தீர்ப்பு கிடைத்திருக்கிறதே தவிர, நீதி கிடைக்கவில்லை! நெல்லை முபாரக்
கர்நாடக மாநில கல்வி நிலையங்களில் இஸ்லாமிய மாணவிகள் தலைக்கு அணியும் ஹிஜாப் தடை தொடர்பான வழக்கில், கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் பாஜக அரசின் தடையை அனுமதித்து உத்தரவிட்டிருக்கிறது. இந்த உத்தரவு மூலம் தீர்ப்பு கிடைத்திருக்கிறதே தவிர, நீதி நிடைக்கவில்லை. காரணம், 1400 வருடங்களாக முஸ்லிம்கள் பின்பற்றி வருகிற இஸ்லாமிய மார்க்க கடமையை, இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை, அரசமைப்புச் சட்டம் தந்துள்ள மத உரிமையை மறுத்து, பாபரி தீர்ப்பு எவ்வாறு அநீதியாக வழங்கப்பட்டதோ, அதுபோலவே கர்நாடக பாஜக அரசை திருப்திப்படுத்தும் வகையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இது இறுதி தீர்ப்பு அல்ல. நீதிக்காக உச்சநீதிமன்றம் செல்லுவதற்கான வாய்ப்புகளும் மிச்சம் இருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த தீர்ப்பு பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
இந்த தீர்ப்பு தனிமனித உரிமையை, சிறுபான்மை மக்களினுடைய மத உரிமையை, குறிப்பாக அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற அடிப்படை உரிமைகளை மறுத்திருக்கிறது. அதோடு உச்சநீதிமன்றமே நிலுவையில் வைத்திருக்கிற, மதவழிபாட்டு உரிமையில் எந்த அளவிற்கு சட்டமும் நீதிமன்றமும் தலையிட முடியும் என்கிற வழக்குகளில் கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கின்ற தீர்ப்பு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.
இந்த வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு விநோதமானது என்றே கருதுகிறேன். ஏனெனில், மத வழிபாட்டு உரிமையில், இதை அனுமதிக்க முடியும், இதை அனுமதிக்க முடியாது என்கிற முடிவை, அந்த சமூகமோ அல்லது அந்த சமூகத்தின் மத அறிஞர்களோ மட்டுமே முடிவு செய்ய முடியுமே தவிர, நீதிமன்றம் உத்தரவிட்டு முடிவு செய்ய முடியாது. இந்த வழக்கில் நீதிமன்றம் அப்படியான உத்தரவினை வழங்கியது தவறானது.
உச்சநீதிமன்றம் சபரிமலை வழக்கிலும், பார்சீக்கள் வேறு மதத்தினரை திருமணம் செய்தால் அவர்களின் நிலை என்ன என்பது போன்ற பல வழக்குகளிலும், தனி நபர் உரிமைகளில் உச்சநீதிமன்றத்தின் பார்வை என்னவோ அதற்கு நேர் எதிரான தீர்ப்பாக இந்த தீர்ப்பு அமைந்திருக்கிறது. அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளை கருத்தில் கொள்ளாத சட்டங்கள் செல்லாது என்று அரசமைப்புச் சட்டப் பிரிவு 13 கூறுகிறது. எனவே, எப்படிப் பார்த்தாலும் அரசியலமைப்பு தந்த உரிமைக்கு மாற்றமாக, ஜனநாயகத்திற்கு மாற்றாக வழங்கப்பட்டிருக்கிற இந்த தீர்ப்பை எதிர்த்து ஜனநாயக சக்திகள் திரள வேண்டிய நேரமிது
- SDPI மாநில தலைவர் நெல்லை முபாரக்
Tags: செய்திகள்