Breaking News

அரபுக் கல்லூரிகள் ஒரு எச்சரிக்கை! மௌலவி அப்துல் அஜீஸ் பாகவி

நிர்வாகி
0

 


ரமலானுக்குப் பிறகு அரபுக்கல்லூரிகளின் புதிய கல்வியாண்டு தொடங்க இருக்கிறது, இந்த ஆண்டு ரமலானிலேயே பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெறுவதால் இந்த ரமலானை தொடர்ந்து இரட்டை கல்வி முறையில் செயல்படும் அரபுக்கல்லூரிகளிலும் புதிய மாணவர் சேர்க்கைகள் நடை பெறும். அதற்கான ஏராளமான விளம்பரங்கள் வருவதை பார்க்கிறோம்.

பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை!
விளம்பரக் கவர்ச்சியில் அரபுக்கல்லூரிகளை தேர்ந்தெடுத்து விடாதீர்கள். அது உங்களுக்கு மட்டுமல்ல தீனுக்கும் நஷ்டமாகும்
சில மாதங்களுக்கு முன் மலேஷியா சென்றிருந்த போது எங்களது வாகனத்தை ஒரு ஆலிம் செலுத்திக் கொண்டிருந்தார். ஒரு இடத்தில் மற்றவர்கள் இறங்கி விட . நாங்கள் இருவர் மட்டுமே இருந்த சந்தர்ப்பத்தில் திடீரென அவர் கூறினார். “ஹஜ்ரத் எனக்கு கத்தி அழுக வேண்டும் போல இருக்கிறது. தப்பான இடத்தில் பெண் மகளை திருமணம் செய்து கொடுத்தவர்கள் அழுவது போல நான் அனறாடம் உள்ளுக்குள் அழுது கொண்டிருக்கிறேன்” என்றார். நான் அவரது மனவேதனைக்கான காரணம் புரியாமல் கவலைப்படாதீர்கள். அல்லாஹ் இருக்கிறான். அவனிடம் முறையிட்டால் எந்த கவலையும் தீரும் என்று கூறினேன். அவர் சொன்னார். ஹஜ்ரத் இது நானாக வருத்திக் கொண்ட கவலை. இனி இதை சரி செய்ய முடியுமா என்பது பெரும் கவலையாக இருக்கிறது என்றார். அவரை சமாதானப்படுத்தினேன்.
தானாக அவர் தனது கவலைக்கான காரணத்தை கூறினார்.
“என் மகன் 8 ம் வகுப்பில் நன்றாக படித்துக் கொண்டிருந்தான். அபோது ஒரு அரபுக்கல்லூரி பிரபலமாக இருந்த்து. மார்க்க கல்வி மற்றும் அகடமிக் கல்வி இரண்டும் போதிப்பதாக நிறைய விளம்பரம் செய்தார்கள். நான் அறிந்த பலரும் தங்களது பிள்ளைகளை அங்கு சேர்த்துக் கொண்டிருந்தனர். நான் என் மனைவியின் பேச்சை மீறி மகனை அங்கு கொண்டு பேய்ச் சேர்த்தேன். இப்போது படித்து முடித்துவிட்டான். ஹஜ்ரத்! எதற்கும் பயனில்லாமல் மண்ணு போல இருக்கிறான். அவனிடம் மார்க்க கல்வி அறவே இல்லை. அகடமிக் எஜுகேஸனும் வேஸ்ட். நானே என் மகனை வீணடித்துவிட்டேன் இனி அவனை எப்படி உருவாக்குவது என்பது எனக்கு மலைப்பாகவே இருக்கிறது” என்றார். சொல்லி முடித்த பிறகும் அவரது கவலை தீர வில்லை.
மகனின் எதிர்காலத்தை தந்தையே சிதைத்து விட்ட இத்தகைய வேதனை இன்னொரு தகப்பனுக்கு வரக்கூடாது என்றார்.
இதை பதிவு செய்ய வேண்டும் என்று நான் தீர்மானித்து ஐந்து மாதங்கள் ஆகிவிட்டன. அரபுக்கல்லூரிகளுக்கான விளம்பரங்கள் புற்றீசல்களாக பெருகி வருகிற நிலையில் முஸ்லிம் பெற்றோர்களுக்கு உதவும் என்பதற்காக இதை பதிவு செய்கிறேன்.
உங்கள் மகனை என்னவாக ஆக்க விரும்புகிறீர்கள் என்ற தீர்மானத்தை முன்னரே தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்
ஆலிமாகவா ? அதிகாரியாகவா ? அல்லது நல்ல ஒரு ஒழுக்க முள்ள பிள்ளையாக இருந்தால் போதுமா ?
மூன்றாவதுதான் நோக்கம் என்றால் உங்களுக்கு அதிகம் சிரமம் இல்லை. நல்ல கட்டுப்பாடுள்ள மூத்த ஆலிம்களுள்ள நிறுவனங்களை தேர்ந்தெடுங்கள்.
உங்கள் மகன் அதிகாரியாக வேண்டும் என்றால் அதற்கான நிறுவனங்களை தேர்வு செய்யுங்கள். தயவு கூர்ந்து மார்க்க கல்வியின் மரியாதையில் கை வைக்காதீர்கள். மார்க்க கல்வி என்பது ஒரு வகை தவம். அதன் பின் உண்டான வாழ்கையும் அத்தகையதே இமாம் மாலிக், இமாம் அஹ்மது இமாம் புகாரி (ரஹ்) போன்றவர்களின் பாரமபரியத்தை சில்லறை வர்த்தகமாகி விடாதீர்கள்.
எங்காவது, ஒரு பொறியியல் கல்லூரி, உங்கள் பிள்ளைகளை நாங்கள் சிறந்த சமையல் கலைஞராக ஆக்குவோம் என்றோ அல்லது சிறந்த நாடக நடிகராக ஆக்குவோன் என்றோ ஏன் சிற்த ஐ ஏ எஸ் ஆக்குவோம் என்றோ விளம்பரம் செய்கிறார்களா ? இல்லையே!
இன்று சில அரபுக்கல்லூரிகளுக்கான விளமப்ரங்களை கவனித்திருக்கிறீர்களா ?
ஆலிம்களை IAS களாக்குகிறோம்.
இது உங்களைப் போன்ற பெற்றோர்களுக்காக விரிக்கப்பட்டிருக்கிற வலையாகும்.
அடப்ப பாவிகளா! IAS ஆக விரும்புகிறவர்களை அப்படி ஆக்குங்கள். ஆலிம்களை ஆலிம்களாக ஆக விடுங்கள்.
கலைக் கல்லூரிகள் வைத்து காசு பார்த்து கலைத்துப் போன பிறகு இனி அரபுக்கல்லூரிகள் தான் வசூலிக்கும் வழி என்ற சூழ்நிலையில் அதை வித்தியாசமாக செய்வதகாக உருவாக்கிய கோஷமே தான் ஆலிம்களை ஐ ஏ எஸ் களாக்குகிறோம் என்ற கவர்ச்சி கோஷம்..
இயக்கப் பேர்வழிகள் இந்த வகையில் எச்சரிக்கையாக இருக்கிறர்கள். சொந்த இயக்கத்தை தவிர வேறு எங்கும் அவர்கள் திரும்பியும் பார்ப்பது இல்லை. இந்த ஏமாற்றுப் பேர்வழிகளும் அவர்களது தெருக்களில் தங்களது பண்டங்களை விற்பனை செய்ய முயற்சிப்பதில்லை.
பாவம் சுன்னத் ஜமாத்தை சேர்ந்த பெற்றோர்கள் தான் விளமபரங்களைப் பார்த்து வாய் பிளந்து நிற்கிற போது அதனுள் இலாவமகாக கொள்கை குழப்பவாதிகளும் ஏமாற்றுப் பேர்வழிகளும் நுழைந்து விடுகிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். உணரும் சூழ்நிலை வருகிற போது அடுத்த தலைமுறையை பறி போய்விடுகிறது.
உங்களது பிள்ளைகள் திறமையான ஆலிம்களாக வர வேண்டும் என்று நினைக்கிறீர்களா ?
உங்களுடைய பொறுப்பு தான் கனமானது அதிக நன்மைகளுக்கும் உரியது.
இன்றைய இஸ்லாமிய உலகிற்கு திறன் மிக்க ஆலிம்கள் அவசியம். உங்களது பிள்ளைகளுக்காக நீங்கள் தேர்ந்தெடுக்கும் இந்த துறை நிச்சய்மாக உங்களுக்கும் உங்களது குடும்பத்திற்கும் பெருமை சேர்க்கும்.
எங்களது ஆசிரியப் பெருந்தகை வேலூர் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக்கல்லூரியின் நீண்ட கால முதல்வர் என் பி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி (கடையநல்லூர்) அவர்களது குடும்பத்தில், பெரும் படிப்பு படித்தவர்கள் - அதிகாரிகள் என்று பல பேர் இருக்கிறார்கள். ஆயினும் இன்று அந்தக் குடும்பத்தின் பெருமை எங்களது உஸ்தாதுதான்.
இந்த வகையிலான உலமா பாரம்பரியத்தில் உங்களது மகனை இணைக்க விரும்பினீர்கள் என்றால் விளம்பரக் கவர்ச்சியிலிருந்து முதலில் வெளியே வாருங்கள், மார்க்க அறிவில் சிறந்தவர்கள் பணியாற்றுகிற நிறுவனங்களை தேர்ந்தெடுங்கள். தரமான ஆசிரியர்கள் இருக்கிறார்களா ? சரியான கல்வி தரப்படுகிறதா என்பதை விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள். இரட்டை கல்வி முறை என்றாலும் கொஞ்சமாவது மார்க்கத்த்திற்கும் மார்க்க கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்கிற நிறுவனமா என்பதை அழுத்தமாக கவனியுங்கள்! நீங்கள் யாரை முன்னுதாரணமாக நினைத்து இந்த துறையை தேர்ந்தெடுக்கிறீர்களோ அதற்கேற்ற கல்வியை இந்நிறுவனம் தருமா என்று ஒரு ஒப்பீட்டை செய்து கொள்ளுங்கள்.
தென்னிந்தியாவில் இஸ்லாமிய மார்க்க கல்வியின் மறுமலர்ச்சிக்கு காரணமான வேலூர் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக்கல்லூர்யின் நிறுவனர் அண்ணல் அஃலா ஹஜ்ரத் (ரஹ்) அவர்கள் தங்களது நிறுவனத்தில், “மார்க்கக் கல்வி; அதில் தேர்ச்சி” என்ற இரண்டு சொற்களை தவிர வேறு எதற்கும் கவனம் தராதவர்களாக இருந்தார்கள். அந்த கவனக் குவிப்பு தான் தகுதி வாய்ந்த உலமா பாரம்பரியத்தையும் ஏராளமான கல்வி நிறுவனங்களையும் இப்போதும் தமிழகத்திற்கு தந்து கொண்டிருக்கிறது.
இது தவிர, அது இது என்று சொல்லி மற்றவற்றில் ஆசை காட்டும் நிறுவனங்களை ஒரு ஓர விழிப் பார்வையில் ஒதுக்கி விட்டு சென்று விடுங்கள்.
இப்போதெல்லாம் மருத்துவக் கல்லூரிகளில் கூட இடம் கிடைத்தால் போதும் என்று விவரமறிந்த பெற்றோர்கள் நினைப்பதில்லை. கட்டிடங்களை காட்டி கட்டணத்தை மட்டும் வசூலித்து விட்டு கல்விக்கு டாடா காட்டிவிடுகிற பல நிறுவனங்கள் தங்ளது பணத்த்தையல்ல தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்விக்குரியாக்கிவிடுவதை இப்போது பல பெற்றோர்களும் உணர்ந்து வருகிறார்கள். இந்த தெளிவு அரபுக்கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும் பெற்றோர்களுக்கும் அவசியம்.
உங்களது மகனுக்கான கல்விக் கூடத்தை தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில் அரசியல் அல்லது ஆன்மீக குழு மனப்பான்மை கூட ஒரு கடிவாளமாக ஆகிவிட வேண்டாம்.
ஏனெனில் இது பொழுது போக்கு அல்ல. உங்களது செல்வ மகனின் எதிர்காலம்!.

Tags: சமுதாய செய்திகள்

Share this