கனவு நிஜமானது... சிறுகதை யாசிர் ஹசனி , லால்பேட்டை
சென்னையில் தனியார் கல்லூரியில் பயின்று வரும் அமீர் அவனது நண்பன் இம்ரானுடன் நோன்பு பெருநாளுக்கு விடுப்பெடுத்துக் கொண்டு மார்க்கம் ஆழமாக வேரோடிய லால்பேட்டைக்கு வந்திறங்கினான் .காயிதே மில்லத் பேருந்து நிறுத்தம் வரவேற்றது. பிரபலமான இந்த ஊரில் பேருந்து நிலையம் இருக்குமென்று எதிர்பார்த்த இம்ரானுக்கு பேருந்து நிறுத்தம் இருப்பது ஏமாற்றத்தைக் கூட்டியது. அதை வெளிக்காட்டிக்கொள்ள வில்லை.
நடுநிசி இரவு என்றபோதும் இயல்புநிலைக்கு மாறாக வாலிபர்களின் கூட்டம் சாலை முழுவதும் நிரம்பி வழிந்தது. இது இம்ரானுக்குப் பெருத்த ஆச்சரியத்தைத் தூண்டியது." என்னடா இது ? ஒரு மணிக்கு இவ்வளவு பேர் நிக்குறாங்க ..! " . "ஆமா டா நோன்பு ஒரு மாசமும் இப்படித்தான் இருக்குமென்றான்" அமீர்.
வீடு தூரமாக இருப்பதால் ஆட்டோவில் செல்ல முனைந்த போது. எதையும் முழுமையாகக் காண இயலாதென்பதால் நடந்து செல்ல விரும்பினான் இம்ரான்.
சில வாலிபர்கள் கபடி விளையாடினர் . மசாலா பால் கடையில் வாலிபர்களின் கூடி நின்றனர்.நடு இரவில் பெண்கள் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அவனுக்குள் வியப்பை ஏற்படுத்தியது. வழியில் காணும் காட்சிகளைக் கதிரவன் மட்டும் தான் காணவில்லை மற்றபடி பகலுக்கான அத்தனை அடையாளங்களும் இருக்கிறன என்று மனதுக்குள் யோசித்த வாரே நண்பனுடன் நடந்தான் இம்ரான்.
வீட்டை அடைந்தவுடன் தனது பெற்றோர் மற்றும் தம்பியை அறிமுகம் செய்து வைத்தான் அமீர். நலம் விசாரிப்புகள் முடிந்து, பயணக் களைப்பில் இருவரும் அசந்து உறங்கிக் கொண்டிருந்தனர்.
சவால் பக்கிரிகளின் பாட்டோசைகள் அமீரை எழுப்பிவிட்டன. ஆனால், இம்ரான் எழவில்லை. இம்ரான் நோன்பு நோற்பதில் அலட்சியம் காட்டுவானென்று தெரியும் இருந்த போதும் வீட்டில் எதாவது நினைத்து விடுவாங்க என்ற பயம் உள்ளுக்குள் குருதியாக ஓடத் தொடங்கியது.
ஒருவழியாக எழுப்பி சஹர் முடித்துத் தொழுதுவிட்டு உறங்கிவிட்டனர்.
சூரிய ஒளி கண்களைத் தொட்டு விளையாட உறக்கம் கலைந்து எழுந்தான் இம்ரான். அமீர் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தான். முகத்தை மட்டும் கழுவி விட்டு ஜன்னலைத் திறந்து பார்த்தவன், அமீரை கையோடு அலைத்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே சென்றான்.
"என்னடா ..? மணி பத்துக்கு மேலாகுது தெருவில் யாரையும் காணும்? "நோன்பு காலத்துல நைட் பூரா முழிச்சிட்டு, பகல் பூரா தூங்குவாங்க" என்றவுடன் புரியாத ஒன்றைப் புரிந்தது போல் நகைத்தான் இம்ரான்.
பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பிய அமீருடைய தம்பியும், இம்ரானும் அளவாடி கொண்டிருந்தனர்.
"பள்ளிக்கூடம் போகும் போது ஏன் நோன்பு வைக்கிறே ?" எனக் கேட்டான்
"நான் நோன்பு வைத்தால் ரெண்டு விதமான நன்மை கிடைக்குமென்றான்" அமீரின் தம்பி. "அப்படியா"! "ஒன்னு, அல்லாகிட்ட நன்மை கிடைக்கும். இன்னொன்னு, எங்க சாரு அடிக்க மாட்டார். தூங்குனாக் கூட ஒன்னும் சொல்ல மாட்டார்".
"உங்க ஊருல சின்ன பசங்க கூட நோன்பு நோபாங்களா? " "ம்ம் எங்க பசங்க எல்லாரும் நோன்பு வைப்பாங்க." இதைக் கேட்ட இம்ரான் வியந்து போனான்.
சிறுவனின் வார்த்தைகள் கூர்மையான ஈட்டிப் போல் தன்னைத் தாக்கியதாக உணர்வு அவனுக்குள் ஊடுருவத் தொடங்கியது.
"ஏய் இப்படியே பேசிக்கிட்டு இருந்தா எப்படி? வா வெளியே போவோம்" என்றான் அமீர்
கடைத்தெரு பக்கம் போகும் வழியில் பள்ளிவாசல்களிலிருந்து சிலர் நோன்புக் கஞ்சி கொண்டு சென்றனர். சமோசா,வடை வாங்கக் கடைத்தெரு முழுக்க மக்கள் கூடி நின்றனர். இவனுக்கு எல்லாம் புதுவித அனுபவமாக இருந்தன.
கடல் பாசி, கஞ்சி ஊற்றப்பட்ட சின்ன கோப்பை ,பேரித்தபழம், தண்ணீர் இப்படியாக உணவுப் பொருட்கள் விரவி காணப்பட்டன.
வெடிச் சத்தம் கேட்க இஃப்தார் செய்தனர்.
இஃப்தார் முடிந்து சற்று ஓய்வெடுத்தனர்.
சிறுவன் ஒருவன் அவனுக்கு எப்படியும் எட்டு வயது இருக்கும். கையில் சாக்லேட்டுடன் அமீரின் வீட்டுக்குள் வந்து நின்று...
"ஆச்சி நான் நோன்பு வச்சனா..! எங்க அம்மா இந்தச் சாக்லேட்டக் கொடுக்கச் சொன்னாங்க" அதைப் பெற்றுக் கொண்டு அந்தச் சிறுவனுக்குத் துஆ செய்து அனுப்பிவைத்தார் அமீரின் அம்மா .
இதை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் இம்ரான்.
பின்பு தராவீஹ் தொழுகைக்கு இருவரும் சென்றனர். தொழுகை முடிந்தவுடன் இம்ரானை அழைத்துக் கொண்டு லால்கான் தோப்பிற்குச் சென்றான் அமீர்.
இருட்டு சூழ்ந்திருந்தது ஆங்காங்கே கண்ணைச் சிமிட்டிக் கொண்டிருந்த வெளிச்சத்தில் வாலிபர்கள் பேசிக்கொண்டிருந்தனர். ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து ஊரைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர்.
" எங்க ஊர் என்ன சொல்லுது?"
"உங்க ஊர் மக்கள் இஸ்லாமியக் கொள்கையில் பிடிப்பாக இருப்பது சந்தோஷமா இருக்கு. சின்ன பசங்கக் கூட நோன்பு பிடிக்கிறாங்க....!ஆலிம்கள் நிறைந்திருக்காங்க...! நான் விட்டு, விட்டுத் தான் நோன்பு பிடிப்பேன். இதெல்லாம் பாக்கும்போது என்னை நான் மாற்றிக் கொள்ள வேண்டுமென எண்ணுகிறேன்."
"அல்ஹம்துலில்லாஹ்" என்றான் அமீர்
இங்கு சில நாட்கள் தங்கியதால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பள்ளிவாசல்களுக்குச் செல்வது, குர்ஆன் ஓதுவது,தர்மம் செய்வதென்று நன்மைகளை அள்ளிக்கொள்ளும் செயல்கள் அவனுக்குள் ஏதோ வேதியியல் மாற்றம் நிகழ்த்தியது போல் உணர்ந்து ரமலான் நோன்பில் அலட்சியம் காட்டியவன், பெருநாளைக்கு மறுநாள் ஆறு நோன்பை நோற்றவனாகச் சொந்த ஊருக்குப் புறப்பட்டான் இம்ரான்.
நண்பனிடம் எந்த மாற்றம் ஏற்பட நினைத்தானோ..! அது நிறைவேறியதற்கு இறைவனுக்கு நன்றி கூறினான் அமீர்.
A H.யாசிர் ஹசனி
lptyasir@gmail.com
Tags: சிறுகதை லால்பேட்டை