Breaking News

தென்னம்பிள்ள வச்சி, தண்ணி ஊத்துனது ஒரு குத்தமா...?

நிர்வாகி
0வருமானமற்று இருக்கும் போலி மருத்துவன் ஒருவன் - மூத்தாட்டி ஒருவரிடம் வளரும் நாயை, அவர்மூலமே வழிப்போக்கர்களை 'ச்ச்சூ..' என்று சொல்ல வைப்பார். அப்படிச்சொன்னால் அந்நாய் கடித்துவிடும். பிறகு, நாய்க்கடிபட்டவர்,  அங்கே தெரு முனையில் மருத்துவமனை வைத்திருக்கும் போலி மருத்துவரிடம் மருத்துவம் பார்க்க வேண்டும். இப்படியான பொய்யான செட்டப்பால் அப்போலி மருத்துவர் போதுமான கல்லா கட்டுவார் : இது ஒரு திரைபடத்தில் வடிவேல் காமெடியில் வரும் சீகுவென்ஸ்.


'கினற்றை காணோம்' ரக அவரின் காமெடியெல்லாம், நிஜ உலகில் ஊழல் ராஜாக்களை குறிவைத்து - காவல்நிலையங்களில் வழக்காக பதிவான செய்திகளை எல்லாம் செய்தித் தாள்களில் வந்துள்ளதை படித்து சிரித்திருக்கிறேன்.


ஆனால் - மேற்படி போலி மருத்துவர் கள்ள கல்லா கட்டும் காமெடி எங்கள் ஊர் ஆயங்குடியிலேயே நடந்ததும், அதனால், வசூல் ராஜா ஒருவரிடம் 25 ஆயிரம் ரூபாய் தண்டம் கட்டி என் குடும்பமே நேரடியாக பாதிக்கப்பட்டிருப்பதும் எனக்கு சிரிப்பு கலந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 


எனதூர் ஆயங்குடி - கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் தொகுதியிலிருக்கும் ஊரில் முஸ்லீம் சமூகத்தினர் அதிகளவில் வாழ்கின்றனர். அதன் அருகில் உள்ள ஊர்களில் ஒன்று ரெட்டியூர் - அங்கு பட்டியலின சமூகத்தினர், முஸ்லீம்கள் என பலதரப்பினர் வாழ்ந்துவருகின்றனர். விளிம்புநிலையில் அங்கு வாழ்ந்து வரும் பலர் அன்றாடங்காய்ச்சிகள் தான். அவ்வூரை சேர்ந்த 'ராதா' என்பவருக்கு மரமேறுவது தொழில். இப்பகுதிகளில் அடர்ந்துக் கணப்படும் தென்னை மரங்கள் அவரின் தொழில் மூலம். 


ஆயங்குடியில் கணவனை இழந்து - ஆண் துணையோ, நிரந்தர வருமானமோ இன்றி வாழும் மூதாட்டி ஒருவரின் வீட்டில், மேற்படி ராதா "தேங்காய் பிய்க்கிறேன்" என அனுகிவுள்ளார். "மரஙகளில் போதுமான தேங்காய் இல்லை, இப்போது வேண்டாம்" என மறுத்திருக்கிறார் அந்த மூதாட்டி - அதன்பின் நான்கைந்து நாட்களாக தொடர்ந்து ராதா கேட்கவே - ஒரு பிற்பகலில் 'கணிசமான காய்களிருக்கும் மரங்களில் மட்டும் ஏறு' என்றிருக்கிறார்.


நான்கு மரங்களில் மட்டும் ஏறி, பறிக்கத்தக்க தெங்காய்களை பறித்துவிட்டு, கொள்ளை படிகட்டுகளில் அடுக்கிவிட்டு - அதற்கான கூலியை வாங்கிச் சென்றுவிட்டார் ராதா. 


வாங்கிய கூலியில் சாராயம் வாங்கி ஃபுல்லாக கட்டிவிட்டு, மறுபடியும் இரண்டு தென்னை மரங்களில் ஏற வந்திருக்கிறார். ஏறுவதற்கு முன் வெற்றிலை/பாக்கு போட்டிருக்கிறான் அக்குடிகாரன். குடித்தவன் வெற்றிலை/பாக்கு போட்டால் - மரமல்ல, சைக்கிளில் கூட ஏற முடியாதளவுக்கு போதை தலைக்கேறிவிடுமாம்.


பித்து தலைக்கேறிய அந்த போதை ஆசாமி, ஏற நினைத்த மரத்தருகில் ஏறமுடியாமல் அருகிலுள்ள சுற்றுசுவரில் சாய்ந்துபடுத்துவிட்டான். இதனை பிந்தைய நேரத்தில் கண்ட மூதாட்டி, தன் மருமகன்களுக்கு போனில் அழைத்து தெரியப்படுத்தியதால் - மருமகன்கள் வந்து குடிகார பேர்வழியை அவனூரை சேர்ந்த ஆட்களைக் கொண்டே அலேக்காக தூக்கி, அருகிலுள்ள நீர்தேக்க தொட்டிக்கு அடியில் அமர்த்திவிட்டனர். 


அடுத்த நாள் காலை,  ரெட்டியூரிலிருந்து, தன்னை பட்டியலின சமுதாய தலைவனாக அறிமுகப்படுத்திக் கொள்ளும், முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் ராமானுஜம் (படத்தில் உள்ளவர்) தலைமையில் ஒரு கூட்டம் மூதாட்டி வீட்டு வாசலில் குவிந்தது. செய்வதறியாது தவித்த மூதாட்டி மறுபடியும் தன் மருமகன்களுக்கு போன் செய்து சொல்லவே, அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்திருக்கிறார்கள்.


ராதா தேங்காய் பறிக்க மரத்தில் ஏறியபோது சறுக்கி விழுந்து, பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டதாகவும் - அவனுக்கு தேவையான சிகிச்சைகளுக்கு 1 லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனவும், அதனை தென்னை தோட்ட முதலாளியான மூதாட்டியே கொடுக்க வேண்டும் எனவும் ஒரே கூச்சல். 


"குடித்துவிட்டு மரமேறியது ராதா தவறு, நாங்கள் எப்படி அதற்கு பொறுப்பேற்க முடியும்..?" என முதாட்டி தரப்பில் ஒருவர் கேட்க, "அதான் குடிச்சிட்டு வந்திருக்கான்னு தெரியுதுல்ல, ஏன் வேலை கொடுத்தீங்க..." என்று கேட்டிருக்கிறார் கட்டப் பஞ்சாயத்தாலேயே பாக்கெட்டை நிறப்பும் முன்னாள் பிரசிடெண்ட் ராமானுஜம். 


இனி, எவ்வேலைக்கும் ஆணாள் வைக்கும் முன் - ட்ரக் டெஸ்ட் உள்ளிட்ட, பிஸிகல் பிட்னெஸ் டெஸ்டும்,

பாத்திரம் கழுவி, வீடு கூட்டிப் பெருக்க பெண்ணாள் வைக்கும் முன் - பிரக்னென்ஸி உள்ளிட்ட மற்ற பிஸிகல் பிட்னெஸ் டெஸ்டும் எடுத்துவிட்டு தான் சேர்க்க வேண்டும் போலும். 


பஞ்சாயத்து மணிக்கணக்காக நடக்கவே, இங்கு, ஆயங்குடியில், தங்களை சமுதாய காவலர்கள் என பாவித்துக் கொள்ளும் சிலரிடம் இதனை தெரியப்படுத்தியிருக்கிறார்கள் மூதாட்டி தரப்பினர். 'பாஞ்சாயத்து பாதியில் எல்லாம் திடீரென மூக்கை நுழைக்க முடியாது. தொடக்கத்திலேயே எங்களுக்கு முறையான அழைப்பு தந்திருக்க வேண்டும்' என வர மறுத்துவிட்டனர் (இந்த சைட்) சமுதாய தலைவர்கள்(?). 


பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க, அதுவும் ஆண்துனையற்ற மூதாட்டியின் உண்மையில்பால் நிற்க, முறையான அழைப்பு கேட்கும் இவர்கள் - தாம்பூல தட்டில் பழங்கள் சகிதம் பத்திரிக்கையோடு வந்தால் தான் வருவார்கள் போல. இவர்களுக்கு பேர் சமுதாய காவலர்கள்! 


முதாட்டியின் மருமகன்களுக்கோ, அவர்தம் தமக்கையின் மகன்களுக்கோ - பிரச்சனைகளை சந்தித்தோ, அதனைக் கையாண்டோ பழக்கமில்லை என்பதால், ராமானுஜத்தின் "சேரி மக்களை திரட்டி உங்கூட்டு வாசலில் குந்த வைச்சிருவேன்" போன்ற மிரட்டல்களுக்கு அஞ்சி, 25000 ரூபாய் கொடுத்து, சமாதனப்படுத்தி 'சமுதாய தலைவர்' ராமானுஜம் தரப்பை அனுப்பியிருக்கிறார்கள். இந்த பண பரிமாற்றத்திற்கு சாட்சியாக, சமுதாய தலைவர்(?) ராமானுஜம் அத்தரப்பு சார்பாகவும், இத்தரப்பில் மூவரும் கையெழுத்திட்ட சமாதான உடன்படிக்கை எழுதி வாங்கப்பட்டது. 


20 அல்லது 25 ஆண்டுகளுக்கு முன் மூன்று அல்லது நான்கு ரூபாய்க்கு முத்தின தேங்காய் வாங்கி பதியம் போட்டு, நான்கு வாலி தண்ணீர் ஊற்றிய குற்றத்திற்காக(?) - இப்போது 'குடிகார பய' என்று அறியாமலே, அந்த அயோக்கியனுக்கு வேலை கொடுத்த பாவத்திற்காக - ரூ. 25000 தண்டம் கட்டியிருக்கிறார்கள். பாவம் அந்த மூதாட்டி! 


உண்மையில்:


தினக்கூலிக்கு வேலை பார்ப்பவரோ, வீட்டில் மாத சம்பளத்திற்கு வேலை பார்ப்பவரோ, புல் அறுக்க, மாங்காய் /தேங்காய் பறிக்க மணிக் கணக்கில் அல்லது மரக் கணக்கில் வீட்டுத் தோட்டத்தில் வேலைப் பார்ப்பவர்கள் யாரும் முறையான ஒப்பந்த தொழிலாளர்கள் அல்ல. நம் கொள்ளையும் தொழிற்சாலையோ, பண்ணையோ, கமர்சியல் எஸ்டேடோ அல்ல. 


கொள்ளைக்கு தேங்காய் பறித்துப் போட வருபவன் சாராயம் குடித்ததாலேயோ - குடிக்காமாலேயே கூட தவறி கீழே விழந்துவிட்டால் - தென்னையின் முதலாளி எந்த நஷ்டயீடு வழங்க வேண்டியது விதி இல்லை. அல்லது காயபட்ட தொழிலாளிக்கு தேவையான மருத்துவத்திற்கு ஆகும் செலவை செய்ய வேண்டியதும் சட்டமல்ல -  மனிதாபிமான அடிப்படையில் வேண்டுமானால் உதவுவதை தவிர. 


இனி இப்படியான எந்த அசம்பாவிதங்களும் நடந்திடக்கூடாது.

ஒருவேலை நடந்திடும் பட்சத்தில் - பணம் கேட்டு மிரட்டினால் - அவர்களை அழைத்து காஃபி போட்டுக் கொடுத்து பேசிக் கொண்டிருக்காமல் - காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யும்படியோ, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும்படியோ கறாராக சொல்லி அனுப்பிவிடுங்கள்.


இம்மாதிரியான வழக்குகள் வட்டார முன்சிஃப் நீதிமன்றங்கள் முதல் உச்சநீதிமன்றம் வரை போனாலும் - நிற்காது.


Tags: பயனுள்ள தகவல்

Share this