• Breaking News

  JMA காலோஜ்

  முன்னுரை:
  ஏக அல்லாஹ்வின் திருப்பெயரைக் கொண்டு ஆரம்பிக்கின்றோம். அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) இப்பகுதியில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று புகழ் பெற்ற, மார்க்க அறிஞர்களை உருவாக்கி அனுப்பும் ஓர் மதரசாவை பற்றி இங்கு அறிமுகப்படுத்துகின்றோம் எல்லாம் புகழும் அல்லாஹ்வுக்கே.

  மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வார்: தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் தீன் நெறி கோட்டையாம் லால்பேட்டையில் அமைந்துள்ளது மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வார். இது தமிழ்நாட்டில் வேலூர் மதரசா பாக்கித்துள் ஸாலிஹாத்திர்க்கு அடுத்து இரண்டாவது பெரிய மத்ரசாவாகும். இம் மதரசா 1862ஆண்டு ஆற்காடு நவாப்களின் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. இந்த மதரசாவில் ஒவ்வொரு வருடமும் இருநூறுக்கும் மேற்பட்டோர் மார்க்க கல்வி கற்றுவருகின்றனர். இதில் வருடம்தோறும் 50மேற்பட்டோர் பாஜில், மவ்லவி மற்றும் ஹாபிஸ் பட்டம் பெறுகின்றனர். இந்த மதரசாவில் மார்க்க கல்வி கற்பதற்காக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், தென் இந்தியா விலிருந்தும், இலங்கை போன்ற நாடுகளிலிருந்தும் ஏராளமான இஸ்லாமிய மாணவர்கள் வருகின்றனர்.
  பட்டமளிப்பு விழா : ஒவ்வொரு வருடமும் ஹிஜ்ரி ஆண்டில் ரமலானுக்கு முன்பு ஷாபான் மாதம் மதரசாவின் பட்டமளிப்பு விழா நடைபெறும். இரண்டு பெருநாட்களுக்கு பிறகு அடுத்து ஊரே கொண்டாடும் ஒரு விழா எதுவென்றால் அது ஜாமிஆ மன்பவுல் அன்வாரின் பட்டமளிப்பு விழாவாகும். அன்று ஊரே மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு திருவிழா போல் காட்சியளிக்கும். எட்டு வருடம் ஓதி முடிப்பவர்களுக்கு பாஜில் பட்டமும், ஏழு வருடம் ஓதி முடிப்பவர்களுக்கு மவ்லவி ஆலிம் பட்டமும், குரானை மனனம் செய்து முடிப்பவர்க்கு ஹாபிஸ் பட்டமும் வழங்கப்படுகிறது. இங்கு ஓதி முடித்து பட்டம் பெறுவோர் தனது பெயருக்கு பின்னால் மன்பஈ எனும் வார்த்தையை சேர்த்து கொள்கின்றனர். மன்பஈ என்றால் மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வாரில் ஓதி முடித்து பட்டம் பெற்றவர் என்று பொருள்படும். பட்டமளிப்பு விழாவிற்கு தமிழ்நாட்டிலிருந்து பல புகழ் பெற்ற மார்க்க அறிஞர்களும், சமுதாய தலைவர்களும் கலந்து சிறப்பித்து வாழ்த்துரை வழங்குவார்கள்.
  தாருல் தப்சீர் கலைக்கூடம் : இங்குதான் மதரசாவின் பட்டமளிப்பு விழா நடைபெறும், இது மதரசாவின் உட்புறம் அமைந்துள்ள் பெரிய அரங்கம் ஆகும். இவ்வரங்கத்தில் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உட்கார்ந்து விழா நிகழ்ச்சிகளை காணமுடியும்.
  மதரசாவின் புகழ்பெற்ற முதல்வர்கள்: மதரசாவின் முதல்வர்களாக (பெரிய ஹஜ்ரத்களாக ) மறைந்த புகழ்பெற்ற மார்க்க அறிஞர்கள் இருந்துள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஹைருள் மில்லத் என்று அழைக்கப்பட்ட மவ்லானா மவ்லவி அல்ஹாஜி அல்லாமா ஜியாவுத்தீன் அஹமது அமானி ஹஜ்ரத் அவர்கள், மவ்லானா மவ்லவி அல்ஹாஜி அப்துல்லா ஹஜ்ரத் அவர்கள் , மவ்லானா மவ்லவி அல் ஹாஜி இப்ராஹீம் ஹஜ்ரத் அவர்கள் மற்றும் சம்சுல் மில்லத் என்று அழைக்கப்பட்ட மவ்லானா மவ்லவி அல் ஹாஜி கே. எ. முகம்மது ஜெக்கரியா ஹஜ்ரத் போன்றவர்களின் நிர்வாகத்தாலும், அவர்களின் புகழாலும் ஜாமிஆ மன்பவுல் அன்வார் புகழ்பெற்றது என்றால் அது மிகை ஆகாது. இன்னும் ஏராளமான பெரும் புகழ்களை தன்னகத்தே பெற்றுள்ளது. அதனை பற்றி விவரிக்க இங்கு பக்கங்கள் போதாமல் போகலாம்.
  மதரசாவின் சிறப்பம்சம்: இம் மதரசாவில் தங்கி மார்க்க கல்வி கற்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் லால்பேட்டையில் உள்ள வீடுகளிலிருந்து மதியம் மற்றும் இரவு உணவு டிபன் கேரியரில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு மாணவரையும் தங்கள் வீட்டு பிள்ளைகளைப்போல் கருதுகின்றனர். காலை உணவிற்கு மதரசா நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளது.
  மதரசா நிர்வாக சபை: மதரசாவை நிர்வாகத்தை கவனிக்க மதரசா நிர்வாக சபை அமைக்கப்பட்டுள்ளது. நிர்வாக சபைக்கு உறுப்பினர்கள் லால்பேட்டையின் ஒவ்வொரு முஹல்லாவிளிருந்தும் ஒரு குறிப்பிட்ட உறுப்பினர்கள் முஹல்லாவாசிகளால் தேர்ந்தடுக்கப்பட்டு மதரசா நிர்வாக சபைக்கு அனுப்படுகின்றனர், அவர்கள் ஒவ்வொரு மாதமும் கூடி வரவு செலவு கணக்குகள் , மதரசா அபிவிருத்தி திட்டங்கள், பராமரிப்பு மற்றும் நிர்வாகதைப்பற்றியும் விவாதிப்பார்கள்.
  முடிவுரை: 150ஆண்டு கள் பழமை வாய்ந்த புகழ்ப்பெற்ற மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வார் மேலும் பல நூற்றாண்டுகளுக்கு ஆலிம்களையும், ஹாபிஸ்களையும், மார்க்க அறிஞர்களையும் உருவாக்கிடவும், அதன் புகழ் என்றென்றும் குறையாமல் இன்னும் பல புகழ்களைப் பெற முஸ்லிமாகிய நாம் அனைவரும் ஏக அல்லாஹ்விடம் வேண்டுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொண்டு முடிவுரைக்கு திரையிடுகின்றேன். அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).
  குறிப்பு: இதை படிக்கும் லால்பேட்டையை சேர்ந்தவர்களுக்கு, மதரசாவைப் பற்றிய குறிப்புகளில் குறை இருந்தாலோ அல்லது எதாவது செய்தி விடுப்பட்டு இருந்தாலோ lalpetexpress@gmail.com என்ற முகவரிக்கு ஈ மெயில் அனுப்பவும். அதன்மூலம் திருத்திக்கொள்ளமுடியும்.

  கருத்துகள் இல்லை

  வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

  நிர்வாகி
  லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணைய தளம்

  Post Top Ad

  Post Bottom Ad