தூங்கி வழிகிறதா தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு?_- பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
முதலமைச்சரின் தனிப்பிரிவு (http://cmcell.tn.gov.in/) குறித்து தமிழ்நாடு அரசு தரும் விளக்கம்
ஒரு பரிவுள்ள அரசு ஏழு தத்துவங்களில் நிலைகொண்டு பணியாற்றுகிறது. அவையாவன, எளிதில் அணுகுதல், சமத்துவமாக நடத்துதல், தொடர்பாடல், பதில் தருதல், துரிதமாக செயல்படுதல், திறமையுடன் கையாளுதல் மற்றும் பொறுப்பு ஏற்றல் ஆகியன. இவைகளை உறுதிப்படுத்த வெவ்வேறு பின்னணி கொண்ட பொதுமக்கள் அரசு சேவைகளைப் பெறுவதில் தடையின்மை உருவாக்குதல், தகுதியிருந்தும் தடுக்கப்படும்போது உதவுதல், கோரிக்கைகளை எடுத்துரைக்க வசதி செய்து தருதல், உண்மையான கோரிக்கைகளுக்கு அதற்கேற்ற தீர்வு தருதல் ஆகிய காரணங்களுக்காக முதலமைச்சரின் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது. அனைத்து பொதுமக்களுக்கும் அதிமுக்கிய காரணங்களுக்காக முதலமைச்சரின் தனிப்பிரிவானது, மாண்புமிகு முதலமைச்சரின் கோரிக்கை தீர்வு குழுவாக செயல்படுகிறது. விதிமுறைகள் உருவாக்கப்பட்டு பொதுமக்கள் அதிருப்திக்கு ஆளாகாமல் நியாயமாகவும் பரிவுடனும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றன. கோரிக்கைகள் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்ப ப்பட்டு பதில் நடவடிக்கைகள் இணைய வழி கண்காணிப்பு முறைமை மூலம் கண்காணிக்கப்படுகிறது. அனைத்து துறைகளிலிருந்தும் உணர்திறனுடன் தேவையான சரியான பயனுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. ஆய்வு கூட்டங்கள் ஒவ்வொறு துறைதோறும் மற்றும் மாவட்டங்கள் தோறும் தொடர்பு அலுவலர்களைக் கொண்டு நடத்தி தாமதங்கள் தவிர்க்கப்படுகிறது.
முதல்வரின் முகவரி’ (https://cmhelpline.tnega.org/portal/ta/home) என்ற புதிய துறை
'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' உள்ளிட்ட முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கிய குறை தீர்ப்புத் துறைகளை ஒருங்கிoணைத்து 'முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறையை உருவாக்கியிருக்கிறது தமிழக அரசு. 'முதலமைச்சரின் தனிப்பிரிவு’, 'முதலமைச்சரின் உதவி மையம்’, 'ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்ப்பு மேலாண்மை அமைப்பு’, 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ ஆகிய துறைகள், 'முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறையாகப் பரிணமித்திருக்கிறது. இதற்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்கள், 'முதலமைச்சரின் தனிப்பிரிவு (Cm Cell)' என்பதுதான் இப்போது 'முதல்வரின் முகவரி' என்று புதிய துறையாக மாற்றப்பட்டிருக்கிறது. முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு வரும் மனுக்கள், முதலமைச்சர் ஒவ்வொரு மாவட்டத்துக்குச் செல்கிறபோது பெறப்படுகிற மனுக்கள், ஆன்லைன் மற்றும் இ-மெயில் மூலமாக வருகிற மனுக்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு வரும் மனுக்களின் மீது நடவடிக்கை எடுப்பதுதான் இந்தத் துறையின் பிரதான பணியாக இருக்கும்" என கூறியுள்ளார்.
*முதலமைச்சரின் தனிப்பிரிவு நடைமுறை*
கடந்த சில ஆண்டுகளாக மாவட்டங்களில் மனு கொடுத்தால் ஒன்றும் நடக்காது என்று நினைக்கும் மக்கள், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு சிரமம் பார்க்காமல் நேரில் சென்று மனு கொடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவு எப்போதும் பரபரப்பாக இருக்கும். முதலமைச்சரின் தனிப்பிரிவில் பெறப்படும் மனுக்கள், மாவட்டம் வாரியாகப் பிரிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்படும். மாவட்ட நிர்வாகம் துறை ரீதியாக அவற்றை பிரித்து அனுப்பி அது தொடர்பாக நடவடிக்கையை எடுப்பார்கள். குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் இருந்து தகவல் அனுப்ப வேண்டும் என்பதுதான் நடைமுறை.
*சரி செய்திக்கு வருவோம்...*
மேலே கூறப்பட்டுள்ள அடிப்படையில், ' முதலமைச்சரின் தனிப்பிரிவு மூலம் பொதுமக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றதா?' என்றால் 'பெரும்பாலும் இல்லை' என்றுதான் பதில் சொல்ல வேண்டும். 'ஆட்சிகள் மாறினாலும், அதிகாரிகள் மாற மாட்டார்கள்' என்பதற்கு நிதர்சன சாட்சி இந்தப் பிரிவுதான்.
பொதுமக்களின் மனுக்கள் இங்கே பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கும். அவற்றில்...
- ஒரு சிலவற்றுக்கு மட்டும் உரிய பதில்கள் கிடைக்கும்.
- சில மனுக்களுக்கு 'தங்களது விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது என்ற தகவல் மட்டுமே பல மாதங்கள் ஏன்? பல வருடங்களாக பதிலாக இருக்கும்.
-சில மனுக்கள் குப்பைக் கூடைக்குள் சென்று மண்ணில் தஞ்சமடைந்து மரணமடைந்து இருக்கும்.
- பல மனுக்கள் காரணமின்றியே நிராகரிக்கப்பட்டிருக்கும்.
- சில மனுக்கள் ஒன்றுக்கும் உதவாக காரணங்கள் கூறப்பட்டு நிராகரிக்கப்பட்டிருக்கும்.
- சில மனுக்களின் கோரிக்கைகள் முழுவதுமாக நிறைவேற்றப்பட்டு, அதன் கோப்புகள் மூட்டை கட்டி பரணில் ஏற்றிய பிறகு திடீரென்று 'தங்களின் மனு வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளது என தகவல் வந்து அதிர்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும்.
- பெரும்பாலான மனுக்கள் உரிய துறைக்கு மாற்றப்படாமல் சம்பந்தமில்லாத பதில்களை பெற்றுத் தந்து தனது ஆயுளை முடித்துக் கொள்ளும்.
- மின்னஞ்சல் வழியே அனுப்பப்படும் 99 சதவீத மனுக்கள் கேட்பாரின்றி கவனிக்கப்படாமல் இருக்கும்.
- வாட்ஸ்அப் & தொலைநகல் (Fax) மனுக்கள் அறவே கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாது.
- மனுதாரர்களின் சில கோரிக்கைகளுக்கு அவர்களே அசந்து போகின்ற வகையில் பதில் தருவதில் இந்தப் பிரிவு அதிகாரிகளை மிஞ்ச யாருமில்லை.
இந்தப் பிரிவில் படித்தவர்கள்தான் பணியாற்றுகிறார்களா? என்ற சந்தேகம் எனக்குள் கேட்டுக் கொண்டே இருக்கின்றது. அந்தளவுக்கு கோரிக்கை மனுக்களை முழுவதுமாக படித்து மக்களின் பிரச்சினைகளை உள்வாங்கி அதற்கான தீர்வுகளை தரும் அதிகாரிகளை விரல்விட்டு எண்ணுமளவுக்குத்தான் இப்பிரிவு செயல்படுகின்றது.
இப்படி பல வகைகளில் முதலமைச்சரின் தனிப்பிரிவு மோசமாக செயல்படுவதாக புகார்கள் வருகின்றன. அப்படியே இந்தப் பிரிவு சரியாக சில கோரிக்கைகளை சரியாக செயல்படுத்தினாலும், அவற்றை நிறைவேற்றுகின்ற வேறு துறை சார்ந்த அதிகாரிகளின் செயற்பாடுகள் அப்பப்பா... அதற்கு தனி ஆய்வுக் கட்டுரை தேவைப்படும்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரியாக செயல்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் முதலமைச்சரின் தனிப்பிரிவு உடன் என்னுடைய அனுபவங்களை இங்கு தொடராக பதிவு செய்கின்றேன். இதை வாசிக்கும் உறவுகள் இந்தப் பிரிவுடன் தங்களுக்கு ஏற்பட்ட / கிடைத்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதுடன் இந்தத் தகவல்களை அரசு அதிகாரிகளிடம், ஊடகங்களிடம், பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
நன்றி.
-------------------
*கருத்தாளர் பல்துறை வல்லுனர், பல்வேறு விருதுகளை பெற்றவர், ஆசிரியர், மொழிப்பெயர்ப்பாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், மக்கள் நல பணியாளர், விமர்சகர், பத்திரிகையாளர், சமூக சேவகர், மேடைப் பேச்சாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், ஊடகவியலாளர் என பன்முகத்தன்மை கொண்டவர், குவைத்திலும், தமிழகத்திலும் சமூக, சமய, கல்வி, மொழி, கலை, இலக்கிய, ஊடக, அரசியல் அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டு வருபவர்.
தொடர்புக்கு...
பரங்கிப்பேட்டை அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ.,
பொதுச் செயலாளர், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத்
நிறுவனர், சமூகக் கல்வி விழிப்புணர்வு அறக்கட்டளை (SeaTop Trust), பரங்கிப்பேட்டை
+965 9787 2482 | abkaleel@gmail.com | www.fb.com/khaleelbaaqavi | www.twitter.com/@abkaleel
Tags: கட்டுரை