Breaking News

சட்டமன்றம் நோக்கி எஸ்.டி.பி.ஐ. கட்சி கருஞ்சட்டைப் பேரணி!

நிர்வாகி
0



தமிழக அரசு, எதிர்வரும் செப்.15 அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, ஆயுள்சிறைவாசிகளை விடுதலை செய்யும் நடவடிக்கையில் பாரபட்சம் பாராமல் மற்ற கைதிகளைப் போன்று கருணை அடிப்படையில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளையும்,  6 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்கிற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து சட்டமன்றம் நோக்கி மாபெரும் கருஞ்சட்டைப் பேரணியை எஸ்.டி.பி.ஐ. கட்சி இன்று (செப்.08) நடத்தியது.


 எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணிக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர்கள் அச.உமர் பாரூக், அகமது நவவி, மாநில செயலாளர்கள் ரத்தினம், ஏ.கே.கரீம், அபுபக்கர் சித்திக், நஜ்மா பேகம், மாநில பொருளாளர் அமீர் ஹம்சா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், ஒருங்கிணைந்த சென்னை மண்டல மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 


மேலும், இந்த பேரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பாப்புலர் ஃபரண்ட் மாநில தலைவர் முகமது சேக் அன்சாரி, தமிழ்தேச விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தியாகு,  ஜம்மியத் உலமாயே ஹிந்த் செயலாளர் எம்.ஜி.கே.நிஜாமுதீன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும்அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டு ஆயுள் சிறைவாசிகள் விடுதலை கோரிக்கையை முன்வைத்து உரையாற்றினர்.  


பேரணியில் உரையாற்றிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், “தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக தலைவர்களுடைய பிறந்த நாளின் போது  குறிப்பிட்ட வருடங்களை சிறையில் கழித்த ஆயுள் சிறைக் கைதிகளை நன்னடத்தை, பொதுமன்னிப்பின் அடிப்படையில் கருணையோடு விடுதலை செய்வது என்பது வழமையாகி வருகிறது.  ஆனால், ஆட்சிகள் மாறிய போதும் காட்சிகள் மாறவில்லை என்பதற்கிணங்க, முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை மட்டும் தொடர்ந்து வரும் ஆட்சியாளர்களால் நிராகரிக்கப்பட்டு வருகின்றது.  அரசின் கருணையில் முஸ்லிம்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டப்படுகின்றது.  


சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்று ஆட்சியமைத்த திமுக அரசு, கடந்த ஆண்டு பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு, 700 ஆயுள் சிறைவாசிகளின் விடுதலை தொடர்பான அரசாணையை வெளியிட்டது. ஆனால், தமிழக அரசு வெளியிட்ட ஆயுள் சிறைவாசிகளின் முன்விடுதலை குறித்த வழிகாட்டல் அரசாணையானது, முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலையை நிராகரிக்கும் வகையில் பெரும் ஏமாற்றத்தை தந்தது. முழுவதும் பாரபட்சம் நிறைந்த இந்த அரசாணையை ரத்து செய்து அனைத்து தரப்பினருக்கும் விடுதலையை சாத்தியமாக்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். 


உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் படியும், அரசியல் சட்டப் பிரிவு 161 ன் படியும் முஸ்லிம் சிறைவாசிகள் உள்பட அனைத்து ஆயுள் சிறைவாசிகளின் விடுதலையை சாத்தியமாக்க முடியும் என்கிற சூழலில், பாரபட்சமான அரசாணையை ரத்து செய்யாமல், அந்த அரசாணையின் பிரகாரம் விடுதலைக்கு தகுதிபெற முடியாத சிறைக்கைதிகளின் நிலை குறித்து விசாரித்து பரிந்துரை அளிக்க, ஓய்வுபெற்ற நீதியரசர் ஆதிநாதன் தலைமையில் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டது தமிழக அரசு.  

நீதிபதி ஆதிநாதன் குழு அமைக்கப்பட்ட அறிவிப்பு வெளியாகி இதுவரை 10 மாதங்கள் ஆன நிலையிலும், அந்த குழுவின் நிலை என்ன? அந்த குழுவின் உறுப்பினர்கள் யார்? அந்த குழுவின் பரிந்துரைகள் என்ன? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இதன் மூலம் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விசயத்தில் திமுக அரசின் அறிவிப்பும் வெறும் கண்ணாம்பூச்சி ஆட்டமாகவே அமைந்துள்ளது தெளிவாகிறது.


தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் தற்போது 38 முஸ்லிம் சிறைக்கைதிகள் 10 ஆண்டுகளை கடந்தும் 28 ஆண்டுகள் வரை சிறைகளில் பல்வேறு அவஸ்தைகளுடன் தங்களின் விடுதலையை எதிர்பார்த்தவர்களாக உள்ளனர்.  விடுதலையை எதிர்பார்த்த பல முஸ்லிம் சிறைக் கைதிகள் சிறைக்குள்ளேயே இறந்து  பிணமாகவே வெளிவந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் தாங்கள் விடுதலை ஆவோம் என்ற நம்பிக்கையிலும் அவர்களின் பெற்றோர்கள்,  மனைவி, குழந்தைகள் மற்றும்  உறவுகள் என அனைவரும்  ஒவ்வொரு  வருடமும்  அரசு  நமக்கு கருணை காட்டும்  என்ற  எதிர்பார்ப்புடனும்  அதற்கான அறிவிப்பை ஆவலோடும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அரசு நிர்ணயித்த அத்தனை தகுதிகளையும் கொண்டவர்களாக முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் இருந்தும், அவர்களின் விடுதலை மட்டும் ஏனோ மறுக்கப்பட்டு வருகின்றது.  


ஆகவே, தமிழக அரசு எதிர்வரும் செப்.15 அண்ணா பிறந்தநாளன்று, ஆயுள்சிறைவாசிகளை விடுதலை செய்யும் நடவடிக்கையில், பாரபட்சம் பாராமல் மற்ற கைதிகளைப் போன்று கருணை அடிப்படையில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கும், 6 தமிழர்களுக்கும் விடுதலையை உறுதிசெய்ய வேண்டும்.” என வலியுறுத்தினார்.


மேலும், இந்த பேரணியில், சிறைவாசிகள் விடுதலை நடவடிக்கை தொடர்பாக சட்டமன்ற தீர்மானம் அல்லது அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, விரைவாக சிறைவாசிகளை விடுதலை செய்திட வேண்டும். இந்நடவடிக்கையில் கடந்த காலங்களைப் போன்று எவ்வித பாரபட்சமும் காட்டாமல், மேற்குறிப்பிட்ட அனைத்து சட்ட முறைகளின் படி, முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளையும் மற்றும் 6 தமிழர்களையும் தமிழக அரசு விடுதலை செய்திட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி ஒற்றைத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. 

காணொளியை  காண... https://youtu.be/2ZjpqtIV7tw

முன்னதாக எழும்பூர் அசோகா ஹோட்டல் முன்பிருந்து துவங்கிய பேரணியை ராணி மெய்யம்மை மஹால் அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இந்த பேரணியில் பெண்கள் உட்பட சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.







Tags: செய்திகள்

Share this