Breaking News

குர்பானி இறைச்சியை சேமித்து வைத்து சாப்பிடலாமா? ஜே,எஸ்.ரிஃபாயீ

நிர்வாகி
0

அப்துல்லாஹ் பின் அபீபக்ர் பின் முஹம்மத் பின் அம்ர் பின் ஹஸ்ம் ரஹ்... அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் வாகித் பின் அப்தில்லாஹ் பின் உமர் ரஹ்... அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் ஸல்... அவர்கள் குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேலாக உண்பதற்குத் தடை விதித்துள்ளார்கள்’ என்று கூறினார்கள். இதை நான் அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் ரஹ்... அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அம்ரா ரஹ்... அவர்கள் கூறினார்கள்: அப்துல்லாஹ் பின் வாகித் சொன்னது உண்மையே. ஆயிஷா ரலி... அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன்:

அல்லாஹ்வின் தூதர் ஸல்... அவர்களது காலத்தில் ஈதுல் அள்ஹா பெருநாள் சமயத்தில் கிராமப்புற ஏழை மக்களில் சிலர் (மதீனாவுக்கு) வந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்... அவர்கள் (தம் தோழர்களிடம்), ‘(குர்பானி இறைச்சிகளை) மூன்று நாட்களுக்கு மட்டுமே சேமித்து வையுங்கள். பிறகு எஞ்சியதை தர்மம் செய்யுங்கள்’ என்று கூறினார்கள்.

அதன் பின் (அடுத்த ஆண்டு) ஆன போது மக்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! மக்கள் தங்களது குர்பானிப் பிராணியி(ன் தோலி)லிருந்து தோல்பை தயாரித்துக் கொள்கின்றனர். அவற்றின் இறைச்சியிலிருந்து கொழுப்பை உருக்கி எடுத்துக்கொள்கின்றனர்’ என்று கூறினர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அதனால் என்ன?’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், ‘குர்பானிப் பிராணியின் இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேலாக உண்ண வேண்டாம் எனத் தாங்கள் தடை செய்தீர்களே?’ என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்... அவர்கள், ‘(நம்மை நாடி) வந்திருந்த (ஏழை) மக்களுக்காகவே (மூன்று நாட்களுக்கு மேலாகக் குர்பானி இறைச்சியை உண்ண வேண்டாமென) உங்களைத் தடுத்தேன். இனி, நீங்கள் குர்பானி இறைச்சியை உண்ணுங்கள். சேமித்துவையுங்கள். தான தர்மமும் செய்யுங்கள்’ என்று கூறினார்கள். (முஸ்லிம் 3986 )

மேலும் சலமா பின் அல்அக்வஉ ரழி... அவர்கள் கூறியதாவது: அல் லாஹ்வின் தூதர் ஸல்... அவர்கள், (ஓர் ஆண்டில்) ‘உங்களில் குர்பானி கொடுத்தவர், மூன்று நாட்களுக்குப் பின் தமது வீட்டில் (குர்பானி இறைச்சி யில்) எதையும் வைத்திருக்க வேண்டாம்’ என்று கூறினார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது மக்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! கடந்த ஆண்டில் நாங்கள் செய்ததைப் போன்றே இந்த ஆண்டும் செய்ய வேண்டுமர்’ என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்... அவர்கள், ‘இல்லை (அவ்வாறு செய்ய வேண்டியதில்லை) அந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. (குர்பானி இறைச்சி மூலம்) பரவலாக மக்கள் அனைவரும் பயனடைய வேண்டும் என நான் விரும்பினேன் (எனவே, மூன்று நாட்களுக்கு மேல் உண்ணவேண்டாம் எனத் தடை விதித்தேன்)’ என்று பதிலளித்தார்கள். ( முஸ்லிம் 3992 ) எனவே குர்பானி இறைச்சியை எத்தனை நாளும் சேமித்து வைத்து சாப்பிடலாம்.

ஆரம்பத்தில் மூன்று நாட்கள் மட்டும் என்ற சட்டமாக இருந்து, பிறகு அது மாற்றப்பட்டு, குர்பானி இறைச்சியை எத்தனை நாளும் வைத்து சாப்பிடலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு விட்டது.

எனவே ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் விநியோகித்துவிட்டு மீதமானவற்றை எடுத்து உப்புக்கண்டம் போன்ற வகைகளில் சேமித்து வைத்து சாப்பிடலாம்.

அனைவருக்கும் தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!

அல்லாஹ் நம் நற்செயல்களை அங்கீகரிப்பானாக!!

ஜே.எஸ்/ரிஃபாயீ

Tags: இஸ்லாம்

Share this