கடலூர் மாவட்ட காவல் நிலையங்களுக்கும் மாவட்ட எஸ்.பி அபினவ் உத்தரவு
கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் மாவட்ட எஸ்.பி அபினவ் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவின்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள், போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரடியாகச் சென்று முழுமையான அளவில் கள ஆய்வு செய்து, அதன் பிறகு வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இப்படிச் செய்வதன் மூலம் உண்மை நிலையைக் கண்டறிய முடியும். காவல் நிலையங்களில் புகார் கொடுப்பவர்கள் அனைவரையும் காவல் நிலையத்திலேயே வைத்து விசாரணை செய்வதன் மூலம், ஒரு தரப்பினர் எடுத்து வைக்கும் வாதங்கள் மட்டுமே கருத்தில் கொள்ளும் நிலை சில நேரங்களில் ஏற்படும். எனவே புகார் சம்பந்தமாக புகார்தாரர்கள் தெரிவிக்கப்படும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்து அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் விசாரணை செய்யும்போது, நடந்தது என்ன என்பதும் அதன் உண்மைத் தன்மையும் வெளிப்படும். அதன் பிறகு சம்பந்தப்பட்ட புகார்களின் மீது வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்வதும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் நடைமுறைப்படுத்த வேண்டும். இதன் மூலம், குற்ற வழக்குகளில், சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் உரிய தண்டனை கிடைக்கும். நிரபராதிகள் தண்டிக்கப்பட மாட்டார்கள்.
மேலும், காவல் துறையின் செயல்பாடுகளால் நீதிமன்றத்தின் முழுநம்பிக்கையைப் பெற முடியும். காவல் நிலையங்களில் அதிகாரிகள் இனி அமர்ந்துகொண்டு புகார் தரும் பொதுமக்களை தேவையின்றி அலையவிடாமல் உடனுக்குடன் தீர்வு எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் காவல்துறையினர்.
Tags: செய்திகள்