Breaking News

பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வெற்றி

நிர்வாகி
0

நம்பிக்கையூட்டிய வாக்காளர்களுக்கு நெஞ்சங்கனிந்த நன்றிகள்! தமிழகத்தின் அடுத்த முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

மனிதநேயத்திற்கும், மண்ணை அடிமைப்படுத்தும் மதவெறிப் பாசிசத்திற்கும் இடைப்பட்ட போராட்டமாய் அமைந்த 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் சமூகநீதி, சமத்துவம், மனிதநேயம், மாநில உரிமைகள் ஆகியவற்றை முன்னிறுத்திக் களம் கண்ட திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மகத்தான வெற்றியளித்த தமிழகத்தின் தன்மான வாக்காளர்களுக்கு இதயங்கனிந்த நன்றிகளை முதற்கண் தெரிவிக்கிறேன்.

மிக நேர்த்தியாக தேர்தல் வியூகம் அமைத்து கடுமையான உழைப்பை செலுத்திய திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் வியக்கத்தக்க அற்பணிப்பிற்கு கிடைத்த மகத்தான வெற்றி இது. தமிழகத்தின்அடுத்த முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் ர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் போட்டியிட்ட பாபநாசம் தொகுதியில் மகத்தான நம்பிக்கையோடு வாக்களித்த தொகுதியின் வாக்காளர்கள் அனைவருக்கும் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியை உரித்தாக்குகிறேன்.

கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு, தேர்தல் களத்தில் பரபரப்பு மிக்க இறுதி பத்து நாட்களில் நான் பரப்புரையில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்ட போதும், அருமையான புரிந்துணர்வோடு, பேதம் கற்பித்த பேதைமைகளுக்குக் கிஞ்சிற்றும் இடம் தராது, இம்மண்ணிற்கு நான் அன்னியன் அல்லன், அன்னியோன்யமானவன் என்பதைப் பறைசாற்றும் வகையில், வாக்களித்துள்ள பாசத்திற்குரிய பாபநாசம் தொகுதி வாக்காளர்களுக்கு மீண்டும் மீண்டும் என் இதய நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.

தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினின் பிரதிநிதியாய், தங்களில் ஒருவனாய் என்னைக் கருதி, முழு வீச்சோடு களப்பணியாற்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், தியாகத்தின் வடிவங்களாய்த் திகழும் தமுமுக மமக சொந்தங்களுக்கும், காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட தோழமைக் கட்சியினருக்கும், மனமுவந்து ஆதரவளித்த பல்வேறு இயக்கத் தோழர்களுக்கும், கல்வியாளர்களுக்கும், உள்ளாட்சிமன்றத் தோழர்களுக்கும், அன்போடு என்னை அரவணைத்துக் கொண்ட அனைத்து சமுதாய மக்களுக்கும் என் இதயங்களிந்த நன்றிகளைத் தெரிவிப்பதோடு, எந்த நம்பிக்கையோடு எனக்கு வாக்களித்தீர்களோ அந்த நம்பிக்கையை மென்மேலும் வலுப்படுத்தும் வகையில் பணியாற்றி, இறையருளால் எல்லோர்க்கும் உரியவனாக எப்போதும் திகழ்வேன் என்று உறுதியளிக்கிறேன். வாக்களித்த அனைவருக்கும் இறைவனின் பேரருள் சூழவும், நோய் அபாயம் நீங்கிய நல்வாழ்வு அமையவும் வாழ்த்திப் பிரார்த்திக்கிறேன்.

அன்புடன்,

எம்.எச்.ஜவாஹிருல்லா

தலைவர்,

மனிதநேய மக்கள் கட்சி

Tags: செய்திகள்

Share this