இன்று அரஃபா தினம்:
துல்ஹிஜ்ஜா மாதம் பிறை ஒன்பது அன்று பகலில் அரஃபா மைதானத்தில் ஹாஜிகள் அனைவரும் கூடும் நாள்;
இந்த தினத்தில் தான் நபி ஸல்... அவர்கள் தனது இறுதி பேருரையை நிகழ்த்தினார்கள்; நபி ஸல்... அவர்கள் தலைமையில் நடந்த முதலும், கடைசியுமான மாபெரும் இஸ்லாமிய மாநாடு என்றும் இதைக் கூறலாம்.
அதேபோன்று ஒவ்வொரு வருடமும் பேருரை நிகழ்த்தப்படுகிறது; அஷ்ஷேய்க் டாக்டர் முஹம்மத் பின் அப்துல் கரீம் அல் ஈஸா அவர்கள் இவ்வாண்டு (இந்திய நேரம் பிற்பகல் இரண்டு மணி) அரஃபாவில் மஸ்ஜிதுன் நமிராவில் உரை நிகழ்த்த அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது பேருரையை தமிழ் உட்பட 14 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு ஒலிபரப்பப்படுகிறது. தமிழில் உரையைக் கேட்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்தவும்.
https://manaratalharamain.gov.sa/arafa/arafa_sermon/kn
உரைக்குப் பின் ளுஹ்ர் மற்றும் அஸர் தொழுகைகளை சுருக்கி, இணைத்து (ஜம்வு, கஸ்ர்) முற்கூட்டியே (தக்தீம்) தொழுகை நடத்துவார். இன்று ஜும்மா தினமாக இருந்தாலும் அரஃபாவில் மட்டும் ஜும்ஆ நடத்தப்பட மாட்டாது.
இந்த நாளில் தான், இன்று உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை நிறைவு செய்து விட்டேன், எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களின் மார்க்கநெறியாக பொருந்திக் கொண்டேன், என்ற 5:3 ம் வசனத்தை இறக்கி, இந்த மார்க்கம் நிறைவு பெற்று விட்டதாக இறைவன் அறிவித்தான்.
அரஃபா மைதானத்தில் இந்த நாளின் பகலில் ஹஜ்ஜுக்கு சென்றவர் சிறிது நேரமாவது தங்கவில்லையெனில் ஹஜ் நிறைவேறாது;
அரஃபா கொண்டாடப்படும் பிறை ஒன்பது அன்று ஹஜ்ஜுக்கு செல்லாத பிற முஸ்லிம்கள் நோன்பு நோற்பது சுன்னாவாகும்.
நபி ஸல்... அவர்கள் கூறினார்கள்:
துல்ஹிஜ்ஜா ஒன்பதாவது நாள் அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும், அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் கருதுகிறேன்.
(நபிமொழி: முஸ்லிம் 2151)
எனவே அரஃபாவை வரவேற்போம்! அதன் முழு பலனையும் நாம் அடைவோம்!!
(குறிப்பு: இன்று மாலை மஃரிப்புக்கு பின் ஹாஜிகள் அரஃபாவில் இருந்து புறப்பட்டு, முஸ்தலிஃபாவுக்கு (13 கிமீ) சென்று திறந்த வெளியில் இரவு தங்குவர்)
ஹஜ் நாள் 2 - 9 துல்ஹிஜ்ஜா 1443
ஜேஎஸ்ரிஃபாயீ
Tags: இஸ்லாம்