தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்: சர்க்கரை நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட இனிப்பு! எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை:
நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு வாக்காளர்களே ஏமாற்றம் அடையும் அளவிற்கு வெற்று வாக்குறுதிகளை அறிவிப்புகளாக அள்ளி வீசி துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட், சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த அரசு வழங்கியுள்ள இனிப்பை போன்றதாகும்.
இன்று நடைபெற்ற 15ஆவது சட்டப்பேரவையின் கடைசி கூட்டத் தொடரில் அதிமுக அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில், தங்களது வாழ்வாதாரம் செழிக்க உருப்படியான அறிவிப்புகள் இருக்கும் என்று விவசாயிகளும், விண்ணைத் தொடும் விலைவாசியினாலும் வருமானம் குறைந்து நலிவடைந்த, தங்களது வாழ்க்கை ஏற்றம் பெற வழி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் எதிர்பார்த்த பொதுமக்களுக்கும் பெரும் ஏமாற்றத்தையே இந்த பட்ஜெட் அளித்துள்ளது.
தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.70 லட்சம் கோடியாக உயரும் என்ற அபாய மணியை அடித்துவிட்டு, ரூ.41,417.30 கோடி பற்றாக்குறை பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நிதியமைச்சரின் நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க முடியாது என்ற ஒப்புதல் வாக்குமூலமும் அதிமுக ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையின் எடுத்துக்காட்டாகும்.
கிராமங்கள் முதல் நகரங்கள் வரை உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மகப்பேறு மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப ஊழியர்களின் பற்றாக்குறைய சரிசெய்து, அரசு மருத்துவமனைகளை பொதுமக்களின் 100 சதவிகித பயன்பாட்டிற்கு ஏற்றவாறு செய்யாமல், அம்மா மினி கிளினிக் என்ற திட்டத்தைத் தொடங்கி, அதற்கு ரூ.144 கோடி ஒதுக்கியிருப்பது, அரசு மருத்துவமனைகளுக்கு இந்த அரசு மூடுவிழா நடத்தி தனியார் மருத்துவமனைகளுக்கு மறைமுகமாக உதவும் திட்டம் போல் தெரிகிறது.
மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கும் தேசிய பேரிடர் நிதி போதுமானதாக இல்லை. பெட்ரோல், டீசல் பொருட்களின் மேல்வரி மற்றும் கட்டணங்களில் மாநில அரசின் பங்கை மத்திய அரசு வழங்குவதில்லை, பல்வேறு திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை, நிலுவையில் உள்ள தமிழகத்திற்குத் தரவேண்டிய நிதியை மத்திய அரசு வழங்காதது, உள்ளாட்சிகளுக்கு வழங்கும் மானியத்தை மத்திய அரசு குறைத்துவிட்டது போன்ற மத்திய அரசின் மீதான நிதியமைச்சரின் குற்றச்சாட்டுகள் பாஜகவை ஆதரிக்கும் அதிமுகவை பாஜக ஏமாற்றுகிறது என்ற ஒப்புதல் வாக்குமூலமாகும்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான மத்திய அரசின் கண்மூடித்தனமான வரிவிதிப்பால் விண்ணைத் தொட்டுள்ள பெட்ரோலியப் பொருட்களின் விலை மீது மாநில அரசு விதித்துள்ள வரிகளை மேற்குவங்கம், ராஜஸ்தான், அசாம், மேகாலயா, நாகலாந்து அரசுகள் குறைத்துள்ளது போன்று தமிழக அரசும் குறைக்காமல் பெட்ரோலியப் பொருட்கள் மீதான புதிய செஸ் வரியை நீக்குக என்று மத்திய அரசைக் கோருவதும் மக்களை ஏமாற்றும் செயலாகும்.
விவசாயிகளின் 12,110 கோடி பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று இம்மாத தொடக்கத்தில் அறிவித்துவிட்டு, பயிர்க்கடன் தள்ளுபடி ரசீது வழங்குதல் என்ற பெயரில் ஒரு நாடகத்தையும் நடத்திவிட்டு தற்போது இந்த பட்ஜெட்டில் பயிர்க்கடன் தள்ளுபடிக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்திருப்பதும் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் அடியாகும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு பாடிவரும் பழைய பல்லவியே அன்றி வேறில்லை.
Tags: செய்திகள்