Breaking News

நீதியல்ல மாறாக அநீதி..! A.H.யாசிர் ஹசனி

நிர்வாகி
0

விசித்திரமான வழக்குகளை நீதிமன்றங்கள் சந்திப்பது காலம், காலமாக இருந்து வருகின்றன. சமீபத்தில் லக்னோ நீதிமன்றமோ பாபரி வழக்கில் விசித்திரமான தீர்ப்பை வழங்கியது.இதில் தீர்ப்பே விசித்திரத்தைக் கூட்டியது.

பாபரி மஸ்ஜிதை தகர்த்து, அங்கு ராமர் கோயில் அமைக்க வேண்டும் என்பது RSS யின் பல ஆண்டுக் கோரிக்கைகளாக இருந்து வந்தன. அதனின் முதற் தயாரிப்பாக ரதயாத்திரை ஏற்பாடு செய்து மக்களை தயார்ப்படுத்தினார்கள் என்பது உலகமறிந்த ஒன்று.

கடந்த 1992 ஆம் ஆண்டில் உலகம் பார்க்க பாபரி மஸ்ஜிதை தரை மட்டமாக இடித்துத் தகர்த்தார்கள். இதற்கான முழு தயாரிப்புகளையும் முன்னரே செய்திருந்தார்கள் என்பதும், இதற்கான பல ஒத்திகைகள் பார்த்தார்கள் என்பதும் வழக்கிற்குத் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கும் மற்றும் உலக மக்களுக்கும் தெரியும்.

பட்டப் பகலில் நடை பெற்ற இந்திய இறையாண்மைக்கும், பன்முகத் தன்மைக்கும் வெடிவைத்துத் தகர்த்த நிகழ்வு எப்படி சட்டம் படித்த மேதையின் பார்வைக்கு செல்லாமல் போனதென்பது ஆச்சரிய குறியே! கூனி குருகி கேள்விக் குறியாக மாறிபோனது.

இதைப் போன்ற நிகழ்வுகளை இந்தியா சந்திக்கும் என்று மகாத்மா நினைத்தாரோ தெரியவில்லை! அதனால்தான், உமர் (ரலி) அவர்களின் ஆட்சி இந்தியாவில் மலர்ந்தால் இந்தியா அமைதிக் காற்றைச் சுவாசம் கொள்ளும் என்றார்.

உமரின் ஆட்சி அவ்வளவு சிறந்ததா?உமர் (ரலி) அவர்களுக்கு மட்டும் நீதமாக எப்படி ஆட்சி அமைக்க முடிந்தது? என்ற கேள்விகளுக்கு, குர்ஆன், நபி மொழிகளை முன்வைத்து உமரின் ஆட்சி அமைந்திருந்தது என்பதே பதிலாக நம் முன் வருகிறது.

முன் கூட்டிய திட்டம் தீட்டி குற்றம் செய்தால், அது குற்றம் என்றும். திட்டம் தீட்டாமல் குற்றங்கள் செய்தால்,அது குற்றமாகாது என்ற வகையில் இந்த தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

முன்கூட்டிய திட்டம் தீட்டினால்தான்,அது குற்றம் என்றால் உலகில் சில குற்றங்களை, நாம் குற்றப் பட்டியலில் இணைத்துப் பேசவே முடியாதே!

மது போதையில் நடக்கும் கொலைகள், உச்சக்கட்ட கோப நிலையில் நடைபெரும் கொலைகள், சில கற்பழிப்புகள் இவைகள் அனைத்தும் முன்கூட்டிய திட்டம் வகுத்து செய்பவைகள் அல்ல... எந்த வித திட்டமிடுதலும் இல்லாமல் நடைப் பெருவைகள்... இப்படிப்பட்ட குற்ற நிகழ்வுகளுக்கு இந்த நீதிபதி என்ன தீர்ப்பு வழங்குவார் என்று தெரியவில்லை.

பெரும்பான்மை மக்களின் மனம் புண்படும் என்ற ரீதியில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுகின்றது.

நடை பெற்ற குற்றத்தில் யார் குற்றவாளி, யார் நிரபராதி என்று நீதிபதி பார்க்க வேண்டும். பெரும்பான்மை, சிறுபான்மையென்று பார்க்கக் கூடாது. இதைத் தான், இஸ்லாம் நீதத்தைப் பற்றி கூறும் போது இருத் தரப்பின் கருத்துக்களைக் கேட்கக் கூறுகின்றது.

அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் எகிப்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்கள். அவர் அங்கிருந்த பள்ளிவாசலை விரிவுபடுத்த அதன் அருகிலிருந்த கிறுஸ்த்துவப் பெண் ஒருவரின் வீட்டை உடைத்து விட்டு அதற்கான இழப்பீட்டுத் தொகையையும் வழங்கினார் . ஆனால், அதை மறுத்த அந்த பெண் மதீனாவிலிருந்த கலிஃபா உமர்(ரலி) அவர்களிடம் வந்து இது குறித்து முறைப்பாடு செய்தார். உமர் அவர்கள் கட்டப்பட்ட அப்பள்ளியின் அப்பகுதியை உடைத்துவிட்டு முன்பிருந்தது போல் அப்பெண்ணின் வீட்டைக் கட்டிக் கொடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.

இந்த நிகழ்வின் நேரத்தில் அங்கு கிறுஸ்த்துவர்களை விட முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தார்கள். அதுவும் இஸ்லாமிய ஆட்சி இருந்தது. ஆனால், கலிபா உமர் எது சரி? எது தவறு என்று மட்டுமே பார்த்தார்கள் தவிர கட்டப்பட்டது இறை இல்லம், இடிக்கப்பட்டது சிறுபான்மையினரின் வீடு என்று பார்க்கவில்லை.

இயேசு சிலையின் மூக்கு உடைப்பட்டதால் கிறிஸ்துவ மக்கள் கோபம் கொண்டு அம்ரு இப்னு ஆஸ் (ரழி)அவர்களை நோக்கி விரைந்தார்கள்..இந்த நிகழ்வை முஸ்லிம்கள்தான் செய்திருக்க வேண்டும் என்று கூறினார்கள்.அதற்கு அவர்கள் சார்பில் மன்னிப்பு கோருகிறேன்.அந்த சிலையை நானே சரி செய்து தருகிறேன்‌ என்றார் அம்ரு இப்னு ஆஸ் (ரலி) அவர்கள். இதை ஏற்றுக் கொள்ளாத கிருஸ்தவ மக்கள், உங்கள் நபியின் சிலையை நிறுவுங்கள் நாங்கள் அதன் மூக்கை உடைக்க வேண்டும் என்றார்கள்.. அதிர்ச்சியடைந்த அம்ரு இப்னு ஆஸ் (ரழி) நாளை குற்றம் செய்தவனை உங்கள் கண் முன்னால் நிறுத்துவேன். தவறும் பட்சத்தில் என் மூக்கை நீங்கள் வெட்டிக் கொள்ளுங்கள் என்றார். மறுநாள் குற்றம் செயதவரை கண்டுபிடிக்க முடியவில்லையென்பதால் அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் குற்றவாளிக் கூண்டில் நின்றார்கள்.தன் மூக்கை வெட்ட தன் வாளை கொடுத்தார்கள்.. அப்போது கூட்டத்தில் ஒருவன் நான் தான் அந்த குற்றம் செய்தேன் என் மூக்கை வெட்டிக் கொள்ளுங்கள் என்றான்.

இதுதான் இஸ்லாம் கற்றுக் கொடுக்கும் நீதம். தவறு யார் செய்தார் என்று பார்க்க வேண்டுமே தவிர, பெரும்பான்மை சமூகம் செய்ததா ? சிறுபான்மை சமூகம் செய்ததா என்று பார்க்க கூடாது.

பாபரி இடிப்பு தீர்ப்பு ஒரு தலைபட்சமான தீர்ப்பு என்று வெகுஜன மக்களின் மனசாட்சிகளுக்கு தெரியும். ஏன் தீர்ப்பு வாசித்தவருக்கும் தெரியும். அதிகார வர்க்கம் ஏவும் அம்பில் சிக்கி இந்தத் தீர்ப்பு வழுங்கப்பட்டுள்ளது என்பதே‌ உண்மை.

நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் தூண்கள். தனிமனித விறுப்பு,வெறுப்பு கள் அதில் நுழையக் கூடாது. அப்படி நுழைந்தால் இந்திய ஜனநாயகத்தில் தனி மனித சுதந்திரம் கேள்விக்கு உள்ளாகும்.

மனித வாழ்வு சீராக அமைய குர்ஆன் வழி காட்டியாக இருக்கின்றது. பிறப்பு முதல் இறப்பு வரை மனிதன் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வுகள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றது.தீர்ப்பு எப்படி வழங்க வேண்டும் என்பதை குர்ஆன் உபதேசம் செய்கிறது.

நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:58)

நீதிபதிகள் எது நீதமோ அதனை முன்வைத்துத் தீர்ப்புகள் வழங்க வேண்டும் இதைத் தான் குர்ஆன் கற்றுத் தருகின்றது.

மக்களுக்குத் தீர்ப்பு வழங்கும் தருணத்தில் மிகுந்த கவனம் செலுத்த குர்ஆன் எச்சரிக்கின்றது. நீதம் இல்லா தீர்ப்பு பெரும் பாவமாகவும்.பாரபட்சமில்லா தீர்ப்பு வழங்க அல்லாஹ் மனித சமூகத்திற்கு உபதேசமாகக் கூறுகின்றான்.

ஜனநாயக நாட்டில் நம்பிக்கை அடிப்படையிலும், பெரும்பான்மை மக்களின் மனநிலை அடிப்படையில் வழுங்கும் நீதியது, நீதியல்ல மாறாக அநீதியாகும்

நம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபட்டு காணப்படும்.. நீதிமன்றங்களும், நீதிபதிகள் பொதுவாகத் தான் இருத்தல் வேண்டும்.. மக்களின் இறுதி நம்பிக்கைத் தான் நீதி மன்றம் என்பதை அனைத்து நீதிபதிகளும் மனத்தில் வைத்து தீர்ப்பு வழங்க வேண்டும்.

A.H.யாசிர் ஹசனி லால்பேட்டை

Tags: கட்டுரை

Share this