Breaking News

திருச்சியில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்

நிர்வாகி
0

 


எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று (மார்ச்.01) கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்த மீளாய்வு, கட்சி மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டன.இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் எஸ்.எம்.ரஃபீக் அகமது, பி.அப்துல் ஹமீது,  பொதுச்செயலாளர்கள் அச.உமர் பாரூக், எஸ்.அகமது நவவி, எம்.நிஜாம் முகைதீன், பொருளாளர் எஸ்.அமீர் ஹம்சா, செயலாளர்கள் டி.ரத்தினம், அபுபக்கர் சித்திக், ஏ.கே.கரீம், நஜ்மா பேகம், மாநில அமைப்புச் செயலாளர் நஸூருத்தீன்,  மாநில செயற்குழு உறுப்பினர்கள் அம்ஜத் பாஷா, வி.எம்.அபுதாஹிர், பஷீர் சுல்தான், வழ.ராஜா முகமது, ஷஃபிக் அகமது, சுல்ஃபிகர் அலி, வழ.சஃபியா, ஃபயாஸ் அகமது, ஹஸ்ஸான் இமாம், டாக்டர். ஜமிலுன் நிஷா, முஜிபுர் ரஹ்மான், ராஜா ஹூசைன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பேசியதாவது;


1. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தனித்துக் களம் கண்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி அதிகார பலம்,  பண விநியோகம், கூட்டணிகள் என அனைத்தையும் தாண்டி 26 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். கோவை மாநகராட்சியில் ஒரு வார்டு உட்பட நகராட்சிகளில் 8 வார்டுகளிலும், பேரூராட்சிகளில் 17 வார்டுகளிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.   சுமார் 266 இடங்களில் இரண்டாவது மற்றும் 3வது இடத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்கள் பெற்றுள்ளனர். 


இந்த தேர்தலில் பண விநியோகம், பரிசுப் பொருட்கள் விநியோகம் போன்றவை வெளிப்படையாகவே நடந்தேறின. இதனை தடுத்து நிறுத்த மாநில தேர்தல் ஆணையம் எவ்வித அக்கறையும் காட்டவில்லை. தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியின் ஒரு அணியாகவே செயல்பட்டது. மட்டுமின்றி, கள்ள ஓட்டு, வாக்கு எண்ணிக்கையின் போது பூத் மாறிய வாக்குப்பெட்டி போன்ற குளறுபடிகள், எதிர்கட்சி வேட்பாளர்கள் முகவர்கள் இல்லாமலேயே வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளுடனேயே இந்த தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. 


தமிழகத்தில் எந்த ஆளுங்கட்சி உள்ளாட்சித் தேர்தலை நடத்தினாலும், அந்த தேர்தலில் ஆளுங்கட்சி தலையீடு, பணபலம், பலப்பிரயோகம் போன்ற தேர்தல் ஜனநாயக முறைகேடுகள் நடைபெறுவது வாடிக்கையான நிலையில், திமுக ஆட்சியிலும் அத்தகைய முறைகேடுகளுக்கு விதிவிலக்கு இல்லை என்பதையே இந்த தேர்தல் காட்டியுள்ளது. முந்தைய அரசுகளிடமிருந்த குறைந்தபட்ச தேர்தல் ஜனநாயக நடவடிக்கைகள் கூட, தற்போதைய திமுக ஆட்சியில் இல்லாமல் போயுள்ளது வேதனை அளிக்கின்றது.


முற்றிலும் ஜனநாயகமற்ற முறையில் இந்த தேர்தல் நடந்துமுடிந்துள்ள நிலையில், மேயர், சேர்மன் உள்ளிட்ட பதவிகளுக்காக நடைபெறக்கூடிய மறைமுகத் தேர்தலும் ஜனநாயக முறைப்படி நடைபெறுமா என்ற கேள்வி எழுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு குதிரை பேரங்கள் ஆரம்பித்து விட்டன. லட்சங்கள், கோடிகளில் பேரம் பேசப்பட்டு அமைக்கப்படும் உள்ளாட்சி நிர்வாகம் எப்படி நேர்மையாக இருக்கும் என்ற கேள்வியும் எழுகிறது. இதுபோன்ற பேரங்களால் உள்ளாட்சி நிர்வாகம் சீரழியும் என்பதாலேயே, உள்ளாட்சித் தலைமை பொறுப்புகளுக்கு நேரடி தேர்தலை நடத்த வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் குரல் கொடுத்தன. ஆகவே தேர்தல் ஆணையம் மறைமுகத் தேர்தலையாவது ஜனநாயகத்தை உறுதி செய்யும் வகையில் நடத்த வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.


2. உக்ரைனில் ரஷ்யா நிகழ்த்திவரும் போர் மற்றும் அதனால் அங்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலை மிகவும் கவலைக்குரியது. உக்ரைன் நாட்டில் ஏராளமான இந்திய மாணவர்கள் மருத்துவம் உள்ளிட்ட கல்வி பயின்று வருகின்றார்கள். மேலும், பல இந்தியர்கள் பல்வேறு துறைகளில் அங்கு வேலை செய்கிறார்கள். உக்ரைனில் நடக்கும் போரால் இந்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழல் நமக்கு கவலையை ஏற்படுத்துகிறது. அங்கு சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீட்டெடுப்பது குறித்த இந்திய நிர்வாகத்தின் அறிவிப்புகள் நம்பிக்கை அளிக்கிறது. அதேநேரத்தில் விமான நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பாக இச்சூழ்நிலையை கருதுவது மிகுந்த கவலையை அளிக்கின்றது. தற்போது இந்திய அரசிற்கென சொந்த தேசிய விமான நிறுவனங்கள் எதுவும் இல்லை. இதன்மூலம் பொதுத்துறை நிறுவனங்களை விற்றுவரும் மத்தியில் ஆளும் மோடி அரசால்  நமது நாட்டிற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பரிதாபகரமான நிலையை உக்ரைன் போர் வெளிக்கொணர்ந்துள்ளது.


இந்திய மதிப்பில் ரூபாய் 20,000 முதல் 30,000 வரை இருந்த விமானக் கட்டணம், தற்போது ஒன்றரை லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.  ஆகவே, மிக ஆபத்தான சூழ்நிலையில் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியக் குடிமக்கள் மீது விமான பயணத்திற்கான கட்டணச் சுமையை சுமத்தாமல், அரசாங்கம் தனது சொந்த செலவில் அவர்களை மீட்டு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.


எங்களுக்கு கிடைக்கப்பெற்ற, உக்ரைனில் மருத்துவம் உள்ளிட்ட கல்வி பயிலச் சென்ற தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் சிலரின் தகவல்களை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம்.  அவர்களை பாதுகாப்புடன் விரைவாக மீட்டுவர இந்திய அரசு மேற்கொண்டுவரும் முயற்சியில், அவர்களையும் உள்ளடக்கி  மீட்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வலியுறுத்தியுள்ளோம்.


3. சென்னை நந்தனம் புத்தகக் கண்காட்சி வளாகத்தில், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில், ‘சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா புகைப்படக் கண்காட்சி’ என்ற ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த கண்காட்சியில், சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றிய பல்வேறு அறியப்படாத வீரர்கள் என்கிற பெயரில்,  வேலு நாச்சியார், மருதுவீரர்கள் உள்ளிட்ட உண்மையான விடுதலைப் போராட்ட வீரர்களுடன், பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுக்கு அடிமை சேவகம் செய்து வந்த ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்களின் புகைப்படங்களையும் உட்படுத்தி, அவர்களையும் அறியப்படாத விடுதலைப் போராட்ட வீரர்கள் என்ற போலியான பிம்பத்தை கட்டமைக்க ஒன்றிய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.


பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் பலமுறை மன்னிப்பு கோரிய சாவர்க்கர் துணிவுமிக்க சுதந்திர போராட்ட வீரராக சித்தரிக்கப்பட்டுள்ளார். சாவர்க்கர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எழுதிய 6 மன்னிப்புக் கடிதங்கள் இன்றளவும் உள்ளன. இதை மறைத்து, வரலாற்றைப் பொய்யாக்கும் விதமாக அவரை வீரமிக்க தலைவர் போல் சித்திரிப்பது மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும். 


சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கோ மற்றும் அதன் இந்துத்துவா சித்தாந்தத்தின் முன்னோடிகளான சாவர்க்கர், ஹெட்கேவர் போன்றவர்களுக்கோ எவ்விதப் பங்கும் கிடையாது என்பதே உண்மையான வரலாறு. மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இத்தகைய போலியான பரப்புரை கண்டிக்கத்தக்கது. இத்தகைய பொய்யான தகவல்களை தமிழக மக்கள் கண்டு ஒருபோதும் ஏமாறமாட்டார்கள். இத்தகைய ஆபத்தான நிகழ்ச்சிநிரல் முறியடிக்கப்பட வேண்டும். அனைத்து ஜனநாயக சக்திகளும் இதற்கெதிராக குரல் எழுப்ப வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.


4. தமிழக மீனவர்களின் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. தமிழக மீனவர்களை பாதுகாப்பதில் ஒன்றிய அரசு முழுமையாக தோல்வியடைந்து விட்டது. நேற்று முன்தினம் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 80 தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை கைது செய்திருக்கிறது. மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசின் உருப்படியில்லாத வீண் பெருமைகளும், சவடால்களும் வெறும் உதட்டளவில் மட்டுமே, செயலளவில் இல்லை என்பதை இலங்கையின் தொடர் அத்துமீறல் நடவடிக்கைகள் மூலம் தெளிவாகிறது. ஆகவே, வீண் தற்பெருமைகளை பேசிக்கொண்டிருக்காமல், கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், விசைப்படகுகளையும் மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, எதிர்காலத்தில் இலங்கை கடற்படையின் அத்துமீறலில் இருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளை எஸ்.டி.பி.ஐ. கட்சி கேட்டுக்கொள்கிறது.


5. கூடங்குளம் அணுக்கழிவுகளை, அணு உலை வளாகத்திலேயே பள்ளம் அமைத்து பாதுகாப்பாக வைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதால், அங்கு வசிக்கும் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மற்றும் விவசாய நீரில் அணுக்கதிர் வீச்சு கலக்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சோதனை எலிகளாகத் தமிழக மக்களை மாற்றும் ஒன்றிய அரசின் இந்த விபரீதமான நடவடிக்கைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனினும் இந்த எதிர்ப்புகளை புறந்தள்ளி அணுக்கழிவு மையம் அமைக்கும் பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பையும் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. அழிவுத் திட்டங்களின் கூடாரமாக தமிழகத்தை மாற்ற முனையும் ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. ஆபத்து நிறைந்த அணுக்கழிவுகளை அணுமின் நிலைய வளாகத்திலேயே சேமிக்கும் திட்ட நடவடிக்கைகளை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. ஒன்றிய அரசு இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு தடுத்து நிறுத்த முன்வர வேண்டும். இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுகொள்கின்றோம்.


இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Tags: செய்திகள்

Share this