Breaking News

பொதுப்பணித்துறைதிட்டங்களுக்குமுன்னோடி மருதநாயகம்! நூல்வெளியீட்டுவிழாவில்மஜகபொதுச்செயலாளர்முதமிமுன்அன்சாரிபேச்சு!

நிர்வாகி
0
விடுதலைப் போராட்ட தலைவர் கான் சாஹிப்@ மருதநாயகம் குறித்து முதன் முதலில் கவிக்கோ. அப்துல் ரஹ்மானின் தந்தை மஹதி அவர்கள் 1961 ஆம் ஆண்டு மாவீரன் கான் சாஹிப் என்ற நூலை எழுதினார்.
நீண்ட காலத்திற்கு பிறகு அதன் இரண்டாம் பதிப்பின் அறிமுக நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடைப்பெற்றது.
மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி சார்பில் தஞ்சாவூர் - விளார் - கிரின்சிட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நூலாய்வு மற்றும் அறிமுக நிகழ்வில், நகரின் அரசியலாளர்கள், அறிவுஜீவிகள், சமூக ஆர்வலர்கள் , பணி ஒய்வுப் பெற்ற காவல்துறை அதிகாரிகள், தொழிலதிபர்கள் என பலரும் பங்கேற்று சிறப்பித்தனர்.
இதில் பங்கேற்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு...
மருதநாயகத்தின் வரலாறை முதன் முதலில் தமிழில் கொண்டு வந்த இந்நூலை,அவர் தூக்கிலிடப்பட்ட தேதியில், மறு அறிமுகம் செய்து இந்நிகழ்ச்சியை நடத்துகிறோம்.
சினிமாக்காரர்களுக்கு கூட்டம் போட்டு அவர்களை கொண்டாடும் நாட்டில், விடுதலை போராளிகளின் தியாகத்தை நினைவு கூறும் இந்நிகழ்வில், அதுவும் 5 மணி நேர ஏற்பாட்டில் , இவ்வளவு பேர் கூடியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
நடிகர் கமல்ஹாசன் 1999ல் இவரைப் பற்றி திரைப்படமாக எடுக்க முயற்சி எடுத்தப் போது தான் இவரை தமிழக மக்கள் அறிந்துக் கொண்டனர். இது தான் உண்மை. இந்நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடப்பது பொருத்தமாக இருப்பதாக கருதுகிறேன். ஏனெனில், மருதநாயகம் ஐரோப்பியர்களிடம் போர் பயிற்சி பெற்ற பிறகு , தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாப் சிங்கின் படையில்தான் சேர்ந்தார். சாகும் வரை இவர்களின் நட்பு தொடர்ந்தது.
பிறகு ஆற்காடு நவாபு, மற்றும் ஆங்கிலேயர்களிடம் பணிபுரிகிறார்.
இயல்பில் அவர் ஒரு போர் வீரர்.
அவர் ஆங்கிலேயர்களின் ஆதிக்க நோக்கத்தை புரிந்துக் கொண்டதும், அவர்களை எதிர்க்க, உரிய சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறார்.
முதலில் ஆங்கிலேயர் துணையுடன் பிரெஞ்சுக்காரர்களை வீழ்த்துவது, பின்னர் தன்னை பலப்படுத்திக் கொண்டு ஆங்கிலேயரை வீழ்த்துவது அவரது திட்டமாகும்.
ஆங்கிலேய தளபதி ஹீரனுடன் அவர் மதுரை, நெல்லை சீமைகளில் பாளையக்காரர்களிடம் கப்பம் வசூலிக்க வந்தார்.
இப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் ஒன்று சேராமல் இருக்க, விஜயநகர பேரரசு காலத்தில் 72 சிறு, சிறு பாளைய அரசுகளாக இப்பகுதிகளை பிரித்து வைத்திருந்தனர்.
தெற்கே அவர்களிடையே பூலித்தேவனும், கட்டபொம்மனும் ஆற்றல் மிக்கவர்களாக , செல்வாக்கு மிக்க வர்களாக திகழ்ந்தார்கள்.
இவர்களோடு நல்லுறவை வளர்க்க மருதநாயகம் விரும்பியதும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் தெற்கே படைகளுடன் புகுந்த ஆங்கிலெய தளபதி ஹீரனின் அராஜகம் மற்றும் மனித உரிமை மீறல்களை கண்டித்து, சென்னையில் உள்ள ஆங்கிலேய தலைமைக்கு புகார் அனுப்புகிறார்.
குறிப்பாக ஆங்கிலேயப் படைகள் செல்லும் வழியில் கோவில் குளம் என்ற ஊரில் ஒரு கோயிலை சூறையாடியதை அவர் எதிர்க்கிறார்.
பிறகு ஆங்கிலேயர்கள் இவரையே மதுரை, நெல்லை சீமைக்கு தலைவராக நியமிக்கின்றனர்.
இது திருச்சியை ஆண்ட ஆற்காடு நவாபுக்கு பிடிக்கவில்லை. அவர் மருதநாயகத்தை தனது நவாப் பதவிக்கு சவாலானவர் என கருதி அவரை பலஹீனப்படுத்த நினைத்தார்.அது நடக்கவில்லை.
மதுரையில் கோட்டையை கட்டி, படையை பெருக்கி மருதநாயகம் நல்லாட்சியை தொடங்க, மக்கள் ஆதரவு பெருகுகிறது.
இவரின் மக்கள் செல்வாக்கை அறிந்த ஹைதராபாத் நிஜாம், இவரை மதுரை மற்றும் நெல்லையின் நவாபாக அறிவித்தார்.
இது ஆங்கிலேயர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் இதை எதிர்பார்க்கவும் இல்லை.
தன் ராணுவ பலத்தை பெருக்கிக் கொண்ட மருதநாயகம், ஆங்கிலேயருக்கு கப்பம் கட்ட மறுத்து, சுதந்திர ஆட்சியை பிரகடனம் செய்கிறார்.
ஆங்கிலேயர் கொடியை இறக்கிவிட்டு , நடனமாடும் குதிரையும், முரசும் கொண்ட திய சுதந்திரக் கொடியை ஏற்றி, ஆங்கிலேயருக்கு அடிபணிய மறுக்கிறார்.
இதனால் ஆங்கிலேயருக்கும், இவருக்கு மிடையே போர் தொடங்குகிறது.
மருதநாயகம் போர் திறனையும் தாண்டிய சிறந்த ஆட்சியாளர் என்பதை இந்நூலில் அறிய முடிகிறது.
இவர் ஆட்சி செய்த காலம் 5 ஆண்டுகள் தான் .ஆனால் எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தினார்.
முல்லை பெரியாறு பாசனத் திட்டத்திற்கு இவர்தான் மூலக் காரணம். அவர் திட்டத்தைத்தான் பிறகு ஆங்கிலேய அரசு செயல்படுத்தியது.
கொடைக்கானலுக்கு பயணம் செல்ல இவர்தான் முதலில் சாலை அமைத்து சுற்றுலாவுக்கு வழி வகுத்தார்.
கம்பம் - உத்தமபாளையத்தையும் சாலை வழியாக இணைத்ததும் இவர்தான்.
ஏற்றுமதி-இறக்குமதி வணிகத்தை பெருக்க மதுரையோடு தொண்டி துறைமுகத்திற்கும், தூத்துக்குடி துறைமுகத்திற்கும் தேசிய நெடுஞ்சாலையை அமைத்தார். இது அவரது தூர நோக்கு திட்டமாகும்.
அது போல விவசாயத்தை பெருக்க ஆறு, ஏரி, குளங்களை தூர் வாரினார். விவசாயிகளுக்கு பல உதவிகளை செய்தார்.
மதுரையில் புதிய நகர் களை உருவாக்கியதோடு , குடியிருக்க வீடு வசதி திட்டங்களையும் அமல்படுத்தினார்.
அதற்கு கான்சாபுரம் ஒரு உதாரணம்.
அதாவது, பொதுப்பணித் துறை திட்டங்களுக்கு சிறந்த முன்னோடியாக அவர் திகழ்ந்திருக்கிறார். கொள்ளையை ஒரு தொழிலாக கொண்டவர்களை அழைத்துப் பேசி, சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டினார்.
அவர்களுக்கு நிலங்களையும், வீடுகளையும் அளித்தார். சாலைகளை கண்காணித்து பாது காக்கும் வேலைகளை அவர்களிடம் ஒப்படைத்தார். அதாவது சாலைப் பணியாளர் திட்டத்தை அன்றே செயல்படுத்தியிருக்கிறார்.
மதுரையில் செளராஷ்டிர மக்கள் செய்து வந்த நெசவுத் தொழிலை மேம்படுத்த உதவிகளை செய்தார்.
இன்று தமிழக அரசு செயல்படுத்தும் கோ - ஆப் - டெக்ஸ் நிறுவனத்தை போல அன்று ஒரு திட்டத்தை வழி நடத்தினார்.
நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ஆடைகளை அரசே கொள்முதல் செய்யும் திட்டத்தை செயல்படுத்தினார்.
தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்கிட, முன் கடன் வழங்கும் திட்டத்தையும் கொண்டு வந்தார்.
ஆற்றல்மிக்கவர்கள், உற்பத்தியாளர்கள், கைவினைஞர்கள் ஆகியோரை வரவழைத்து மதுரையில் குடியேற்றினார்.
சாதி, சமய ஒற்றுமைகளை கட்டிக்காத்து அனைவரின் அன்பையும் பெற்றார்.
அதற்கு ஒரு உதாரணம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணங்களாகும். அந்த கோயிலுக்கு அவர் வருகை தந்ததும், அவர் உத்தரவில் சிதிலமடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட்டதும், அவர் அதற்கு மானியங்கள் வழங்கியதும் அந்த ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
சிக்கந்தர் துல்கர்ணை என்பவர் மதுரையை முன்பு ஆண்டவர். திருப்பரங்குன்றத்தில் உள்ள அவரது அடக்கத்தலத்தையும் பாதுகாக்க நிதி ஒதுக்கினார்.
அந்த நல்ல ஆட்சியாளரை முறியடிக்க, ஒன்றரை வருடங்களாக மதுரையை முற்றுகையிட்டனர் ஆங்கிலேயர்கள். அவர்களால் முடியவில்லை.
எனவே குறுக்கு வழியில் . துரோகிகள் மூலம் அவரை சிறைப் பிடித்தார்கள்.
ஒரு ரமலான் நோன்பின் போது, அவர் தொழுகையில் ஆழ்ந்திருந்தார்.
அப்போது அவருடன் இருந்த துரோகிகள், அவரை பாய்ந்து பிடித்து சிறைப்படுத்தி,ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தனர்.
இது அறிந்து அவரது நல்லாட்சியை கொண்டாடிய மதுரை மக்கள் புரட்சியில் குதித்தனர். அதை ஆங்கிலேயர்கள் ஒடுக்கினார். ஒரு ஆட்சியாளருக்கு ஆதரவாக மக்கள் புரட்சியில் இறங்குகிறார்கள் எனில் , அது ஆட்சியாளரின் மக்கள் செல்வாக்கை உணர்த்துகிறது அல்லவா?
அவரது இறுதி நிமிடங்கள் துயரமிக்கது.
அவரை இரண்டு முறை தூக்கிலிட்டும் கொல்ல முடியவில்லை என்றும், அதற்கு அவர் மருத்துவராகவும்,யோகா மூச்சுப் பயிற்சி அறிந்தவராக இருந்ததும் காரணம் என்றும் கூறப்படுகிறது.
தன் சக்தியை அவர் வெளிப்படுத்தி ஆங்கிலேயரை மிரள வைத்த பிறகுதான், அவர் விருப்பத்துடன் மூன்றாம் முறையாக தூக்கிலப்பட்ட பின்பு உயிர் பிரிந்திருக்கிறது.
பிறகு அவரது உடலை தலை வேறு, உடல் வேறு, கைகள் வேறு என சிதைத்து திருச்சி, பெரியகுளம், பாளையங்கோட்டை என பிரித்தனுப்பி அடக்கம் செய்யப்பட்டது.
இவற்றை படிக்கும் போது வேதனை மிஞ்சுகிறது.
மருதநாயகத்தின் முக்கிய சிறப்புக்குரிய ஆளுமை என்னவெனில், அவரது தலைமையை ஏற்று ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர்கள், போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள் என ஐரோப்பிய வீரர்கள் பணி புரிந்ததுதான்.
ஒரு தமிழனின் ஆளுமை இது.
இந்தியாவில் வேறு யாருக்கும் இந்த சிறப்பில்லை .
அன்று மருதநாயகம்,பூலித்தேவன், கட்டபொம்மன், அழகு. முத்துக் கோன் ஆகியோர் ஒன்றுபட்டு செயல்பட்டிருந்தால் தமிழ் நிலத்தின் வரலாறு மாறிப் போயிருந்திருக்கும். இ
வர்களின் தியாகங்களை, விடுதலை உணர்வை நினைவுப்படுத்தவே இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம்.
இது போல வேலுநாச்சியார், தீரன் திப்பு சுல்தான், தீரன் சின்னமலை , பூலித்தேவன், கட்டபொம்மன் என பலரின் தியாகங்களையும் பேசும் நிகழ்ச்சிகளை நடத்துவோம்.
இது நமது கடமையாகும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியை மஜக மாநில துணைச் செயலாளர் அகமது கபீர், சமூக ஆர்வலர் நவீன், தஞ்சை மாநகர மஜக மாவட்ட செயலாளர் ஜப்பார், ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். .......
நூல் பெற:
மாவீரன் கான் சாஹிப் நேஷனல் பப்ளிஷர்ஸ்
அலைபேசி : 9444 047786
தொலைபேசி : 044 - 28 34 33 85

Tags: செய்திகள்

Share this