Breaking News

சிதம்பரம் பகுதியில் தொடரும் தீ விபத்துகள்:பீதியில் கிராம மக்கள்

J.நூருல்அமீன்
0
சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் கடந்த ஒருமாதமாக தொடர் தீ விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

இவ்விரு தாலுகாக்களில் கோட்டைமேடு, கீழசெங்கல்மேடு, இளமங்கலம், வானமாதேவி, சி.சாத்தமங்கலம், கீரப்பாளையம், சிதம்பரம் சின்னமார்க்கெட், வடக்கு மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. மூதாட்டி ஒருவரும், இளம்பெண் ஒருவரும் தீயில் சிக்கி இறந்துள்ளனர். ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் இறந்துள்ளன.

இத் தொடர் தீ விபத்துக்கான காரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இவை பெரும்பாலும் நள்ளிரவில் ஏற்பட்டுள்ளன. இதனால் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் பெரும்பாலான கிராமங்களில் இளைஞர்களும், காலனி மக்களும் இரவில் தூங்காமல் கண்விழித்து காவல் காத்து வருகின்றனர்.

இத் தொடர் தீ விபத்து குறித்து சட்டப்பேரவையில் எம்எல்ஏ ஏ.அருண்மொழித்தேவன் செவ்வாய்க்கிழமை விளக்கம் கோரினார். காரணம் குறித்து விசாரிக்க போலீஸôருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி பதில் அளித்தார்.

""தனி போலீஸ் படை அமைத்து இந்தத் தொடர் தீ விபத்துக்கான காரணங்களை ஆராய வேண்டும்.

மேலும் இதற்கு காரணமானவர்கள் மீது வழக்குப் பதிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியும்'' என மாவட்ட காவல்துறைக்கு பாஜக செயற்குழு உறுப்பினர் வே.ராஜரத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

""விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராஜீவ்காந்தி நினைவு மறுவாழ்வு திட்டத்தின் கீழ் தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும், நிவாரணத் தொகையை ரூ. 2 ஆயிரத்தில் இருந்து ரூ. 5 ஆயிரமாக உயர்த்த வேண்டும்'' என காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ துரை.ரவிக்குமார் முதல்வரிடம் நேரில் கடிதம் அளித்துள்ளார்.

Tags: கா.ம.குடி தீ விபத்து

Share this