Breaking News

மறைவழியில் பயணித்து பிறை நிழலில் வாழ்ந்தவர் தளபதி மெளலானா ஷபீகுர் ரஹ்மான்.

நிர்வாகி
0

 


முஸ்லிம் லீக் எனும் 

முதுபெரும் கோட்டையின் 

தோரண வாயிலாய் துலங்கியவர். 


கண்ணியத்தின் இமயம் 

காயிதே மில்லத்தின் 

கல்புக்குள் இடம் பிடித்த அதிஷ்டக்காரர் 


சமுதாயப் பொய்கையில் 

சந்தன மலர் கூட்டத்தில் 

வாடா மலராய் வாழ்ந்து 

வாசம் தந்தவர் 


பூமான் நபிகளாரின் 

ஈமான் தேசத்தில் 

சீமானாய் திகழ்ந்த 

சிறப்பினைக் கொண்டவர்


மறைவழியில் பயணித்து

பிறை நிழலில் வாழ்ந்தவர் 

குறை - நிறையில் என்றும் 

குற்றம் காணா குணத்தவர் 


ஊதியங்களுக்காகவே 

உழலும் இவ்வுலகில் - முதாய 

ஊழியத்திற்காகவே 

உழன்று திரிந்தவர் 


செந்நிற ருமாலும் 

வெண்ணிற உடையும் 

புன்னகை முகமும் - இவரின் 

புறத்தோற்றம். 


களங்கமற்ற இதயமும் 

கலக்கமற்ற வாழ்வும் 

கலப்பில்லா கொள்கையும் - இவரின் 

அகத்தோற்றம்



இவர் வயது இளைஞரெல்லாம் 

அக்காலத்தில் - லால்பேட்டையில் 

கொடிக்கால் பயிர்வெட்டி - அதில் 

வெற்றிலைக் கொடி ஏற்றி 

விவசாயம் செய்த போது 

இவரோ

கொடிக்கம்பம் பல நட்டு - அதில் 

இளம்பிறைக் கொடி ஏற்றி 

இயக்கம் வளர்த்தார்


இவரின் 

மூச்சும் - பேச்சும் 

முஸ்லிம் லீக்காகவே ஆகிப்போனதால் 

இவரை இடித்துரைப்பாரின் 

ஏச்சும் - பேச்சும் - இவரின் 

செவிகளில் செல்லுபடியாவதில்லை


இவரின் அன்பு முகம் 

ஆயிரமாயிரம் ஹாஜிகளுக்கு அறிமுகம் 


பல்லாண்டு காலம் 

மதினாவில் - மாநபியின்

சொர்க்கப் பூந்தோட்டத்து 

தமிழகத்து ஹாஜிகளோடு

சுவாசித்து மகிழும் 

சுந்தரப் பேறு பெற்றவர்.


காலமெல்லாம் 

கண்விழித்து - மெய்வருத்தி

கவ்மின் கடமையாற்றிய - சமுதாய

காவற்படையின் தளபதிக்கு 

கருணைமிகு ரஹ்மான் 

கனிவுடனே வழங்குவானாக

பிர்தவ்ஸ் எனும் உயரிய  சொர்க்கத்தை  ஆமீன் 


கவிஞர்

ஏ.எம்.முஹிப்புல்லாஹ்.

லால்பேட்டை .

Tags: லால்பேட்டை

Share this