Breaking News

கேப்டன் என் ஏ அமீர் அலி மரணம்..

நிர்வாகி
0

 


சீரிய கல்வியாளர் கேப்டன் என் ஏ அமீர் அலி மரணம் …

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை


இளையான்குடி டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியின் நிறுவனரும் சிறந்த கல்வியாளருமான கேப்டன் என் ஏ அமீர் அலி அவர்கள் இன்று அதிகாலை மரணித்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன். சுமார் 40 ஆண்டுகளாக நெருங்கி பழகிய நண்பரை, ஆலோசகரை இழந்துள்ளேன்.

சென்னை புதுக்கல்லூரியின் தமிழ் துறை தலைவராக பணியாற்றிய கேப்டன் அமீர் அலி அவர்கள் புதுக்கல்லூரி விடுதியின் வார்டனாக பணியாற்றி பல நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.

சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியில் பிறந்த கேப்டன் அமீர் அலி அவர்கள் அங்கு அமீர் நெய்னார் கவுது என்ற வணிகருடன் சேர்ந்து பெரும் முயற்சிகள் எடுத்து டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியை நிறுவினார். பின்னர் அக்கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார். சுற்று வட்டார மாவட்டங்களில் உள்ள மக்கள் உயர்கல்வி பெறுவதற்கு டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி வழிவகுத்ததில் கேப்டன் அமீர் அலியின் பங்களிப்பு மகத்தானது.  

சென்னையில் கிரஸண்ட் பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்ட போது அதன் சிறப்பு அலுவலராக பணியாற்றி அது இன்று ஒரு நிகர் நிலை பல்கலைகழகமாக உருவாகுவதற்கு பெரிதும் அடித்தளம் போட்டவர் கேப்டன் அமீர் அலி அவர்கள்

தமிழகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைத்து ஒமியெட் – தமிழ்நாடு அனைத்து முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பை உருவாக்கியவர்கள் ஒருவர் கேப்டன் அமீர் அலி.

சமூகத்தின் கல்வி முன்னேற்றத்தில் பெரிதும் அக்கறை கொண்டவர் கேப்டன் அமீர் அலி அவர்கள். கல்வி வழிகாட்டுதல் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து அவ்வப்போது வெளியீடுகளை வெளியிட்டு வந்தார்.


கவிக்கோ அப்துல் ரஹ்மானின் நெருங்கிய நண்பரான கேப்டன் அமீர் அலி ஆவர்கள் இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் தலைவராகவும் பணியாற்றியவர். இளையாங்குடி வரலாறு, சீதக்காதி மரைக்காயர், அரபுலக அறிஞர்கள் உட்பட பல நூல்களையும் எழுதியவர்.


சமூக பணிகள் சமுதாய முன்னேற்றத்தில் பெரிதும் அக்கறை கொண்டிருந்தார். இளைய தலைமுறையினரை சமூக பணிகளில் பெரிதும் ஊக்குவித்தவர்.. எனது மாணவர் பருவத்திலிருந்தே எனக்கு பெரிதும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து என்றும் உறுதுணையாக விளங்கியவர். 

1995ல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சென்னையில் முதன் முறையாக தடாவிற்கு எதிராக கோட்டையை நோக்கி பேரணி நடத்திய போது முதல் ஆளாக போராட்ட களத்திற்கு வந்து நின்று ஆதரவு அளித்தவர் கேப்டன் அமீர் அலி.


கேப்டன் அமீர் அலி அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணிகள் நீண்டு கொண்டே செல்கின்றன. தூர பார்வையுடன் தூய்மையான எண்ணங்களுடன் சமூக கல்வி பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்ட கடமை வீரரை இழந்து விட்டோம். 

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். 


இப்படிக்கு

எம் எச் ஜவாஹிருல்லா

தலைவர்

Tags: செய்திகள்

Share this