சர்வதேச விருது பெறும் வீராணம் ஏரியைச் சுற்றுலாத் தலமாக மேம்படுத்த வேண்டும் : பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிடும் அறிக்கை
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிடும் அறிக்கை
சர்வதேச நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணையம் (ICID - International Commission On Irrigation And Drainage) ஒவ்வொரு ஆண்டும் உலக பாரம்பர்ய நீர் பாசன கட்டமைப்புகள் மற்றும் நீர் சேமிப்பு போன்றவற்றுக்கு விருதுகளை அறிவித்து வருகிறது.
இந்தியத் தேசிய நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் குழுமம் (INCID - Indian National Committee on Irrigation and Drainage) அனைத்து மாநிலங்களிலிருந்தும் அதற்குத் தகுதியான நீர் நிலைகளைப் பரிந்துரை செய்து வருகிறது. தமிழகத்தில் உள்ள கல்லணை, காளிங்கராயன் அணைக்கட்டு, வீராணம் நீர்த்தேக்கம் ஆகியவற்றை இந்த விருதுக்காகத் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழக அரசின் நீர்வளத்துறைக் கடந்த 2021 ஆம் ஆண்டு கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில் இம்மூன்று நீர்த்தேக்கங்களுக்கு உலக பாரம்பரிய நீர்ப்பாசனக் கட்டமைப்புகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
இந்தியாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ள நான்கு விருதுகளில் இந்த வருடம் மூன்று விருதுகள் தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
இம்மூன்று நீர்த்தேக்கங்களில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணை நீர்த்தேக்கம் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது.
இன்னொரு நீர்த்தேக்கமான வீராணம் ஏரி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தாலூக்கா லால்பேட்டையில் தொடங்கி சேத்தியாத்தோப்பு வரை 15 கிலோமீட்டர் நீளமும் 5 கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்த ஏரி 1,445 கன அடி மில்லியன் கொள்ளளவைக் கொண்டதாக இருக்கிறது. இந்த ஏரியின் மூலம் சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் 123 கிராமங்களில் உள்ள 49,440 ஏக்கர் விளைநிலங்களுக்கு நேரடியாகவும், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, வாலாஜா ஏரி மற்றும் பெருமாள் ஏரிகளைச் சுற்றியிருக்கும் 40,669 ஏக்கர் விளைநிலங்களுக்கு மறைமுகமாகவும் பாசன வசதியைப் பெறுகின்றன. அத்துடன் சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.
வீராணம் ஏரி கி.பி 907 முதல் 953 வரை சோழர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது. பிரபல தமிழ் வரலாற்று நாவலான கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலின் தொடக்கம் இந்த ஏரியிலிருந்து தான் தொடங்குகிறது.
பாரம்பரிய மிக்க வீராணம் ஏரியில் படகு சவாரி ஏற்பாடு செய்வதுடன் இப்பகுதியின் சூழல்களை மேம்படுத்தினால் இங்குச் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதற்கும் இப்பகுதியில் உள்ள மக்களின் பொருளாதாரம் முன்னேறுவதற்கும் வாய்ப்பு ஏற்படும். இது குறித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்.
Tags: செய்திகள்