Breaking News

சென்னையில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய செயற்குழு கூட்டம்

நிர்வாகி
0
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய செயற்குழு கூட்டம் நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.பைஸி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர்கள் தெகலான் பாகவி, வழக்கறிஞர் ஷர்புதீன் அஹமது, நாஸ்னி பேகம், பொதுச்செயலாளர்கள் அப்துல் மஜீத், இலியாஸ் தும்பே, முகமது ஷஃபி, செயலாளர்கள் டாக்டர் தஸ்லீம் ரெஹ்மானி, சீதாராம் கொய்வால், டாக்டர் மஹ்மூத் ஆவாத் ஷெரீப், யாஸ்மின் ஃபரூக்கி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக், துணைத் தலைவர் அப்துல் ஹமீது, பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் மற்றும் கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, மேற்குவங்கம், பீகார், டெல்லி, உ.பி., குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நிர்வாகிகள் உட்பட அகில இந்திய செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தற்போதைய இந்திய சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட்டு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு தீர்மானங்கள்:
1. விண்ணை முட்டும் விலைவாசி – தடுமாறும் இந்தியர்களின் வாழ்க்கை:
உலகளாவிய பசி அட்டவனை 2021 இன் படி, பட்டினியின் அடிப்படையில் 116 நாடுகளில் இந்தியா 101வது இடத்தில் உள்ளது. மேலும் உலகளாவிய பசி அட்டவணை 2021 இன் படி ‘கடுமையான’ பட்டினி பிரிவில் இந்தியா தொடர்ந்து உள்ளது. ஆனால், இந்திய அரசாங்கம் தனது குடிமக்களின் வாழ்க்கை நிலைமைகளில் மிகவும் அலட்சியமாக உள்ளது. அதேவேளையில் குடிமக்களான சாமானியர்களிடமிருந்து கொள்ளையடிப்பதற்கு பெரும் முதலாளிகளுக்கு ஆபத்தான முறையில் உதவி வருகிறது.
தற்போதைய ஒன்றிய பாஜக ஆட்சியில் விலைவாசி உயர்வு என்பது வாடிக்கையாகி விட்டது. பெட்ரோல் விலை ரூ.117/- ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.107/- ஆகவும் உயர்ந்துள்ளது. வர்த்தக பயன்பாட்டுக்கான எரிவாயு விலை திடீரென சிலிண்டருக்கு ரூ.266/- உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் சாதாரண குடும்பங்களுக்கு கட்டுப்படியாகாததாகிவிட்டது. சாமானியர்களின் பாக்கெட்டில் இருந்து பணத்தை கொள்ளையடிப்பதில் ஆர்வம் காட்டும் ஒன்றிய பாஜக அரசு, இந்தியர்களின் வாழ்க்கையில் அரசியல் விளையாடுகிறது.
இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு எண்ணெய் விலையை நிர்ணயம் செய்ய அரசாங்கம் வழங்கிய சுதந்திரம் மற்றும் மத்திய-மாநில அரசுகள் எண்ணெய் மற்றும் எரிவாயு மீது விதிக்கும் அதிக அளவு வரிகள் ஆகியவையே ஜெட் வேகத்தில் உயரும் விலைவாசி உயர்வுக்கு காரணம். விலைவாசியை உடனடியாக குறைக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மக்கள் வீதிக்கு வந்து ஆட்சியின் கொடுங்கோன்மையை எதிர்த்து போராடுவார்கள் என எஸ்.டி.பி.ஐ. கட்சி எச்சரிக்கிறது.
2) திரிபுரா கலவரம் ஒரு ஆபத்தான சமிக்ஞை:
அண்மையில் திரிபுராவில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரும் வன்முறை தாக்குதல்கள் மற்றும் தீவைப்பு சம்பங்கள், நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பையும் ஒருமைப்பாட்டையும் சீர்குலைப்பதற்கு இந்துத்துவ பாசிசக் குற்றவாளிகள் எந்த தீவிரமான மற்றும் பயங்கரமான நடவடிக்கைகளையும் செய்ய முடியும் என்பதற்கான ஆபத்தான சமிக்ஞையாகும். காவல்துறையின் முன்னிலையிலேயே திரிபுராவில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தவும், தீவைக்கவும் பாசிஸ்டுகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலை திட்டமிட்டு விஷமத்தனமான முழக்கங்களுடன் கூடிய பேரணிகள் சங்பரிவார் அமைப்பை சேர்ந்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது மட்டுமின்றி காவல்துறையால் அந்த பேரணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், அஸ்ஸாம் மாநிலம் தர்ராங் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லீம் குடும்பங்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் கவலையை ஏற்படுத்துகிறது. அஸ்ஸாம் பாஜக அரசு அங்கு வாழும் முஸ்லிம்களை மிரட்டி, ‘ஊடுருவல்காரர்கள்’ என்ற பொய்யான கோட்பாட்டின் மூலம் முஸ்லீம்களை வெளியேற்ற சதி செய்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மார்பில் துப்பாக்கிச் சூடு நடத்துவதும், ஒரு பத்திரிகையாளர் இறந்த உடல் மீது குதிப்பதும் மனங்களில் வெறுப்பு மற்றும் கொடூரம் நிறைந்திருப்பதைக் காட்டுகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் பாஜக அரசுகளின் பொறுப்பற்ற அணுகுமுறை மிகவும் கண்டிக்கத்தக்கது.
மதம் மற்றும் ஜாதி அடிப்படையில் குடிமக்களிடம் பாகுபாடு காட்ட வேண்டாம் என்றும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட வேண்டாம் என்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி அரசாங்கங்களை எச்சரிக்கிறது. சமூகத்தையும், நாட்டின் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க இதுபோன்ற ஆபத்தான தீமைகளை முறியடிக்க இந்திய சமூகத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி அழைப்பு விடுக்கிறது.
3) கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துங்கள்:
பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் கிறிஸ்தவர்கள், தேவாலயங்கள், பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் மீதான தாக்குதல்கள் பற்றிய தொடர்ச்சியான செய்திகள் கவலையளிக்கின்றன.
கடந்த 25 ஆண்டுகளாக தேவாலயங்களில் நடந்த மதமாற்ற அறிக்கையை சேகரிக்க கர்நாடக பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது கிறிஸ்தவர்களை அவமானப்படுத்துவதும், அவர்களின் சுதந்திரம் மற்றும் கண்ணியம் மீதான தாக்குதலும் தவிர வேறில்லை.
கர்நாடகா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்களும், நாட்டின் பல பகுதிகளில் பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் தாக்கப்பட்ட சம்பவங்களும் இந்த நாட்டில் உள்ள கிறிஸ்தவ சகோதரர்களின் மனதில் பாதுகாப்பின்மையை உருவாக்கியுள்ளது.
இந்துத்துவாவுக்காக கிறிஸ்தவர்களை தாக்குங்கள் என்று சங்பரிவார் தலைவர்கள் வெளிப்படையாக மக்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். ஆனால், அவர்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோன்ற வெறுப்பில் ஈடுபட வேண்டாம் என்றும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பாஜக அரசுகளை எஸ்.டி.பி.ஐ. கட்சி எச்சரிக்கிறது.
4) விவசாயிகள் போராட்டத்தின் ஓராண்டு:
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லி அருகே உள்ள திக்ரி எல்லையில் கடந்த ஓராண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
காவல்துறையின் அத்துமீறல்கள் மற்றும் மோசமான வானிலைகளை எதிர்கொண்டு வேளாண் சட்டங்களை எதிர்ப்பதில் அவர்கள் காட்டிய உறுதியானது, கொடூரமான வேளாண் சட்டங்களுக்கு எதிரான எதிர்ப்பில் அவர்கள் எவ்வாறு உறுதியாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
ஒன்றிய பாஜக அரசு, விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலிப்பதில் பிடிவாதமான கொள்கையை கடைபிடித்து, பெரும் முதலாளிகளுக்கு வசதிகளை செய்து கொடுத்து, விவசாயிகளின் வாழ்வில் அரசியல் செய்துவருகிறது. கடந்த ஓர் ஆண்டாக முழுவதும் நீதி மற்றும் கண்ணியத்திற்காக போராடும் விவசாயிகளின் உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்புக்காக எஸ்.டி.பி.ஐ. கட்சி தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதோடு, விவசாயிகளின் போராட்டத்திற்கு தனது முழுமையான ஆதரவை தெரிவிக்கிறது. மேலும், விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து, அந்த கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்துகிறது.

Tags: செய்திகள்

Share this