Breaking News

"நான் ஏன் காந்தியை கொன்றேன்?" திரைப்படத்திற்கு ஒன்றிய, மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கை

நிர்வாகி
0


வரும் 2022 ஜனவரி 30-ந் தேதி வெளிவர உள்ள "நான் ஏன் காந்தியைக் கொன்றேன்?" திரைப்படத்திற்கு ஒன்றிய, மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-


‘‘நான் ஏன் காந்தியைக் கொன்றேன்?’’ ‘Why I killed Gandhi’ இப்படியொரு திரைப்படம் தயாராகி, வரும் 2022 ஜனவரி 30 ஆம் தேதி வெளியிட இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன.


இந்தியா சுதந்திரம் பெற்ற 75 ஆம் ஆண்டில் நாடும் நானிலமும் விழா நடத்திக் கொண்டிருக்கிறது. குதூகலம் நடக்கும்போது காந்தி கொலைப் படமும் வெளியிட்டு, தனது குரூரத்தை உலகிற்குக் காட்டும் சாத்தானிய சக்திகள் சுதந்திர இந்தியாவில் சுதந்திரமாக நடந்து பழகிக் கொண்டிருக்கின்றன.


சென்ற ஆண்டு இதே ஜனவரி 30இல் உத்தர பிரதேசத்தில் காந்தி பொம்மை செய்து, அதற்குள் இரத்தச் சிவப்பு சாயங்களைப் பூசி, அதை நடுத்தெருவில் வைத்து, போவோர் வருவோர் பார்க்கும்படியாக, பொம்மையைத் துப்பாக்கியால் சுட்டு, அதிலிருந்து இரத்தம் போன்ற சிவப்பு சாயம் ஓடச் செய்து, அந்த சிவப்பு சாயத்தை குருதி கொட்டுவதாக கைகொட்டிச் சிரித்து, சுடப்பட்ட காந்தி பொம்மையை காலில் போட்டு மிதித்து, ஒரு காளியாட்டம் நடத்தியதை ஒரு பெண் உருவில் நின்றதொரு ‘பேய்’ செய்தது என்று உலகமெங்கும் விளம்பரம் வந்தது.


இந்த ஆண்டு 2022 ஜனவரி 30இல் ‘‘நான் ஏன் காந்தியைக் கொன்றேன்’’ என்று நாத்ராம் கோட்ஸே நீதிமன்றத்தில் கூறி, தான் செய்த படுபாதக பாவத்திற்கு நியாயம் கற்பித்ததைத் தலைப்பாகக் கொண்டு திரைப்படம் தயாரிக்கப்பட்டு அது வெளிவர இருக்கிறது! இதுவும் மோடி சர்க்காரின் சாதனையாகக்கூட விளம்பரம் செய்யக்கூடும்!


இதிலே மிகப் பெரும் வேதனை என்னவெனில் ‘நான் ஏன் காந்தியைக் கொன்றேன்!’ என்ற திரைப்படத்தில் கோட்ஸே பாத்திரத்தில் நடித்திருப்பது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். அவர் பெயர் ‘அமோல் கோல்ஹே’ இவர் எந்தக் கட்சி எம்.பி. தெரியுமா? இந்திய தேசிய காங்கிரசில் மூத்த தலைவராக இருந்து, திருமதி சோனியா காந்தி இந்தியாவுக்குப் பிரதமர் ஆகக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து, காங்கிரசை விட்டு வெளியேறி, தேசீயவாதக் காங்கிரஸ் கட்சியை உருவாக்கியிருக்கும் சரத்பவார் அவர்களின் சீடர்தான் இந்த எம்.பி.! இன்றைக்கு மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் சிவசேனாவுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சி சரத்பவாரின் கட்சி!


1948 ஜனவரி 30ல் டில்லி பிர்லா மாளிகையில் மாலை 5.10 மணிக்கு பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த மகாத்மா காந்தியார் அவர்களை நாத்ராம் கோட்ஸே மூன்று முறைச் சுட்டுக் கொன்றான். சுடுவதற்கு முன்னர் காந்தியாருக்குப் பணிந்து வணங்கிப் பின்னர் தனது துப்பாக்கியால் கோட்ஸே சுட்டான் என்று அங்கே கூடியிருந்த 500க்கும் மேற்பட்ட மக்கள் தெரிவித்தனர். வள்ளுவர் கூறியது, ‘தொழுத கையுள்ளும் படையொடுங்கும்என்பது அங்கே நடந்தது.


கோட்ஸே மீது போடப்பட்ட காந்தி கொலை வழக்கு 1949 பிப்ரவரி 10இல் தீர்ப்புக்கு வந்தது. மரண தண்டனை விதிக்கப்பட்ட கோட்ஸே 1949 நவம்பர் 10இல் தூக்கிலிடப்பட்டான்.

டெல்லி உச்சநீதிமன்றத்தில் கோட்ஸே, தான் காந்தியைக் கொன்றதை நியாயப்படுத்திப் பேசியது வரலாறு ஆகியிருக்கிறது.

கோட்ஸே, காந்தியைக் கொல்வது தனது மதக் கடமை என்றும், அவர் அநீதியை ஏற்படுத்திவரும் தீய சக்தி என்றும், முஸ்லிம்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார் என்றும் தனது வாக்கு மூலத்தில் கூறினான். அவன் மேலும் தெரிவித்ததாவது:

 

‘‘காந்தியார் மீது எனக்கு ஆழமான மரியாதை இருந்தது. அவரைக் கொல்லும்போது எனக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை. அவர் முஸ்லிம்களுக்கும் அவர்களின் நலன்களுக்கும் எப்போதும் ஆதரவாகவே இருக்கிறார் என்பதே எனக்குள்ள தீர்மானமாகும். வேறு எந்த வெறுப்பும் அவர்மீது எனக்கில்லை; வேறு தனிப்பட்ட காரணமும் இல்லை; வேறு எந்த நோக்கமும் எனக்கு இல்லை. ஆகவே, இங்கே, இறைவனின் சந்நிதானத்தில், மக்கள் மன்றத்தில், இந்தியாவைப் பீடித்திருந்த ஒரு தீய சக்தியை, இந்தியாவின் பேராபத்தை நீக்குவதற்காகவே காந்தியைக் கொன்றேன்’’ என்று பகிரங்க அறிவிப்புச் செய்கிறேன். இதுதான் நான்; நான் இறப்பதற்குத் தயாராகவே இருக்கிறேன்; எனக்கு எந்த வருத்தமும் இல்லை; என்னைப் படைத்தவனுடன் பூரண திருப்தியோடு இருக்கிறேன்’’ இப்படித்தான் கோட்ஸே நீதிமன்றத்தில் கூறினான் என்று ஆவணங்கள் கூறுகின்றன.


கோட்ஸே செலுத்திய குண்டுகளுக்கு தேசத்தின் பிதாமகன், அண்ணல் காந்தி, அகிம்ஷா மூர்த்தி இரையானபோது உலகமே அழுதது! மகாத்மாவின் இறுதி ஊர்வலத்தில் அன்றைய பிரதமர் பண்டிதர் ஜவஹர்லால் நேருஜி கண்ணீரும் கம்பலையுமாக நின்று கூறினார். ஒளி நம்மைவிட்டு ஓய்ந்துவிட்டது. ஆனால், இது சாதாரண ஒளி அல்ல. இந்த ஒளி தேசத்தில் பல ஆண்டு காலத்திற்கு ஒளியேற்றிடும். மனிதர்களின் உள்ளங்களில் வாழும் இந்த ஒளி, இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு தேசத்திற்கும் உலகிற்கும் ஒளி காட்டிக் கொண்டிருக்கும். இவ்வாறு நேருஜி கூறினார்.


மகாத்மா காந்தியாரின் ஒளி பற்றியே இங்கே நேருஜி குறிப்பிட்டுள்ளார். அந்த ஒளியை உயர்த்திக் காட்ட வேண்டிய தேசத்தில் அவரைக் கொன்ற வரலாற்றை விளம்பரப்படுத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது?

நான் ஏன் காந்தியைக் கொன்றேன்? என்னும் திரைப்படம் ஜனவரி 30, 2022இல் நாட்டிலும் உலகில் எங்கும் வெளிவரக்கூடாது. காந்தியாரைக் கொன்றிருக்கலாம். ஆனால், காந்தீயத்தை யாரும் கொல்ல முடியாது! காந்தியம் &

அவர் போதித்த சாத்வீகம், சத்தியம், சத்தியாகிரகம், சமய நல்லிணக்கம் நாட்டில் என்றும் இருக்கிறது என்பது உண்மையானால் தேசப் பிதா பற்றிய திரைப்படம் வெளிவரக் கூடாது. ஒன்றிய அரசும், ஒவ்வொரு அரசும் இந்தத் திரைப்படத்திற்குத் தடைவிதிக்க வேண்டும்!

Tags: செய்திகள்

Share this