Breaking News

ஜமாஅத்துல் உலமாவின் சாதனைகளும் சமூக செயற்பாடுகளும்...!

நிர்வாகி
0

ஜமாஅத்துல் உலமா என்பது வரலாற்றில் நீண்ட பாரம்பரியம் கொண்டது.ஒரு கால கட்டம் வரை பள்ளிவாசல்களில் பயான், மற்றும் உள்ளூர் அளவில் மார்க்கப்பணிகள் என்று மட்டுமே இருந்த அமைப்பு. பொதுப்பிரச்னைகளுக்கு பல முறை குரல் கொடுத்த போதும் அவை பிரகாசிக்காமல் இருந்ததும் உண்டு.

போலி தவ்ஹீத் எழுச்சியின் போது இச்சமூகத்தை களவாடிச் செல்ல முயன்றவர்கள் முதலில் முடக்க நினைத்தது இந்த சபையைத்தான்.

அப்போது சமூகத்தை போலிகளின் கைகளைவிட்டும் காக்க களமிறங்கி கடுமையாக உழைத்தது இச்சபைதான். அதனால் பல உலமாக்கள் குதறப்பட்டனர் என்பது வரலாறு.

பின்நாட்களில் இன்றைய மய்யத்தின் தலைவர் நடிகர் கமலஹாசன் என்பவர் விஸ்வரூபம் திரைப்படம் எடுத்து அதில் முஸ்லிம் சமூகத்தை தீவிரவாதிகள் என சித்தரித்த போது வெகுண்டெழுந்த நிகழ்வுதான் இச்சபையின் திருப்பு முனை. சிறிதும் பெரிதுமான இஸ்லாமிய அமைப்புகள் கட்சிகளை ஒன்றாக ஒருங்கிணைத்து அதிகார மையங்களில் அமர்ந்து ஆக்கப்பணிகளைச் செய்த போதுதான் ஜமாஅத்துல் உலமா பொதுச்சமூகத்தின் கவனத்திற்கு வந்தது.

அதன்பின் நடந்த பல்வேறு சமூக செயல்பாடுகளில் அதன் வீரியமான பணிகள் வெளியில் தெரியலாயின. அத்துடன் அரசியல் இயக்கங்கள் மார்க்கம் சார்ந்த விஷயங்கள் வரும்போது ஜ உ எந்த வழிகாட்டுமோ அதுவே எங்கள் நிலைப்பாடு என ஏற்குமளவு முன்னணிக்கு வந்த அமைப்பு இதுவாகும்.

அப்போது திண்டுக்கல் பகுதியில் நடைபெற்ற ஒரு விபத்தில் சுமார் 14 உலமாக்கள் உயிரிழந்தபோது அன்றைய ஓபிஎஸ் அரசு நிவாரணம் வழங்க தயக்கம் காட்டியது. அறிவித்த தொகை கூட அற்பமாக இருந்தது. அதை கண்டித்த ஜ உ ,உடனே களமிறங்கி சமூகத்தில் பணம் திரட்டி, உயிரிழந்தோர் குடும்பம் ஒவ்வொன்றிற்கும் பல லட்சங்களைக் கொடுத்து உதவியது. இதுதான் உலமாக்களுக்கே இச்சபை மீது நம்பிக்கையை ஏற்படுத்திய நிகழ்வு.

அடுத்து, மோடியின் மத்திய அரசு முத்தலாக் மசோதா கொண்டு வந்தபோது அதைக் கடுமையாக எதிர்த்து களம்கண்ட அமைப்பு இதுவேயாகும். அதற்காக மாவட்டம் தோறும் கண்டன பொதுக்கூட்டங்களை பிரம்மாண்டமாக நடத்தி மக்களை ஒருமுனைப்படுத்தியது ஜ உ சபைதான். அந்த கூட்டங்களில் இன்று திமுக அணியில் இருக்கும் பிரதான இஸ்லாமிய கட்சிகளையும், அமமுக அணியில் உள்ள கட்சியையும், ஒருங்கிணைத்து மேடையேற்றிய சரித்திர சாதனைக்கு சொந்தம் இந்த ஜமாஅத்துல் உலமா சபைதான்.

அடுத்து CAA, NRC, NPR. தன்னெழுச்சிப் போராட்டங்களின் போது தமிழக மாவட்ட தலை நகரங்களில் தனது தலைமையில் மக்களை திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் அறிவித்தபோது, அரசே சற்று அசந்து போகுமளவு ஒவ்வொரு இஸ்லாமியரும் வீதிக்கு வந்த நிகழ்வு அப்போதுதான் நடைபெற்றது.

இஸ்லாமிய அமைப்புகள், கட்சிகளும் ஒரே தலைமையின் கீழ் திரண்ட அந்த நிகழ்வுதான் முஸ்லிம்களுக்கே தமது பலத்தைப் புரிய வைத்த நிகழ்வாகும்.

தொடர்ந்து தன்னெழுச்சியான குடியுரிமை போராட்டங்களுக்கு வழிகாட்டி வழி நடத்தி சென்றதும் இச்சபைதான். பிறகு கொரோனா கொடுந்தொற்று காரணமாக மக்களின் அந்த தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து அமைதிப்படுத்தியதும் இச்சபைதான்.

கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது ஃபாசிசத்திற்கு எதிராக மக்களை ஓரணியில் கொண்டுவர உதவியதும் இச்சபைதான். அதைதொடர்ந்து தற்போது சட்டமன்ற தேர்தலிலும் மக்களை ஓரணியில் நிலைப் படுத்த தகுந்த முன்னெடுப்புகளைச் செய்ததும் இச்சபைதான்.

உலமாக்கள் முஸ்லிம் சமூகத்தால் ஏற்கப்பட்ட அப்பழுக்கில்லாத உயர் மதிப்புடையோர்களாகும். அல்லாஹ்வை அஞ்சி நீதமுடன் முடிவெடுத்து, ஏற்போர் மறுப்போர் என பாகுபாடின்றி இக்லாஸுடன் பணி செய்யும் இவர்களை முஸ்லிம் சமூகம் உச்சத்தில் வைத்து கண்ணியப் படுத்துகிறது.

இச்சபையின் செயல்திட்டத்தில் இருக்கும் அடுத்த, ஆண்டுத்திட்டங்கள் நிறைவேற்றி முடிக்கப்படும் போது அதன் மதிப்பு இன்ஷாஅல்லாஹ் இன்னும் உயர்வடையும்.

யாஅல்லாஹ், உலமாக்களின் அரிய சேவைகளை கபூல் செய். சமூகத்திற்கு அதை பயன்தரச் செய்வாயாக. ஆமீன்.

மௌலவி எம்ஒய் முஹம்மது அன்சாரி மன்பயீ.

மாநில செயற்குழு உறுப்பினர். ஜமாஅத்துல் உலமா சபை.

Tags: கட்டுரை

Share this