Breaking News

இப்படிப்பட்ட முன்மாதிரிகளைத் தான் உருவாக்க வேண்டும். : CMNசலீம்

நிர்வாகி
0

உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் முஸ்லிம் சமூகத்திற்கு முன்மாதிரி அறிஞர்களை விஞ்ஞானிகளை உருவாக்க வேண்டும். முன்மாதிரிகள் தான் வளர்ந்துவரும் இளைஞர்களை ஈர்க்கும் இலக்காக இருப்பார்கள். இன்றைய உயிரி தொழில்நுட்ப உலகில் சாதனைப்படைத்து உலகளவில் மிளிரும் விஞ்ஞானிகள் ஒருசிலர் முஸ்லிம் சமூகத்தில் உருவாகி வந்தால், அந்த விஞ்ஞானிகள் இஸ்லாமிய கலாச்சாரத்தில் பிடிப்பும் பற்றும், கரைந்துபோகாத தன்மையும் இருந்தால், அவர்களை அப்படியே பின்பற்றி நூற்றுக்கணக்கான மாணவர்கள் சமூகத்தின் கடைமடையிலிருந்து உருவாகி வருவார்கள். இது ஒரு சமூகம் நிலையான வளர்ச்சியை பெறுவதற்கான அடிப்படை சமூகவியல் கோட்பாடு . நவீனகால முன்மாதிரிகள் அதிகம் இல்லாத இன்றைய இந்திய முஸ்லிம் சமூகத்தில் அப்படிப்பட்ட சிறந்த முன்மாதிரி விஞ்ஞானிகளை உருவாக்குவது தான் நமது முதன்மையான சமூகப்பணியாக இருத்தல் வேண்டும்.இது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.ஆனால் அது இம்மை மறுமைக்கான மற்றுமொரு வெற்றிப்பாதை.

ஏழ்மையான பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த அலி இபின் சீனா என்ற உயிரிதொழில்நுட்ப ஆராய்ச்சியாளன் புற்றுநோய் அறிதலில் மிக முக்கியமான நுட்பத்தை கண்டுபித்துள்ளதை நாம் கவனிக்க வேண்டும்.மார்பக புற்றுநோய், வாய்ப்புற்றுநோய், குடல் புற்றுபோய் என்று புற்றுநோய்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனித்துவமான மரபணுவை கொண்டிருப்பதால் எந்த வகையை சேர்ந்தது என்பதை குறிப்பிட்டு அறிவதற்கு பெரும் காலதாமதம் ஏற்பட்டது. அதற்கான செலவுகளை ஏழை மக்கள் தாங்க இயலாத வகையிலும் இருந்தது.

இதற்கு தீர்வளிக்கும் விதமாக 10 நிமிடத்திற்குள் அது எந்த வகையான புற்றுநோய் என்று கண்டறியும் மிக இலகுவான ஒருங்கிணைந்த ஆய்வு நுட்பத்தை இளம் ஆராச்சியாளர் அலி இபின் சீனா அவர்கள் கண்டுபிடித்துள்ளார். மத்தியகால முஸ்லிம் மருத்துவ விஞ்ஞானியின் பெயரை கொண்டிருக்கும் இவரது சாதனை, வறுமை நிறைந்த பங்களாதேஷ் நாட்டின் மாணவர்களுக்கு உயிரி ஆராய்ச்சித்துறையில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவரைப் போன்றவர்கள் தான் இன்றைய உயிரி தொழிநுட்ப உலகின் முன்மாதிரிகள். இப்படிப்பட்ட முன்மாதிரிகளைத் தான் தமிழக முஸ்லிம் சமூகத்திலிருந்து உருவாக்க வேண்டும். நம்முடைய அறிவு மற்றும் பொருளாதார வளங்களை அதிகமதிகம் இதுபோன்ற ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுவோருக்கு செலவிடப்பட வேண்டும்.

கல்வி மற்றும் சமூகப்பணிகளில் ஈடுபட்டுள்ள ஆர்வலர்கள் அறக்கட்டளைகள் அமைப்புகள் இதுபோன்ற இலக்கு நிர்ணயித்த ஆராய்ச்சிகளுக்கு உதவி செய்தால் அடுத்துவரும் காலங்களில் முஸ்லிம் உம்மத்தில் எத்தகைய மாற்றங்கள் நிகழும் என்பதை உங்களது சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

Tags: பயனுள்ள தகவல்

Share this