சென்னை-புருனை நேரடி விமான சேவை தொடக்க விழா.
நிர்வாகி
0
இதுவரையிலும் சென்னையிலிருந்து புருனைக்குப் பயணிக்க சிங்கப்பூர் அல்லது மலேசியா வழியாகத்தான் செல்லவேண்டும் என்ற நிலை இருந்தது. இப்போது சென்னையிலிருந்து புருனை தாருஸ்ஸலாம் செல்ல நேரடி விமான சேவை வாரத்தில் மூன்று நாட்கள் என அந்த ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் இயங்கும் என்றும், இதன்மூலம் மெல்பர்ன், சிட்னி போன்ற ஆஸ்திரேலிய மாநகரங்களுக்கும் இணைப்பு விமான சேவை வழங்கப்படுகிறது என ஏர்லைன்ஸின் CEO ஸாபிரின் அப்துல் ஹமீது தெரிவித்தார்.
புருனை வாழ் இந்தியர்களில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களே அதிகம் வசிக்கின்றனர். பொருள் வளம் மிகுந்த இந்நாடு உலகப் பணக்கார நாடாக விளங்குவதை அங்கு வணிகம் செய்து உயர்நிலையில் இருக்கும் பலரும் பெருமிதமாகக் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். அந்நாட்டிற்கு வரும் இந்தியர்களை, குறிப்பாக நம் தமிழர்களை அன்போடு அரவணைக்கும் மாண்பு மிகவும் போற்றத்தக்கது.
புருனையின் இந்தியத் தூதர் மேன்மைமிகு டத்தோ அலியுதீன் முகம்மது தாஹா அவர்களின் அழைப்பை ஏற்று, 07/11/2024 புதன் மாலை 7 மணிக்கு சென்னை ITC சோழா ஹோட்டலில் நடைபெற்ற ஏர்லைன்ஸின் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
புருனை இந்திய சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் ஜனாப் நஜீர் அஹ்மது அவர்களின் தலைமையில் நமது தமிழக வணிகப் பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர். ஒன்றிய வெளியுறவுத் துறை அதிகாரிகள், வணிகப் பிரமுகர்கள், வெளிநாட்டுப் பயண ஏற்பாட்டாளர்கள், தூதரக அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொழில் அதிபர்களாகவும், தொழிலாளர்களாகவும் அந்நாட்டில் வாழும் நம் தமிழ்நாட்டுச் சொந்தங்கள் பலருக்கும் இச்சேவை மிகுந்த பயனுள்ளதாகவே இருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
வரவேற்போம்; வாழ்த்துவோம்.
Tags: செய்திகள்