Breaking News

எதிர்பார்த்த தேர்தல் வெற்றி கிடைத்துவிட்டது.அடுத்து என்ன? : S.சித்தீக்

நிர்வாகி
0

எதிர்பார்த்த தேர்தல் வெற்றி கிடைத்துவிட்டது. இனி எல்லாம் மாறிவிடுமா ? யார் வென்றாலும் நம் உணவிற்க்கு நாம் தான் உழைக்க வேண்டும்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு தான் இது. 2026 தேர்தலில் முடிவு எதிர்பார்ப்பிற்க்கு மாற்றமாக இருந்தால் என்ன செய்வது ? இப்போதே சிந்தித்து இந்த 5 ஆண்டுகளை சரியான முறையில் செலவிடுங்கள். நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் “நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு” (முஸ்லீம்-6416). இந்த அறிவுறையை ஆழ்ந்து சிந்தியுங்கள்.

நாம் இப்போது நல்லமுறையில் இருக்கின்றோம் என்று நேரத்தை வீணடிக்கக்கூடாது. எதிர்காலத்தில் துன்பம் வரும், துன்பம் வரும் போது என்ன செய்வது என்று புலம்பாமல், நாம் நன்றாக இருக்கும் போதே அதற்க்காக தயாரித்து வைத்து கொள்ள வேண்டும். யூஸுப் (அலை) அவர்கள் பஞ்சம் வரும் ஆண்டுகளுக்காக தானியத்தை நல்ல விளைச்சல் உள்ள ஆண்டிலேயே சேமித்து வைத்தார்கள். பஞ்சம் வரும் போது உங்களால் உணவை உற்பத்தி செய்யவோ சேமிக்கவோ முடியாது. நல்ல விளைச்சல் உள்ள காலத்தில் தான் அந்த தயாரிப்பை உங்களால் செய்ய முடியும்.

எனவே இந்த 5 ஆண்டுகளை நீங்கள் உங்கள் வாழ்க்கையின் சமூக, பொருளாதார நிலையை உயர்த்தி கொள்ள செலவழியுங்கள். அதன் பின் எப்பேற்பட்ட துன்பம் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வலிமை பெற்றவர்களாக உங்களை ஆக்கிகொள்ளுங்கள். என்னை பொருத்தவரை கல்வி முன்னேற்றம் தான் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நிரந்தர சமூக பாதுகாப்பை கொடுக்கும், மற்ற தீர்வெல்லாம் secondary தான்.

ஆயிரம் பேர் ஆயிரம் சொல்வார்கள் End of the day நம் குடும்பத்தை நாம் தான் பாதுகாக்க வேண்டும். உங்களுடைய, உங்களை பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள். உங்களுடைய கல்வியின் மூலமாகவோ அல்லது உங்களுடைய பிள்ளைகளின் கல்வியின் மூலமாகவோ (ஆணோ பெண்ணோ) உங்களின் பாதுகாப்பான சிறந்த எதிர்காலத்தை இறைவனின் நாட்டப்படி உறுதி செய்ய முடியும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.

சிந்தியுங்கள், திட்டமிடுங்கள், ஒரு வினாடியும் வீணாக்காமல் எதிர்காலத்தில் அச்சமின்றி வாழ ஒரு வழியை ஏற்படுத்துங்கள் இறைவன் உங்களுக்கு துணை நிற்பான். ரமலானின் கடைசி 10 நாள்கள் வந்து விட்டது. இறைவனிடம் மன்றாடி கேளுங்கள் நிச்சயம் வழிபிறக்கும் (இன்ஷா அல்லாஹ்).

இறைவனிடம் கேட்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாதீர்கள், கடினமாக உழைத்தால் தான் வெற்றிகிடைக்கும் “உழைப்போருக்கு நமது வழிகளைக் காட்டுவோம். நன்மை செய்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்.” (அல் குர் ஆன் : 29: 69) குர்ஆனில் உள்ள சில பிராத்தனைகள்

என் இறைவா! எனக்கு நீ வழங்கும் நன்மையில் தேவையுள்ளவனாக இருக்கிறேன்……(குர்ஆன் 28 : 24) எங்கள் இறைவா! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச் சீராக்குவாயாக …..(குர்ஆன் 18 : 10)

என் இறைவா! எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து! (அல்-குர் ஆன் 20 : 25)

என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து எனக் கூறுவீராக! (அல்-குர் ஆன் 20 : 114)

- S.சித்தீக் M.Tech

Tags: கட்டுரை

Share this