பெண்களுக்கான திருமண வயதை உயர்த்தும் ஒன்றிய அரசின் நடவடிக்கை நியாயமற்றது மற்றும் கேலிக்கூத்தானது! - எஸ்.டி.பி.ஐ.
நிர்வாகி
0
பெண்களின் சட்டப்பூர்வ திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் ஒன்றிய அரசின் முடிவு கேலிக்கூத்தானது என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் யாஸ்மின் ஃபரூக்கி தெரிவித்துள்ளார்.
எந்தவொரு சமூகத்திலும் திருமணம் என்பது வயது வந்த ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே நடைபெறும் ஒரு சட்ட செயல்முறையாகும். இன்றுவரை இந்தியாவில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட முதிர்வயது, ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் 18 ஆண்டுகள்; அதாவது 18 வயது ஆணோ பெண்ணோ அவர்கள் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும் தங்கள் சொந்த முடிவை எடுக்க சுதந்திரம் உள்ளது. 18 வயது நிரம்பிய எந்தவொரு குடிமகனும் தேர்தலில் போட்டியிடவும் வாக்களிக்கவும் தகுதியுடையவர். குடிமக்களுக்கு இந்த விருப்பத்தை மறுப்பது 21 வயதிற்குள் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் அவர்களின் தனிப்பட்ட உரிமையை மீறுவதாகும். புதிய சட்டம் 21 வயதுக்குட்பட்ட பெண்களின் சட்டப்பூர்வ திருமணங்களை குற்றமாக்க வழிவகுக்கும். 18 வயதில் திருமணம் செய்வது பொதுவான நடைமுறையாகும். இந்தியாவில் இதை குழந்தை திருமணம் என்று கூற முடியாது. இந்தியாவில் உள்ள பல்வேறு பிரிவுகள் மற்றும் சமூகங்கள் திருமணத்திற்கான தங்கள் சொந்த வயது வரம்பைக் கொண்டுள்ளன. எந்த சமூகத்திலோ அல்லது பிரிவிலோ உள்ள பெண்களுக்கும் 21 வயது என இல்லை.
இந்த முடிவு பொது அறிவு மற்றும் பகுத்தறிவை கேலி செய்யும் வகையில் உள்ளது. இந்த நடவடிக்கையின் அபத்தம் என்னவென்றால், 21 வயது வரம்பு சட்டப்பூர்வ திருமணங்களுக்கு மட்டுமே பொருந்தும், சட்டப்பூர்வ திருமணத்தில் சேராதவர்கள் எந்த வயதிலும் ஒன்றாக வாழலாம். இந்த இரட்டை நிலை, குடும்ப அமைப்பு மற்றும் ஒழுக்கத்தை அழிக்க வழிவகுக்கும் திருமணமற்ற பாலியல் வாழ்க்கையை ஊக்கப்படுத்துவதற்கு வழிவகுக்கும். வயது வித்தியாசம் இல்லாமல் சேர்ந்து வாழ்வது குற்றமோ பாவமோ அல்ல என்பதை நியாயப்படுத்தும் இந்நாட்டில், 21 வயதுக்கு முன் மேற்கொள்ளப்படும் சட்டப்பூர்வ திருமணம் குற்றமாக மாற்றப்படுவது நியாயமற்ற கேலிக்கூத்தான நடவடிக்கையாகும். இச்சட்டம் மக்களில் பெரும்பகுதியினரை ஒழுக்கக்கேடான பாலியல் வாழ்க்கைக்குத் தள்ளும் சூழலை உருவாக்கும்.
புதிய சட்டம் குழந்தை திருமணத்தை கட்டுப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இது மற்றொரு நகைச்சுவை. இந்தியாவில் திருமண வயது 18 ஆக இருக்கும் போது கூட குழந்தை திருமணங்கள் தொடர்கின்றன, மேலும் இதுபோன்ற திருமணங்கள் குறைந்திருப்பது தற்போதுள்ள சட்டத்தால் அல்ல, மாறாக பெண் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதன் காரணமாகும்.
அரசின் முடிவு குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமூகங்களான பட்டியலின மற்றும் பழங்குடியின சமூக மக்களை எதிர்மறையாக பாதிக்கும். அவர்களை சட்டத்தை மீறுபவர்களாக அரசாங்கத்தின் நடவடிக்கை மாற்றும். ஆகவே, வற்புறுத்தலாக முடிவடையக்கூடிய பகுத்தறிவற்ற இந்த முடிவை கைவிடுமாறு ஒன்றிய அரசை யாஸ்மின் ஃபரூக்கி வலியுறுத்தினார்.
Tags: செய்திகள்