Breaking News

ரசாயன தொழிற்சாலைகளில் வரி ஏய்ப்பு: 24ம் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

நிர்வாகி
0
ரசாயன தொழிற்சாலைகளின் வரி ஏய்ப்புகள் குறித்து மத்திய புலானாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவிடும்படி மத்திய அரசை வலியுறுத்தி, வரும் 24ம் தேதி காரைக்காலில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:விவசாயப் பயிர்களுக்கு யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி. போன்ற உரங்கள் மிக முக்கியமான உரங்களாக விளங்குகிறது. கடந்த சில ஆண்டுகளாக, இந்தியா முழுவதும், குறிப்பாக தமிழகத்தில் உரத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் விளைவாக வேளாண் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில், பொட்டாஷை பயன்படுத்தி வெடிபொருட்கள் மற்றும் கையெறி குண்டுகள் தயாரிப்பதற்கு பயன்படும் பொட்டாஷியம் குளோரேடு, அதாவது வெடி உப்பை புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் இயங்கி வரும் காரைக்கால் குளோரைடு, வைகை குளோரைடு ஆகிய தனியார் ரசாயன தொழிற்சாலைகள் தினசரி 40 டன் என்ற அளவுக்கு உற்பத்தி செய்துள்ளதாகத் தகவல் வந்ததின் அடிப்படையில், மேற்படி இரண்டு தொழிற்சாலைகளும் தற்போது மூடப்பட்டு உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. மேற்படி இரு தனியார் நிறுவனங்களும், ரூ.36 ஆயிரம் கொடுத்து வாங்க வேண்டிய பொட்டாஷை, விவசாய உரம் தயாரிப்பு என்ற போர்வையில் ரூ.5 ஆயிரத்து 300 கொடுத்து வாங்கியதாகவும், ரூ.1,000 கோடிக்கு மேல் மேற்படி நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்து உள்ளதாகவும், மேற்படி நிறுவனங்களில் தயாரித்த வெடிஉப்பு தீவிரவாத மற்றும் பயங்கரவாத இயக்கங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. ஆனால், மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்சினையில் அக்கறை செலுத்தவில்லை. மேற்படி ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகியும், எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கப்படவில்லை. எனவே, இரு தனியார் நிறுவனங்களின் உர மோசடிகள், வரி ஏய்ப்பு மற்றும் இதர மோசடிகள் குறித்து மத்திய புலனாய்வுத்துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வரும் 24ம் தேதி காரைக்கால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு, புதுச்சேரி மாநிலக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags: அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்

Share this