லால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெற்ற சமுதாய ஒற்றுமை விழா..!
நிர்வாகி
0
லால்பேட்டை, நவ. 21-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் லால்பேட்டை நகரம் சார்பில் சமுதாய ஒற்றுமை விழா லால்பேட்டை நகர அ.இ.அ.தி.மு.க. மற்றும் சமுதாய பிரமுகர்கள் தாய்ச்சபையில் சங்கமித்து இணையும் மாபெரும் விழா 20-11-2021 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் லால்பேட்டை நூர் மஹாலில் மௌலான தளபதி ஷபீகுர் ரஹ்மான் நினைவரங்கில் நகரத் தலைவர் எஸ்.எம். அப்துல் வாஜிது தலைமையில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் எம்.ஏ. முஹம்மது ஜக்கரியா, மாவட்ட செயலாளர் ஏ.சுக்கூர், மாவட்ட பொருளாளர் ஏ. சஹாபுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மண்டல பொறுப்பாளர் ஏ.எஸ். அப்துல் ரஹ்மான் ரப்பானி அறிமுக உரையாற்றினர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அ.இ.அ.தி.மு.க. லால்பேட்டை நகர செயலாளர் ஏ.ஆர். சபியுல்லாஹ், சமுதாய பிரமுகர் எள்ளேரி ஜெ. அலாவுதீன் உள்ளிட்ட ஏராளமானோர் தங்களை தாய்ச்சபையில் இணைத்துக் கொண்டனர்.
அவர்களை வரவேற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசியதாவது:-
சிறப்புமிக்க லால்பேட்டை நகரில் இன்று ஒரு புதிய வரலாற்றுக்குத் துவக்கப் பாடம் எழுதப்பட்டிருக்கிறது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சமுதாய ஒற்றுமை நிகழ்ச்சி எனும் தலைப்பில் மகிழ்ச்சி பொங்க நடத்தப்பட்டு கொண்டிருக்கும் இச்சிறப்பிற்குரிய நிகழ்ச்சியில் உங்களோடு சேர்ந்து இந்த எளியவனுக்கும் பங்கேற்க வாய்ப்பளித்த நகர முஸ்லிம் லீக் நிர்வாகத்தினருக்கும், அங்கத்தினருக்கும், இதில் பங்கேற்று சிறப்பித்துக் கொண்டிருக்கிற ஊர் மக்கள் அனைவருக்கும் முதற்கண் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மூன்று உலமா பெருமக்கள்
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில நிர்வாகிகள் பங்கேற்று உரையாற்றிய இந்த நிகழ்ச்சியில் - நகர பெரியவர்களும், உலமா பெருமக்களும் பங்கேற்று உரையாற்றி சிறப்பித்து இருப்பது எங்களுக்கெல்லாம் பெருமிதத்தைத் தந்துள்ளது. அண்மையில் இவ்வுலகை விட்டுப் பிரிந்த தளபதி ஷஃபீக்குர் ரஹ்மான் ஹஜ்ரத், அவருக்குப் பிறகு பிரிந்த அவரது தம்பி ஃபைஜுர் ரஹ்மான் ஹஜ்ரத், ஓரிரு நாட்களுக்கு முன் நம்மைவிட்டுப் பிரிந்த ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவரும் - லால்பேட்டை மன்பஉல் அன்வார் அரபிக் கல்லூரியின் மூத்த பேராசிரியருமான சங்கைக்குரிய அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் ஆகியோரின் மறைவு இந்தச் சமுதாயத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும். அப்பெருமக்களின் மறைவுக்கு இந்த நிகழ்ச்சியில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறீர்கள். நம் சமுதாயத்திற்கும், ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் அவர்கள் தம் வாழ்நாளெல்லாம் தொடர்ந்து ஆற்றி வந்த சேவைகளை நாமும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்வதை வெளிப்படுத்துவதாக இந்தத் தீர்மானம் அமைந்துள்ளது.
ஏ.ஆர். ஷபியுல்லாஹ்
இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டுள்ள நல்ல பல தீர்மானங்களுள் - இந்த லால்பேட்டை பேரூராட்சி மன்றத்தில் பலமுறை தலைவராக இருந்து மக்கள் சேவையாற்றிய அன்புச் சகோதரர்.ஏ.ஆர். ஷஃபீயுல்லாஹ், எள்ளேரி ஜெ. அலாவுதீன் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பல்வேறு சகோதரர்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகில் இணைந் துள்ளதை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறீர்கள். இந்த லால்பேட்டைக்கு கட்சி நிகழ்ச்சி, மார்க்க நிகழ்ச்சி, திருமண நிகழ்ச்சிகள், சமுதாயம் சார்ந்த இதர நிகழ்ச்சிகள் என பலதரப்பட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதற்காக தளபதி அவர்களுடன் நான் எப்பொழுதெல்லாம் வந்து இருக்கிறேனோ அப்பொழுதெல்லாம் எங்களோடு ஒன்றாக இணைந்து இருந்து செயலாற்றியவர்தான் சகோதரர் ஷஃபீயுல்லாஹ் அவர்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அவர்கள் ஏதோ ஓர் சூழலில்தான் இருந்தாரே தவிர - உள்ளபடியே அவரது உள்ளமெல்லாம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்ற இந்த மாபெரும் பேரியக்கத்தைச் சார்ந்தே இருந்திருக்கிறது என்பது யாரும் சொல்லித் தெரியத் தேவை இல்லை எனும் அளவுக்கு அவரிடமிருந்து அவ்வப்போது வெளிப்பட்டு வந்திருக்கின்றது. ஆளுங்கட்சியாக இருந்த ஒரு கட்சியில் ஏதோ ஒரு சூழல் காரணமாக இருந்திருந்தாலும் - அதன் மூலமும் இந்தச் சமுதாயத்திற்கும், இப்பகுதி மக்களுக்கும் சில பல நல்ல காரியங்களைச் செய்து இருந்திருக்கிறார். அதற்காகத்தான் இருந்தும் இருக்கிறார். மக்கள் பணியில் நல்ல அனுபவத்தைக் கொண்டுள்ள அவர், இத்தனைக் காலம் தயங்கித் தயங்கிச் செய்துகொண்டிருந்த சமுதாயப் பணிகளை இனி நமது இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்ற குடையின் கீழ் ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும், இன்னும் வேகமாகச் செய்திட முடியும். அதற்கான சூழலையும், ஆற்றலையும் எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு வழங்க வேண்டும் என நாம் அனைவரும் துஆ செய்வோம்.
எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றவுடன் - ஏதோ நம் சமுதாயத்திற்கு எதிரான கட்சி என்று கருதிவிட தேவையில்லை. அவர்களுக்கு என்று சில கொள்கைகள் இருக்கின்றன. அக்கட்சியைத் துவக்கிய எம்ஜிஆர் அவர்களுடன் தேவையான நேரங்களில் சமுதாயப் பிரச்சனைகளுக்காக நாம் பேசி இருக்கிறோம். நாம் சொன்ன பலவற்றை அவர் உள்வாங்கி, அவ்வப்போது நிறைவேற்றியும் தந்திருக்கிறார். சில தருணங்களில் தராமல் மறுத்தும் இருந்திருக்கிறார். அது ஓர் அரசியல். அவரைத் தொடர்ந்து செல்வி ஜெயலலிதா அவர்களுடனும் அரசியல் களத்தில் நாம் அவ்வப்போது நெருக்கமான தொடர்பு வைத்திருந்திருக்கிறோம். அவரும் நமக்குப் பலவற்றைச் செய்து தந்துதான் இருக்கிறார். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மீதும், அதன் தலைவர்கள் மீதும் தனிப்பட்ட மரியாதையும், நல்ல பார்வையும் எப்போதும் கொண்டிருந்தார். ஆக, அவர்கள் கட்சியின் கொள்கை என்ற அடிப்படையில் சில நேரங்களில் முரண்பட்டு இருந்திருக்கலாமே தவிர - மொத்தமாகவே அவர்கள் முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிரானவர்கள் என்ற எண்ணம் ஒருபோதும் மனதளவில் கூட அவர்களுக்கு இருந்ததில்லை. அரசியலுக்காக மேடைகளில் அப்படிப் பேசப்படுவது உண்டு. அவர்களோடு நாம் உறவில் இருந்த காலத்திலும் சரி; உறவை விட்டு ஒதுங்கிய காலத்திலும் சரி - ஒருபோதும் அவர்கள் முஸ்லிம் லீகையோ, அதன் தலைவர்களையோ பகைக்கவுமில்லை; விமர்சனம் செய்ததும் இல்லை. செல்வி ஜெயலலிதா அவர்களுக்குப் பிறகு அக்கட்சியை வழிநடத்திய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், அவரோடு இணைந்து செயலாற்றிய ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் என அனைவரோடும் நமக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் எனக்கு மிக நெருங்கிய நண்பர். இதையெல்லாம் இங்கே நான் குறிப்பிடுவதற்குக் காரணம் - ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக நாம் பல்வேறு கட்சிகளில் இருந்திருப்போம் இப்பொழுது இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகில் இணைந்து இருக்கிறோம். அதற்காக முன்பு இருந்த கட்சியைத் தவறாக விமர்சித்து விடுவது என்பது சரியாகாது. அதை நாம் ஒருபோதும் சரிகாணவும் மாட்டோம். அந்தக் கட்சிகளில் இருந்தபோது கண்ட நல்ல திட்டங்களை, நடவடிக்கைகளை, செயல்பாடுகளை நாம் எடுத்துக் கொள்வோம்.
கொள்கை-கோட்பாடு ஒரே நேர்க்கோட்டில். . . .
தமிழகத்தில் இருக்கும் சுமார் 50 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட முஸ்லிம் சமுதாயத்திற்கு - இங்கு இருக்கிற அதிமுக, காங்கிரஸ் என எந்தக் கட்சியாகட்டும்; அவர்களையெல்லாம் விட இந்தச் சமுதாயத்திற்கு என்றும் பாதுகாப்பு அரணாகவும், இதன் நியாயமான கோரிக்கைகளை உணர்ந்து அவ்வப்போது உடனுக்குடன் நிறைவேற்றித் தரக்கூடியதாகவும் திராவிட முன்னேற்றக் கழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உடைய கொள்கை கோட்பாடும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை கோட்பாடும் ஒரே நேர்கோட்டில் இருப்பதுதான். திமுகவுடன் நாம் கொண்டுள்ள கூட்டணி கொள்கை ரீதியானது என்று தம்பி அபூபக்கர் இங்கே சொன்னார். அதனால்தான் நாம் அன்றும் அவர்களோடு இருந்தோம்; இன்றும் இருக்கிறோம்; இனியும் இருப்போம். தந்தை பெரியார் காலம் தொட்டு - பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்று தொடர்ந்து, இன்று தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கக்கூடிய தளபதியார் அவர்களது காலம் வரை கொள்கை ரீதியாக, வரலாற்று ரீதியாக திமுகவுக்கும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகுக்கும் மிக நெருக்கமான ஒற்றுமை இருக்கிறது. அதுதான் நம்மை இன்றளவும் இணைந்து பயணிக்க வைத்திருக்கிறது. ஆக இது ஏதோ தேர்தலுக்காக கொள்ளப்பட்டுள்ள உறவு அல்ல; மாறாக கொள்கை ரீதியானஉறவு.
வேளாண் சட்டங்கள் வாபஸ்
விவசாயிகளுக்கு எதிராக தமது அதிகாரத்தை பயன்படுத்தி ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஓராண்டு காலமாக தலைநகர் தில்லியில் விவசாயிகள் ஒன்று திரண்டு தொடர் போராட்டத்தை நடத்தினர். அப்போது அவர்கள் சந்தித்த உயிரிழப்புகள், பொருள் இழப்புகள், அவதிகள் கொஞ்சநஞ்சமல்ல. அவர்களின் வலிமைமிக்க நீண்ட தொடர் போராட்டத்திற்குப் பிறகு அந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாகவும், வரும் 29ஆம் நாளன்று துவங்கவுள்ள பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின்போது அவை முறைப்படி திரும்பப் பெறப்படும் இன்றும் இந்திய பிரதமர் நேற்று அறிவித்து இருக்கிறார். இது விவசாயிகள் நடத்திய தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த பயனாகவும் இருக்கலாம் அல்லது வரவிருக்கக்கூடிய தேர்தலை முன்னிறுத்திய அறிவிப்பாகவும் இருக்கலாம். இந்த அறிவிப்பை இந்தியாவின் வட மாநிலத்தவரும், தென் மாநிலத்தவரும் வரவேற்று இருக்கின்றனர். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நாமும் வரவேற்று இருக்கிறோம். நேற்று பிரதமரின் அறிவிப்பு வந்தவுடன் நான் மணிச்சுடர் நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு, அந்த அறிவிப்பை வரவேற்று நமது அறிக்கையை வெளியிடுவோம் என்று கூறி திருச்சியிலிருந்து அறிக்கையை எழுதி அனுப்பினேன். தம்பி அபூபக்கர் அப்பொழுது சென்னையில் இல்லாததால் பிற நிர்வாகிகளுடன் பேசி அதை வெளியிட்டோம். அதில் விவசாயச் சட்டம் திரும்பப் பெறப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பை வரவேற்பதோடு, அதைவிட பெரும் பாதிப்பை இந்தியாவிலுள்ள லட்சக்கணக்கான முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்படுத்தி இருக்கக் கூடிய குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையையும் இணைத்து நாம் அறிக்கை வெளியிட்டோம். குடியுரிமை திருத்தச் சட்டம் மசோதாவாக முன்வைக்கப்பட்ட நாள் முதல் அது சட்டமாக்கப்பட்டது வரை இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் சமுதாயத்துடன் இணைந்து தொடர் போராட்டங்களை நடத்தினர். இதனால் ஏற்பட்ட உயிர் இழப்புகளும், பொருள் இழப்புகளும் ஏராளம். எனவே முஸ்லிம் சமுதாயத்தை முழுமையாகவும், பிற சமய மக்களையும் பாதிக்கும் அளவிலான இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் நீங்கள் திரும்பப் பெற்று, இந்த நாட்டின் அனைத்து தரப்பு மக்களின் வரவேற்பையும் பெறுங்கள்; நாங்களும் அதை உளமார வரவேற்போம் என்று நமது அறிக்கையில் தெரிவித்திருந்தோம்.
குடியுரிமை திருத்தச் சட்டம் வாபஸ் பெறப்படவேண்டும்
வேளாண் சட்டம் திரும்பப் பெறப்பட்டதை வரவேற்று தமிழகத்தில் எல்லா அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அறிக்கை வெளியிட்டார்கள். ஆனால் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் குடியுரிமை திருத்த சட்டத்தையும் திரும்பப் பெற கூறியதைப் போல வேறு எந்தக் கட்சியும் கோரிக்கை வைக்கவில்லை - ஒரே ஒரு கட்சியைத் தவிர. அந்த ஒரே ஒரு கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான். சிறுபான்மை மக்களைப் பாதிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், சி.ஏ.ஏ. சட்டத்தையும் திரும்பப் பெறுமாறு முஸ்லிம்கள் சமுதாயத்தில் இருந்து கொண்டு நாம் கேட்டோம். ஆனால் முஸ்லிம் சமுதாயத்தின் சார்பாக அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதே கோரிக்கையை தமிழக முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் மட்டும்தான் முன்வைத்திருக்கிறார். தந்தை பெரியார், அவரைத் தொடர்ந்து பேரறிஞர் அண்ணா அவரைத் தொடர்ந்து முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் முஸ்லிம் சமுதாயத்திற்கு பிரச்சினைகள் வந்தபோதெல்லாம் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்திருக்கிறார்கள். அவர்களைப் போலவே கலைஞர் அவர்களும் தன் வாழ்நாளின் இறுதி வரை அப்படி இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட கலைஞர் பெற்று வளர்த்த தவப்புதல்வன் தளபதி அவர்களும் அதே பாணியில் தனது நடவடிக்கைகளை அமைத்துக் கொண்டிருப்பது உள்ளபடியே நமக்கெல்லாம் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகும்.
கொரோனா காலத்தில் முதல்வரின் சாதனை
கடந்த மே மாதம் 07ஆம் நாளன்று தளபதி அவர்கள் தமிழக முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்றார். அந்த நேரத்தில் மாநிலத்தில் பல்வேறு நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் இருந்தாலும், எல்லாவற்றையும் தூக்கி விழுங்கும் வகையில் கொரோனா பேரிடர் அமைந்துவிட்டது. அவர் ஆட்சிப் பொறுப்பேற்றபோது தமிழகத்தில் சுமார் 40,000 மக்கள் கொரோனா பாதிப்பில் இருந்தார்கள். மருத்துவமனைகளில் படுக்கை இல்லாமல் நோயாளிகள் நடு வீதிகளில் சீரழிந்து கொண்டு இருந்தார்கள். ஆனால் தமது பக்குவமிக்க அழகான செயல்பாடுகளால் 40,000 என்றிருந்த எண்ணிக்கையை வெறும் 20 அல்லது 25 பேர் மட்டும் என்ற அளவில் மட்டுப்படுத்தி, அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு போதிய அளவில் படுக்கை வசதிகள், பிராணவாயு என அனைத்தும் திருப்திகரமான அளவில் கிடைக்கச் செய்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள். இது ஓர் இமாலய சாதனை. மற்ற எல்லா சாதனைகளையும் விட்டுவிடுவோம். இந்த ஒரே ஒரு சாதனைக்காக மட்டுமே தமிழக முதல்வர் தளபதியார் அவர்களை இந்த மாநிலத்தின் மக்கள் காலமெல்லாம் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடலாம்.
கடந்த ஆட்சிக் காலங்களில் அரசு நடவடிக்கைகள் அனைத்தும் வறட்சியுடன் காணப்பட்ட நிலையில், இப்பொழுது நிலைமை முற்றிலும் மாறி, ஒவ்வொரு நாளும் மக்கள் மனதை மகிழ்விக்கும் பல்வேறு சட்டங்களும், திட்டங்களும் அறிவிப்புகளாக வெளிவந்து, அவற்றின் மீது உடனுக்குடன் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநிலத்தின் நகர்புறம், கிராமப்புறங்கள் என எந்தப் பகுதியையும் விட்டுவைக்காமல் - பிரச்சனை எங்கு இருந்தாலும் உடனடியாக அது குறித்து தகவல்களைக் கேட்டறிந்து, தேவைப்பட்டால் நிகழ்விடத்துக்கே நேரில் சென்று பார்வையிட்டு, அனைத்தையும் அறிந்துகொண்டு, உரிய நேரத்தில் உடனுக்குடன் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டிருக்கக்கூடிய மகத்தான இந்த அரசு வெறும் திமுக அரசு என்று சொல்லிவிட முடியாது. இது மக்கள் அரசு.
பேரணாம்பட்டில் வீடு இடிந்து விபத்து
அண்மையில் பெய்த கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் பேர்ணாம்பட்டு என்ற ஊரில் ஒரு வீடு இடிந்து விழுந்து, அங்கிருந்த 9 பேர் உயிரிழந்தனர். ஏராளமானவர்கள் காயமுற்றனர். உயிர் இழந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரணம் உரிய முறையில் வழங்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் அங்கத்தினர் அதற்கான முன்னெடுப்புகளைச் செய்தனர். அத்தோடு நிறுத்தி விடாமல் தமிழக முதல்வர் அவர்களின் நேரடி கவனத்திற்கும் கோரிக்கையைக் கொண்டு சென்றனர். அதன் விளைவாக - உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படுமென அன்று இரவே முதல்வர் அவர்கள் அறிவிப்பை வெளியிட்டார்.
காவல் துறையில் முஸ்லிம்கள்
முஸ்லிம் சமுதாய மக்களை போலீசாராக நியமிப்பதற்குக் கூட தடை போடப்பட்டிருந்த ஒரு காலம் இருந்தது. நாம் அதை நேரடியாகவே பார்த்திருக்கிறோம். காவலர் பணிக்குக் கூட இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்கள் விண்ணப்பிக்க முடியாது. அந்த அளவுக்கு இங்குள்ள அரசியல் இருந்திருக்கிறது. அப்படிப்பட்ட இந்த மாநிலத்தில்தான் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட மூன்றரை சதவீத இட ஒதுக்கீடு சரியான முறையில் நடைமுறைப் படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க சிறப்புக் குழுவை நியமித்திருக்கிறது தளபதியின் அரசு. முஸ்லிம் சமுதாய மக்களாக நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கிற தீர்வுகளை நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த அரசு முஸ்லிம்களுக்கு மட்டும் செய்யவில்லை; மாறாக இந்த மாநிலத்தில் உள்ள யார் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு உடனுக்குடன் தேவையானவற்றைச் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த மாநிலத்தின் அனைத்து தரப்பு மக்களின் மேம்பாட்டிற்காகவும் இந்த அரசு கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட இந்த அரசு நம் அனைவரின் உளப்பூர்வமான ஒத்துழைப்போடு தொடர்ந்து நீடிக்க வேண்டும்; வரும் காலங்களிலும் தொடர வேண்டும் என்பதே நமது ஆசையாகவும் எதிர்பார்ப்பாகவும் இருந்துகொண்டிருக்கிறது. அதற்காகத்தான் இந்த அரசுக்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவளித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஆதரவு தொடர்ந்து இருக்கும்.
லால்பேட்டையில் அரசு மருத்துவமனை
கடந்த ஆட்சியின்போது சில நூறு பேர் மட்டுமே இருந்த கிராமங்களில் கூட அம்மா க்ளினிக் என்று மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. ஆனால், சுமார் 30 ஆயிரம் மக்கள் வசிக்கும் இந்த லால்பேட்டை நகருக்கு இதுவரை அரசு மருத்துவமனை இல்லை. இங்கு ஓர் அரசு மருத்துவமனையை உடனடியாக அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையும் இங்கே தீர்மானமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தக் கோரிக்கைத் தீர்மானத்தை இங்கிருக்கும் எம்.ஆர்.கே. அவர்களிடம் சமர்ப்பித்து இருக்கிறீர்கள். அத்தோடு நின்று விடாமல் தமிழக முதல்வர் அவர்களின் நேரடி கவனத்திற்கும் நாங்கள் நிச்சயம் கொண்டு செல்வோம். நல்லது நடக்கும் என்று நம்புவோம்.
தளபதி ஷபீகுர் ரஹ்மானின் சேவை
இந்த ஊருக்கு முஸ்லிம் லீக் ஆற்றி வரும் சேவைகள் இன்று நேற்று நடப்பதல்ல. குறிப்பாக இந்தப் பகுதியை - இந்த ஊரைப் பொருத்த வரை இதற்கு எப்போதெல்லாம் சோதனை வந்திருக்கிறதோ அப்பொழுதெல்லாம் பாதுகாப்பு அரணாக தளபதி ஷஃபீக்குர் ரஹ்மான் அவர்கள் இருந்திருக்கிறார்கள். அதற்குச் சான்றாக எத்தனையோ நிகழ்வுகளை என்னால் எடுத்துச் சொல்ல முடியும். காட்டுமன்னார்குடியில் இருந்து இதே ஊருக்குள் நுழையும் வழியில் சுமார் 50 முஸ்லிம் வணிக வளாகங்கள் உள்ளன. அவை அனைத்தும் ஜமாஅத்திற்குச் சொந்தமானவை. இங்கிருந்து சிதம்பரத்திற்குப் போடப்படும் சாலையை விரிவாக்கம் செய்வதற்காக அந்த வணிக வளாகங்கள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்று திட்டம் தீட்டப்பட்டு, கலைஞர் ஆட்சியின்போது அதற்கான பணி ஆணையும் வெளியிடப்பட்டது. உடனே கலைஞர் அவர்களிடம் போய், """"இது லால்பேட்டை ஜமாஅத்துக்குச் சொந்தமான வணிக வளாகம்... இந்த ஜமாஅத்தின் கீழ் பள்ளிவாசல், மதரசாக்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன... இந்த வணிக வளாகங்கள் இல்லாமல் ஆகிவிட்டால் பள்ளிவாசலின் வருமானம் முற்றிலும் பாதிக்கப்படும்.., அதனால் இந்த நிறுவனங்களை நடத்த இயலாத நிலை ஏற்படும்"""" என்று நான் கூறினேன். அருகிலிருந்த அமைச்சரிடம் கலைஞர், """"என்னப்பா இப்படிச் சொல்கிறாரே? இதன் சரியான நிலை என்ன என்று பார்த்து சொல்லுங்கள்"""" என்று கூற, """"அய்யா, அதிகாரிகள் அவ்வாறு திட்டம் தீட்டித் தந்திருக்கிறார்கள்... உண்மை நிலையை விசாரித்து அறிந்து வருகிறோம்"""" என்று கூறிச் சென்றனர். இதற்கிடையில் தளபதி அவர்களை அழைத்து முழு விபரம் கேட்டேன். """"இந்தப் பகுதியில் இருந்து சிதம்பரம் செல்வதற்கான சாலைக்கு இடம் வழங்கியதே ஜமாஅத்துதான்... தமது வணிக வளாகங்களை ஒட்டி அவர்கள்தான் சாலைக்காக இடம் வழங்கியிருக்கிறார்கள்"""" என்று தளபதி கூற, எனக்கு தூக்கி வாரிப் போட்டது. உடனடியாக அவரையும் கலைஞரிடம் அழைத்துச் சென்று, """"இந்தச் சாலைக்கு இடம் கொடுத்ததே ஜமாஅத் நிர்வாகம்தான்... அதற்கான ஆவணங்களையும் உங்களிடம் சமர்ப்பித்து இருக்கிறோம்... ஆக இடம் கொடுத்தவர்களின் வணிக வளாகங்களையே எடுத்துவிட்டு சாலையை விரிவாக்குவது என்பது என்ன நியாயம் அய்யா?"""" என்று நான் கேட்டதும்தான் தாமதம், """"யாரய்யா இப்படி திட்டம் போட்டது? உடனடியாக திட்டத்தை மாற்றி அமையுங்கள்"""" என்று அவர் உத்தரவிட, அதன்படி அந்தச் சாலை விரிவாக்கம் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது நிதர்சனமான உண்மை. இன்னும் நிறைய சொல்லலாம். சான்றுக்காக ஒன்றை மட்டும் சொல்லி இருக்கிறேன்.
இந்த வரிசையில்தான் இன்று இங்கே அரசு மருத்துவமனை தேவை என்ற கோரிக்கையும் தீர்மானமாக வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதியைச் சேர்ந்த அமைச்சர் பெருமகனார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களிடமும், முதலமைச்சர் அவர்களுக்கும் இக்கோரிக்கையை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கொண்டு செல்லும். அதற்கு உறுதுணையாக இந்தப் பகுதியில் மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்து, இப்பகுதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் - சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரிடம் அவர்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இந்தப் பணியை நிறைவேற்றித் தரவேண்டும் என்ற கோரிக்கையை கட்சியின் சார்பில் அவர்களுக்கும் வழங்க இருக்கிறோம் என்பதை இங்கே அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தல்
வரும் டிசம்பர் மாதம் இரண்டாம் நாளன்று தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நாளை தமிழக தேர்தல் ஆணையம் அறிவிக்கப் போவதாக நான் செய்தியில் பார்த்தேன். இந்த ஊர் பேரூராட்சிக்கு நடைபெறும் தேர்தலில் பேரூராட்சி தலைவர் பொறுப்பை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகுக்கு தருமாறு கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அப்படி நடந்தால் அது மிகவும் நன்மையாக இருக்கும். பொதுவாக இதுபோன்ற நடவடிக்கைகளை அந்தந்தப் பகுதி மாவட்டச் செயலாளர்கள்தான் மேற்கொள்வார்கள். தலைமையில் இருந்து நேரடியாக செய்வது சரியாக இருக்காது. எனவே இந்தப் பகுதி திமுக மாவட்ட செயலாளரையும், திமுக நண்பர்களையும் நேரில் சந்தித்துப் பேசி, அவர்களை முறைப்படி அணுகி, கோரிக்கையை முன்வைக்க வேண்டும். அப்படி கோரிக்கை வைக்கப்பட்ட ஆவணங்களின் நகலை நமக்கும் அனுப்பித் தந்தால் உரியவர்களிடம் நாமும் வலியுறுத்தலாம்.
தமிழக ஹாஜிகள் சென்னையிலிருந்து புறப்பட. . .
அதுபோல, அதிக மக்கள் தொகை கொண்டதாக உள்ள மா.கொளக்குடி ஊராட்சியிலிருந்து ஜாகிர் உசேன் நகரை தனி ஊராட்சியாக அமைக்க வேண்டும் என்றும் நீங்கள் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறீர்கள். ஓர் ஊராட்சியைத் தனியாகப் பிரிப்பதற்கு அதன் மக்கள்தொகை, வருமானம் ஆகியவற்றைக் கணக்கெடுக்கும் வரையறை அரசிடம் இருக்கிறது. இங்கே மணிச்சுடர் செய்தியாளர் ஷாகுல் ஹமீது வந்திருக்கிறார். அவருடன் கலந்து பேசி விபரங்களைத் தெரிவித்து, தேவையான ஆவணங்களை சமர்ப்பித்தால் அவர் அதற்கான வேலைகளைச் செய்து, இங்கே யார் யாரிடம் அந்தக் கோரிக்கையை வைக்க வேண்டுமோ வைத்து, அதன் நகலை எங்களுக்கு அனுப்பித் தருவார். அதை நாங்கள் தலைமை நிலையத்தின் மூலமாக அமைச்சர் அவர்களுக்கும், முதலமைச்சர் அவர்களுக்கும் எடுத்துச் சென்று கோரிக்கையை நிறைவேற்றப் பாடுபடுவோம் என்றும் இங்கே உறுதி கூறிக்கொள்கிறேன்.
தமிழகத்தைச் சேர்ந்த ஹஜ் பயணிகள் பயணம் சென்று வருவதற்கு சென்னை விமான நிலையத்தையே ஏற்பாடு செய்யுமாறும் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறீர்கள். தமிழகத்து மக்கள் தொலைவிலிருக்கும் கொச்சி விமான நிலையம் வரை சென்று பயணம் மேற்கொள்வது அவதிக்குள்ளாக்கும் செயல். எனவே சென்னை விமான நிலையத்தை அறிவிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.
தலைமை தாங்க வாருங்கள்
ஆக மொத்தத்தில் நீங்கள் நிறைவேற்றி இருக்கக்கூடிய தீர்மானங்கள் அனைத்தும் அழகானவை, அற்புதமானவை, மிகவும் தேவையானவை, பயன்தரத்தக்கவை. இந்த எல்லா கோரிக்கைத் தீர்மானங்களும் செயல்வடிவம் பெறுவதற்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் நிச்சயம் பாடுபடும் என்று கூறிக்கொண்டு, அப்படிப்பட்ட இந்த இயக்கத்தில் இன்று அடியெடுத்து வைத்து இருக்கக்கூடிய உங்கள் அனைவரையும் உளமார வரவேற்கிறேன். வெறுமனே சாதாரண உறுப்பினராக மட்டும் இருந்து கொள்ளுங்கள், கொடி பிடியுங்கள், கோஷம் எழுப்புங்கள் என்று சொல்வதற்காக உங்களை வரவேற்கவில்லை. மாறாக, உங்கள் ஆக்கப்பூர்வமான பணிகளின் மூலம் உங்கள் தகுதியை மென்மேலும் வளர்த்துக்கொண்டு கட்சியை வழிநடத்தவும், தலைமைப் பொறுப்புகளை அலங்கரிக்கவும் வாருங்கள் என்றுதான் அழைக்கிறேன்.
நல்லதொரு பயனுள்ள நிகழ்ச்சியாக இதை ஏற்பாடு செய்து, இந்த எளியவனையும் வரவழைத்து உரையாற்ற வாய்ப்பளித்த இந்த பகுதியின் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகத்திற்கும், இதுவரை ஆர்வமுடன் அவதானித்த பொது மக்களாகிய உங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
Tags: லால்பேட்டை