நோய்ப் பாதுகாப்பு..!
நோய் என்பது இறைவன் மூலம் வரக்கூடியவை இதைத்தான் இஸ்லாம் கூறுகிறது. இறை நம்பிக்கையில் இதுவும் ஒன்று.மனித சமூகத்தை அல்லாஹ் சோதிப்பது மனிதனின் இறைநம்பிக்கையை அளவிட என்பதாக நபி மொழி நமக்கு வழி காட்டுகிறது. இறை சோதனை என்பது நபிமார்களையும் விட்டுவைக்கவில்லை.நபி மார்களும் சோதிக்கப்பட்டார்கள்.
பெரும் வெள்ளத்தைக் கொண்டு நூஹ் (அலை) அவர்கள் சோதிக்கப்பட்டார்கள். நெருப்பைக் கொண்டு இப்ராஹிம்(அலை) அவர்கள் சோதிக்கப்பட்டார்கள். யூசுப் நபி யின் பிரிவால் பார்வை இழந்து யாக்கூப் (அலை) அவர்கள் சோதிக்கப்பட்டார்கள்
தன் பிரியமான தந்தை யாகூப் நபியை பிரிந்து யூஸுப் (அலை) அவர்கள் சோதிக்கப்பட்டார்கள். கடும் நோயால் அய்யூப் (அலை) அவர்கள் சோதிக்கப் பட்டார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்களும் சோதிக்கப்பட்டார்கள் .. அவர்களின் தோழர்களும் சோதிக்கப்பட்டார்கள். அத்தனை சோதனை காலகட்டங்களிலும் அல்லாஹ்விடம் மட்டுமே பாவ மன்னிப்பு கேட்டு, பாதுகாப்புக்கு கோரிக்கை வைத்தார்கள்.
இந்த வகையில் கொரோனா போன்ற தொற்று நோய்களும் இறை சோதனைதான். இந்த நேரத்தில் நம் இறை நம்பிக்கைக்குப் பாதகம் ஏற்படாதவாறு நாம் பார்ததுக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் சோதனை காலங்களில் குர்ஆன் ஓதுவதும்,நபி மொழிகளில் உள்ள துஆ களை படித்தும்,பாவ மன்னிப்பு கேட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்பதுதான் நபி(ஸல் ) அவர்களின் செயல்களாகவும்,நபித் தோழர்களின் செயல்களாகவும் இருந்தன. இந்த நேரத்தில் நாமும் இதைத்தான் பின்பற்ற வேண்டும்.
நோய்களை விட்டுப் பாதுகாப்பு கேட்கின்றேனென்று புதிய,புதிய வழிகளைத் தேடுதல் கூடாது.புதிய கலாச்சாரத்திற்கு மக்களை மடை மாற்ற கூடாது.நோய்கள் காலத்தில் குர்ஆன், ஹதீஸ் பக்கம் மக்களை கொண்டு செல்ல வேண்டும்.
சோதனையான நேரத்தில் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற வழிமுறைகளை இஸ்லாம் நமக்கு வகுத்த கொடுத்துள்ளது.
இதற்குதான் நபிமார்களின் வரலாறுகளும், சஹாபாக்களின் வரலாறுகளும் நமக்கு முன் பாதை வகுத்து நிற்கின்றன.அதனைச் சரிவர பின்பற்றினாலே இந்த சோதனை காலங்களில் நாம் வெற்றி பெற்றுவிடலாம். யாசிர் ஹசனி 17/09/2020
Tags: கட்டுரை