ஏழைகள் உயிருடன் விளையாடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனை! பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டாக்டர்கள், ஏழை நோயாளிகளின் உயிருடன் விளையாடும் வகையில் ஏழைகளுக்கும், அரசின் காப்பீடு திட்ட அட்டை வைத்திருப்பவர்களுக்கும் அடிப்படை சிகிச்சைக் கூட அளிக்க மறுப்பதற்கு மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
அண்மையில், தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள இம்மருத்துவமனையை நம்பி சிதம்பரத்தைச் சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஏழை நோயாளிகள் உள்ளனர். இத்தகைய ஏழை நோயாளிகள் அலட்சியப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு மறுக்கப்படுவது வேதனையைத் தருகிறது.
காட்டுமன்னார்குடி அருகில் உள்ள ஆயங்குடி என்ற ஊரைச் சேர்ந்த ஏழை கூலித்தொழிலாளியின் 28 வயது மகன் அப்துல்லா புகாரி என்ற இளைஞர், கடந்த மூன்று வருடங்களாக இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு இந்த மருத்துவமனையில் தொடர் சிகிச்சையும், டயாலிசிசும் எடுத்து வருகிறார். ஒருநாள் விட்டு ஒருநாள் செய்ய வேண்டிய டயாலிசிஸ் சிகிச்சையை இம்மருத்துவமனை டாக்டர்கள் கடந்த ஒரு வருடமாக அப்துல்லா புகாரிக்கு சரியாக செய்யாமல் அவரை அவமதித்தும், அலைக்கழித்தும் வருகின்றனர்.
4 மணி நேரம் செய்ய வேண்டிய டயாலிசிஸை 3 மணி நேரம் மட்டுமே செய்வது, குறைந்தது 150 லிட்டர் தண்ணீரைக் கொண்டு செய்ய வேண்டியதை அதைவிடக் குறைவான தண்ணீர் பயன்படுத்தி செய்வதும், மேலும் கடந்த ஆறு மாதமாக நோயாளி புகாரி டயாலிசிஸ் செய்ய வரும்போதெல்லாம் மோட்டார் பழுதாக உள்ளது, தண்ணீர் இல்லை, டாக்டர் இல்லை போன்ற காரணங்களைக் கூறி அவரின் உயிருடன் விளையாடி வருகின்றனர்.
இன்று (13.02.2021) டயாலிசிஸ் செய்யச் சென்ற புகாரியை, மருத்துவமனைக்கு உள்ளேயே அனுமதிக்காமல் அவரை விரட்டிவிட்ட அவலமும் அரங்கேறியுள்ளது.
தொடர்ந்து டயாலிசிஸ் செய்யாததால் நோயாளி புகாரிக்கு அடிக்கடி மூச்சுத் திணறல், மார்பு வலி, உடல் சோர்வு, பசியின்மை போன்றவற்றால் அவரது உடல்நிலை மிகமோசமடைந்து வருகிறது.
தமிழக முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் இதுகுறித்து விசாரித்து மாவட்ட ஆட்சியரை அறிவுறுத்தி அப்துல்லா புகாரியின் உயிர்காக்க உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
Tags: செய்திகள்