில் ஒரு எளிமையான ஏழையின் வீட்டின் விசேஷத்திற்கு வருகிறேன் என்று ஒப்புதல் தந்து இருந்தார்கள் அதே தேதியில் பெங்களூருவில் ஒரு முக்கியமான நிகழ்ச்சி இருக்க, இல்லை நான் வரமுடியாது நான் வேறொரு இடத்தில் வாக்கு கொடுத்துவிட்டேன் என்று சொல்ல என்ன செய்வதென்று அறியாமல் தவித்த நிகழ்ச்சியாளர்கள் ஊர் ஜமாத்தினரோடு அந்த வீட்டிற்குச் சென்று உங்கள் வீட்டின் விசேஷ தேதியை மாற்றி வைக்கமுடியுமா ஹஜ்ரத் அவர்கள் எங்கள் நிகழ்ச்சியில் பங்கு பெறவேண்டும் என விரும்புகிறோம் எனக் கூற, அந்தவீட்டாரும் ஒன்றும் முக்கியமான நிகழ்ச்சி இல்லை நாங்கள் தேதியை மாற்றிக்கொள்கிறோம் என மாற்றிய பிறகு அந்த வீட்டார் வந்து சொன்னபிறகுதான் ஹஜ்ரத் அவர்கள் அந்நிகழ்ச்சிக்குப் போயிருக்கிறார்.

தன்னுடைய வீட்டிற்கும் மதரசாவிற்க்கும் எப்போதும் நடந்தே செல்லும் பழக்கத்தை தன் வாழ்நாட்கள் முழுவதும் பழகிக்கொண்டவர். பெருமழை காலங்களில் தெருவழியெங்கும் மழைநீர் ஓடும் போது கூட கையில் ஒரு குடைபிடித்துக்கொண்டு ஒரு குழந்தையைப்போலக் கால்களை நனைத்தவாறே மதரசாவிற்கு வந்து விடுவார். தன் வாழ்நாட்களில் வாங்கிய சம்பளத்தை ஒரு நாள்கூட எண்ணிப்பார்த்ததே கிடையாதாம். அதே அப்படியே வாங்கி ஒருமாணவனிடம் தந்து வீட்டில் கொடுத்து விட்டு வா என்பாராம்..! பொதுவாக அவருடைய மாணவர்கள் அவரோடு மிக இலகுவாகப் பேசும் பழக்கம் உடையவர்கள். மாணவர்கள் என்பதைவிட தன் குழந்தைகள் போலப் பேசும் பழக்கம் உடையவர்.

உங்கள் தாயின் காலடியில் தான் சொர்க்கம் இருக்கிறது என்றார் நம் பெருமானார் ஸல் அவர்கள். ஹஜ்ரத் தன் தாயாரைப் பெரிதும் மதித்தவர் எந்தளவுக்கென்றால் அவர்கள் இருந்தவரை எப்போது வீட்டிற்கு வந்தாலும் தன் தாயாரிடம் சென்று அன்றைய முக்கியமான விசயம் குறித்து செய்திகளைப் பகிர்ந்து கொள்வார்களாம். இறைநேசர்கள் எப்போதும் அதிகம் பேசாமல் மவுனத்தை கடைப்பிடிப்பார்கள் அது போல ஹஜ்ரத் அவர்களும் அமைதியாவார். ஊர் மக்கள் ஏழை பணக்காரன் என்று யார் தங்கள் விசேஷங்களுக்கு அழைக்கச்சென்றாலும் அவர்களுடைய குடும்பம் சூழல் என அனைத்தையும் விசாரிப்பார்கள். நாம் அவருக்கு நம்மைப் பற்றி தெரியாது என நினைத்திருப்போம் ஆனால்..! நம்மைப்பற்றி அனைத்தும் அறிந்து வைத்திருப்பார்கள்.

தன் வாழ் நாட்களை அர்த்தமுள்ளதாக மார்க்கப்பணி, கல்விப்பணி என்று ஒரு இறை நேசராக மட்டுமே வாழ்ந்தவர். தன் இறுதி மூச்சுவரை எளிமையின் அடையாளமாகவே திகழ்ந்து மறைந்தவர். சில நாட்கள் முன்புவரை கூட பெருமழை காலங்களில் அவர் வீட்டின் மண் சுவரில் முளைத்த சிறு செடிகள் கூட இதயம் போலத் தெருவில் போய் வருவோர்க்கும் தலையசைத்துக்கொண்டிருந்தது.

பெரும் செல்வந்தர்கள் அவர் ஒரே ஒரு வார்த்தை “ம்” என்று ஒப்புக்கொண்டால் ஒரு மாளிகையைக் கூட கட்டித்தரத் தயாராக இருந்தும் தனக்காக இறைவனைத்தவிர யாரிடமும் கேட்டுப்பெறாத இறைநேசர். ஹஜ்ரத் அவர்களைப்பற்றி எழுத

அவ்வாழ்வின் அழகிய பக்கங்கள் இன்னும் ஏராளம் இருக்கின்றது. இதில் அவர்களுடைய எளிமையின் சில பக்கங்களைமட்டும் எடுத்து எழுத்தாக்கியுள்ளேன்.. இறைவனின் சுவனப்பூஞ்சோலையில் துயில் கொள்ளும் இந்த இறைநேசரின் வாழ்த்தும் துவாவும் நமக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் நாமும் அவர்களுக்காய் பிரார்த்திப்போம். ரஹமத்துல்லா.

Tags: கட்டுரை

Share this