Breaking News

இன்றுமுதல் 18-ம் தேதி வரை தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்

நிர்வாகி
0

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்தும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதலைத் தடுக்காத இந்திய அரசைக் கண்டித்தும் ஜுலை 9-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த தே.மு.தி.க. முடிவு செய்துள்ளது.
இது குறித்து அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. இதனால் லாரி வாடகை, ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.
விடுதலைப் புலிகளை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கியது. இப்போது விடுதலைப் புலிகளை ஒழித்துவிட்டோம் என இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலையும் அதிகப்படுத்தியுள்ளது.
கடந்த 5-ம் தேதி 21 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கடத்தப்பட்டுள்ளனர். ஆனால் இது குறித்து இந்திய அரசு சிறிதும் கவலைப்படவில்லை.
எனவே மத்திய அரசின் இத்தகைய மக்கள் விரோதப் போக்குகளைக் கண்டித்து தே.மு.தி.க. சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். 9-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Tags: தே.மு.தி.க.

Share this