Breaking News

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

நிர்வாகி
0



 இந்தியத் திருநாட்டின் விடுதலை திருநாள் நல் வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இது விடுதலை திருநாளின் பவள விழா ஆண்டு என்பது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கின்றது.


."வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ" என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கு ஏற்ப, விடுதலை வேள்வியில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த ஆயிரமாயிரம் தியாகிகளை நினைவு கூறுவோம்.


விடுதலை என்பது சாதி, மத வேறுபாடுகளை கடந்து இந்தியர்கள் என்ற அடிப்படையில் ஒன்று சேர்ந்து போராடிய நமது முன்னோர்களின் ஒற்றுமைக்கும் பொறுமைக்கும் தியாகத்திற்கும் கிடைத்த பரிசு.


பல ஆயிரம் உயிர் தியாகத்தால் உயிர் பெற்ற சுதந்திரத்தை உன்னதமாய் பேணிக் காப்போம்.இருப்போருக்கும் இல்லாதாருக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு இல்லாத இந்தியாவை முழுமையாய் கட்டமைப்போம்.உலக நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.


விடுதலை வேள்வியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட நமது முன்னோர்கள் ஏற்றத் தாழ்வுகள் இல்லாத சகோதரத்துவம் மேலோங்கி நிற்கும் சமுதாயமாக இந்தியா உருவாக வேண்டும் என்று கனவு கண்டார்கள். ஆனால் இன்று நமது நாட்டில் கடைப்பிடிக்கப்படும் பொருளாதாரக் கொள்கை மக்களிடையே மிகப் பெரும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தியுள்ளது. . இந்திய மக்கள் தொகையில்  பாதிக்கும் மேற்பட்டோரின் ஆண்டு வருமானம் ரூ53,610 தான். ஆனால்  இவர்களை விட 20 மடங்கு கூடுதல் வருமானத்தைப் பொருளாதாரத்தில் வளம் பொருந்திய முதல் 10 விழுக்காட்டினர் ஆண்டுக்கு ரூ11.66,520 பெறுகின்றார்கள். நாட்டின் மக்கள் தொகையில் 1 விழுக்காட்டினர் நாட்டின் மொத்த வருவாயில் 22 விழுக்காடு பெறுகின்றனர். 10 விழுக்காட்டினர் 57 விழுக்காடு பெறுகின்றனர். ஆனால் கீழ் நிலையில் உள்ள 50 விழுக்காடு மக்கள் மொத்த நாட்டு வருமானத்தில் 13 விழுக்காட்டை மட்டுமே பெற்றுள்ளனர். நமது நாட்டின் இந்த வருமான ஏற்றத் தாழ்வு மிகுந்த கவலைக்குரியது.


மதவெறிக்கு இடமளிக்காமல் சமூக நல்லிணக்கத்தோடு எல்லோரும்  நாட்டின் உண்மையான வளர்ச்சிக்கு வித்திட வேண்டும்.ஜனநாயகம், மதச்சார்பின்மை, மக்கள் ஒற்றுமை, கருத்துரிமை, அரசியல் சாசன உரிமை போன்றவற்றைக் காத்து நிற்க இந்த விடுதலை திருநாளில் உறுதியேற்போம்.


இப்படிக்கு


எம் எச் ஜவாஹிருல்லா


தலைவர்

Tags: செய்திகள்

Share this